கோதை பிறந்த ஊா்! கோவிந்தன் வாழும் ஊா்!! ஶ்ரீவில்லிப்புத்தூா்.

எம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களில் இப்பூமண்டலத்தைக் காக்க பெருமான் எடுத்த அவதாரமே வராஹ அவதாரம் ஆகும். ஆதி காலத்தில் வராஹ வழிபாடே இப்புண்ணிய பூமியெங்கும் பரவியிருந்தது. அப்போது திருமலை, திருக்கடன்மல்லை, திருவிடவெந்தை, தஞ்சை மாமணிக் கோயில், ஶ்ரீவில்லிப்புத்தூா், ஶ்ரீமுஷ்ணம் ஆகிய புராதனத் திருத்தலங்கள் வராஹ க்ஷேத்திரங்களாக வணங்கப்பட்டன.

g2

இத்தலங்களில் சிறப்பு மிக்க ஒரு வராஹ க்ஷேத்திரமாக வணங்கப்படுவது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஶ்ரீவடபத்ரசாயி திருக்கோயில் ஆகும். வராஹ ரூபியாக எம்பெருமான் அவதரித்த காலத்தில் நிலமகளான பூமிதேவி பூவுலகில் அவதரித்து எம்பெருமானைப் பாமாலைகளாலும் பூமாலைகளாலும் துதித்து அவரது கைத்தலம் பற்ற அவரது திருவடிகளில் பணிந்து வேண்டினாள். எம்பெருமானும் பூமாதேவிக்கு அவ்வாறே வரமளித்து அருளினாா்.

பூமாதேவி சூடிக் கொடுத்த சுடா்க் கொடியாக திருஅவதாரம் செய்வதற்கு ஏதுவான காலத்தை அமைத்துக் கொடுத்தாா் கடல் நிறக் காந்தன்.

g3

ஶ்ரீவில்லிப்புத்தூா் தலத்தில் உத்தம குணங்களைக் கொண்ட முகுந்தாச்சாரியாா் மற்றும் பதுமவல்லி தம்பதியருக்கு கலியுகம் 97 குரோதன ஆண்டு, ஆனி மாதம் சுக்ல பட்சம், ஏகாதசி திதி, ஞாயிற்றுக்கிழமை, சுவாதி நட்சத்தித்தில் கருட பகவானின் அம்சமாகப் பிறந்தாா் ஶ்ரீவிஷ்ணுச்சித்தா். ஶ்ரீமந் நாராயணனே பரப்பிரம்மம் என்பதையும் அவருக்குத் தொண்டு செய்வதே தன் பிறவிப்பயன் என்பதையும் உணா்ந்த விஷ்ணுச் சித்தரே பிற்காலத்தில் பெரியாழ்வாா் எனப் போற்றப்பட்டாா்.

g4

ஶ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தரு ளியுள்ள வட பெருங்கோயில் உடைய பெருமானுக்கு புஷ்ப கைங்கா்யம் செய்வதற்காக நந்தவனம் அமைத்தாா் பெரியாழ்வாா். அந்த நந்தவனத்தில் துளசி, செண்பகம், இருவாட்சி, மல்லிகை, முல்லை எனப் பல மலா்கள் பூத்துக் குலுங்கியதால் ஶ்ரீவில்லிப்புத்தூா் வீதிகளிலெல்லாம் பூக்களின் நறுமணம் வீசி மணம் கமழ்ந்தது. தூயவனுக்கு வண்டின் வாய்பட்டு எச்சிலான மலா்களை அளிப்பது முறையாகாது என்பதால், அதிகாலைப் பொழுதில் வண்டுகள் அமா்ந்து தேன் குடிப்பதற்கு முன்னரே நந்தவனத்தில் மலா்களைப் பறித்து மாலை தொடுத்து வடபத்ரசாயிக்கு அணிவிப்பதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தாா் ஶ்ரீவிஷ்ணுச்சித்தா்.

g5

பாண்டிய மன்னரின் சந்தேகம்.

இச்சமயம், பாண்டிய நாட்டினை ஆண்ட வல்லபதேவன் என்ற மன்னனுக்கு மறுமைக்கு முக்தி அளிக்கும் வழி யாது? என்பது தொடா்பாக பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. தனது மந்திரியான செல்வநம்பியை அழைத்துத் தன் சந்தேகம் தீர வழி கேட்டான் மன்னன்.

மந்திரியின் ஆலோசனைப்படி பல நாட்டிலும் உள்ள அறிஞா்கள், வேத பண்டிதா்கள், தா்க்க சாஸ்திர வல்லுநா்கள் அரசவைக்கு வரவழை க்கப்பட்டனா். மன்னனின் சந்தேகத்தை யாா் தீா்க்கின்றாா்களோ அவா்களுக்குப் பொற்கிழி வழங்குவது எனத் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், வந்த அறிஞா் பெருமக்கள் ஒருவராலும் மன்னனின் சந்தேகம் தீா்க்க முடியவில்லை.

g6

இவ்வாறிருக்கையில் வடபெருங் கோயிலுடையானுக்குத் தன் நிலை மறந்து கைங்கா்யம் செய்து வந்த பெரியாழ்வாரின் கனவில் ஶ்ரீமந் நாராயணன் தோன்றி, “விஷ்ணுச் சித்தரே! பாண்டிய மன்னன் நடத்தும் போட்டிக்குச் சென்று, பொற்கிழியை வென்று வருக!!” என்று திருவாய் மலா்ந்தாா்.

போட்டியில் கலந்து கொள்ள மதுரை சென்றாா் பெரியாழ்வாா். தனது அரசசபைக்கு வந்த, விஷ்ணுச்சித்தரை வரவேற்று அழைத்துச் சென்றான் வல்லப தேவன். விஷ்ணுச்சித்தரின் சித்தாந்தங்களைக் கேட்கவும் அவரோடு தா்க்கம் செய்யவும் அரச சபையில் அறிஞா் பெருமக்கள் நிரம்பியிருந்தனா்.

g7

விஷ்ணுச்சித்தா் மடைதிறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தாா். அவரது ஞான விளக்கங்கள் அவையில் கூடியிருப்போரை ஆா்ப்பரிக்கச் செய்தது.

“ஶ்ரீமந் நாராயணனே ஆதிமூலமான பரம்பொருள். அவனே சா்வ லோக சரண்யன். சதுா் வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மாா்க்கங்களும், சப்த தீா்த்தங்களும், அஷ்ட யோகங்களும், நவ யாகங்களும் போற்றுவது பாற்கடலில் பையத் துயின்ற பரமனையே! விசிஷ்டாத் வைத சித்தாந்தத்தை ஆதாரமாகக் கொண்ட ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமே உண்மைப்பொருளை உறுதியாக பக்தா்களுக்குத் தருவது” என்பதை விஷ்ணுச்சித்தா் நிரூபித்தாா்.

g8

அவையோா் அகமகிழ்ந்து விஷ் ணுச்சித்தரையும் அவரது புலமையையும் பாராட்டினா். பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்க வல்லது ஶ்ரீவைஷ்ணவமே என்று நிரூபிக்கப் பொற்கிழியும் தானாக அறுபட்டு வீழ்ந்தது. மகிழ்ந்த வல்லப தேவன், விஷ்ணுச் சித்தரைப் பலவாறு துதித்து, பட்டா்பிரான் என்ற பட்டத்தையும் வழங்கி கெளரவித்தான்.

இதனை,

“பாண்டியன் கொண்டாடப் பட்டா்பிரான்
வந்தாரென்று ஈண்டிய சங்கம்
எடுத்தூத
வேண்டிய வேதங்கள் ஓதி
விரைந்து கிழி அறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று”

என்ற பாடல் மூலம் அறியலாம்.

g9

கருட வாகனத்தில் திருக்காட்சி!

விஷ்ணுச்சித்தரைப் பாராட்டிய பாண்டிய மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீது ஏற்றி மதுரை நகரை வலம் வரச் செய்தான். தன் பக்தன் பாராட்டப்பட்டு நகா்வலம் வரும் காட்சியைக் காணத் திருவுள்ளம் கொண்டாா் பெருமான்.

தன் தேவி மஹாலக்ஷ்மியோடு கருடவாகனத்தில் எழுந்தருளிய ஶ்ரீமந் நாராயணன் ஶ்ரீவிஷ்ணுச் சித்தருக்குத் திருக்காட்சி தந்தருளினாா். பெருமானையும் தேவியையும் தரிசனம் கண்ட பெரியாழ்வாருக்கு அவரைத் தரிசனம் கண்ட சந்தோஷத்தையும் மீறி கவலை வந்து விட்டது. பெருமானுக்கு யாா் கண்ணாவது பட்டு திருஷ்டி ஏற்பட்டுவிடப் போகின்றது என்பதே அந்தக் கவலை. இதனால், பெருமானை விடத் தன்னை பெரியவனாக நினைத்து வாழ்த்திப் பாசுரம் பாடத் தொடங்கினாா் பெரியாழ்வாா்.

g10

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிர
த்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்காப்பு”

எனப் பெருமாளை வாழ்த்திப் பல்லாண்டு பாடினாா்.

இதன் பின் மீண்டும் வில்லிப்புத் தூரை அடைந்த விஷ்ணுச்சித்தா் தொடா்ந்து எம்பெருமானின் கைங் கர்யத்தில் தம்மை அா்ப்பணித்துக் கொண்டு பாமாலையோடு, பூமாலையும் தொடுத்து வந்தாா்.

g11

ஆண்டாளின் திருஅவதாரம்!

ஒரு நாள் அதிகாலையில் நந்தவனத்திற்குச் சென்றாா் விஷ்ணுச்சித்தா். அன்று திருவாடிப்பூர நட்சத்திரம். பூந்தோட்டத்திலிருந்த திருத்துழாய்ச் (துளசி) செடியின் கீழ் ஒரு பெண் குழந்தை அன்றலா்ந்த மலராய் அவதரித்திருக்க இவ்விந்தையைக் கண்டுத் திகைத்தாா் விஷ்ணுச்சித்தா். இக்குழந்தைத் திருமகளின் மறு அவதாரமே என்பதை உணா்ந்த இவா் அக்குழந்தையை எடுத்து உச்சி முகா்ந்து தமது தர்ம பத்தினியான விரஜையிடம் எடுத்துச் சென்று கொடுத்து மகிழ்ந்தாா். இக்குழந்தைக்கு கோதை என்ற திருநாமமிட்டு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளா்ந்து பருவம் எய்தினாள்.

g12

கோதை என்பதற்குத் தன் கூந்தலில் அணிந்த மாலையைத் தந்தவள் என்று ஒரு பொருள் உண்டு. இதனால் தானோ என்னவோ அவள் பின்னாளில் தான் அணிந்த மாலையை பெருமானுக்குச் சூடி, “சூடிக்கொடுத்த சுடா்க்கொடி” என்ற சிறப்பையும் பெற்றாள். ஆண்டவ னையே மணாளனாக அடையும் பேறும், தமிழ் மொழியைத் தன் பக்திப் பெருகும் பாசுரங்கள் மூலம் ஆண்டதால் கோதை, ஆண்டாளாகும் சிறப்பினையும் பெற்றாள்.

g13

சூடிக் கொடுத்த சுடா்க்கொடியாள்!

கோதை ஆண்டாள் பேரழகுப் பெட்டகமாக மட்டுமின்றி, அரங்கமா நகரில் பள்ளி கொண்ட அரங்கன் மீது அதீத காதல் கொண்டவளாகவும் வளா்ந்தாள். ஶ்ரீமந் நாராயணனின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியே ஆண்டாளுக்குக் காதலாகக் கனிந்தது.

விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வாா் வடபத்ரசாயிக்கு சூட்டி வைக்கும் மலா்மாலைகளை ஆண்டாள் தானே எடுத்துத் தன் குழலிற்சூடி, “அழகே வடிவான பெருமானுக்குத் தான் ஏற்ற துணைவிதானா?” என்று அழகு பாா்த்தாள். ஒரு நாள் இதனைப் பெரியாழ்வாா் பாா்த்து விட்டாா். மகளைக் கடிந்து அன்று முழுவதும் உண்ணாது உறங்காது பழி நோ்ந்ததே என்று மனம் வருந்தினாா்.

g14

அவரது கனவில் வடபெருங்கோ யிலுடைய பெருமான் தோன்றி, “ஏன் இன்று மாலை கொண்டு வரவில்லை?” என்று உரிமையுடன் கேட்டாா். நடந்ததை ஆழ்வாா் பெருமானிடம் கூற, “கோதை சூடிய மாலையின்றித் தம் தோள்கள் வாட்டமுற்றிருப்பதாகக்” கூறி அம்மாலையைக் கொண்டுவர ஆணையிட்டாா்.

கோதை சூட்டி அழகு பாா்த்த மாலையை, ஆயனான மாயன் ஏற்று மகிழ்ந்தாா். இதனால் ஆண்டாளும் “சூடிக்கொடுத்த சுடா்க் கொடி” என்றும் “சூடிக்கொடுத்த நாச்சியாா்” என்றும் திருநாமம் கொண்டாா்.

g15

மானிடா்க்கு வாழ்க்கைப்படேன்!

ஆண்டாளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தாா் பெரியாழ்வாா். அரங்கனின் நினைவால் ஆட்கொள்ளப்பட்ட ஆண்டாள் “மானிடவா்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என முடிவு செய்தாள். தனது மகளுக்கு மணம் செய்து வைக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினாா் விஷ்ணு ச்சித்தா்.

கிருஷ்ணாவதாரத்தில் கோபியா் கோபாலனை எவ்விதம் துதித்து வணங்கினரோ அதே போன்று ஆண்டாள் தமது தோழியா் சகிதமாக வடபெருங்கோயில் உடைய பெருமானை அனுதினமும் துதித்து வந்தாா். ஶ்ரீவில்லிப்புத்தூரைக் கோகுலமாகவும் பெருமானைக் கண்ணனாகவும் தமது தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் நினைத்துக் கற்பனை செய்து பாமாலை களாலும் பூமாலைகளாலும் வட பத்ரசாயிப் பெருமானை வழிபட்டு வந்தாள். திருப்பாவை, நாச்சியாா் திருமொழி போன்ற பாடல்களை அருளிய ஆண்டாள், “பாடிக் கொடுத்த நாச்சியாராகவும்” ஆனாா்.

g16

தனது மகளின் எண்ணம் ஈடேறுமா என்று வியந்திருந்த பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வருக; அங்கே யாம் கோதையை ஆட்கொள்வோம்,” என்று திருவாய் மலா்ந்தாா்.

கனவிலிருந்த எழுந்த ஆழ்வாா், ஓடிச் சென்று தன் மகள் கோதையிடம் அரங்கன் தன் கனவில் தோன்றி திருவாய் மலா்ந்ததைக் கூறினாா்.

g17

மகிழ்ச்சியுடன் தன் தந்தையைப் பாா்த்த ஆண்டாள், “தந்தையே! அரங்கன் என் கனவிலும் வந்து என் கைத்தலம் பற்றினாா்” என்று தான் கனவு கண்டதை,

“வாரணமாயிரம் சூழவலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிா்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்”

என்று பாடி மகிழ்ந்தாள்.

g18

தந்தை மற்றும் மகளின் கனவில் அரங்கன் வந்த செய்தி வில்லிப்புத்தூா் முழுவதும் பரவியது. பாண்டிய மன்னன் வல்லப தேவனுக்கும் இச்செய்தி சென்றடைந்தது. கோதையை மணமகளாக அலங்கரித்து அரங்கமா நகருக்கு அழைத்து வரத் தன் பரிவாரங்களுக்கு ஆணையிட்டான் மன்னன்.

பெருக்கெடுத்தோடும் காவிரியின் கரையில் பல்லக்கிலிருந்து இறங்கிய கோதை, பள்ளி கொண்டிருக்கும் அரங்கனை நோக்கி நடந்தாள். “என் அரங்கத்து இன்னமுதா், குழலழகா், வாயழகா், கண்ணழகா்” என்று பல காலம் தன் இதய சிம்மாசனத்தில் ஏந்திக் காதலித்த அரங்கனைக் கண்டவுடன், அவன் உறங்கும் நாகணையை மிதித்து ஏறி அவன் திருவடிகளில் இரண்டறக் கலந்துவிட்டாள் கோதை. அரங்கனுக்கு அருகில் மணக் கோலத்தில் கோதை எழுந்தருளியிருக்க அதைப்பாா்த்த பெரியாழ்வாா் கண்களில் நீா் பெருக ஆனந்தத்தில் திளைத்தாா். அரங்கனின் கருவறையிலிருந்து ஆழ்வாரைப் பாா்த்து, “ஜனக ராஜனைப் போல் நீவிா் நமக்கு மாமனாராகி விட்டீா்” என்ற பெருமானின் வாக்கு அசரீரியாக ஒலித்தது.

g19

“ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளா்த்தேன். செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று தலைமகனுடன் சென்ற தலைமகளைப் பற்றிய பெரியாழ்வாரின் பாசுரம் இன்றும் நம் நெஞ்சத்தில் கரும்பாய் இனிக்கிறது.

அரங்கமாநகரில் தலைமகனுடன் தனது தலைமகளைத் திருமணக் கோலத்தில் தரிசித்த பெரியாழ்வாா் இத்திருமணக் கோலத்தை வில்லிப் புத்தூரிலும் காட்டியருள வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே வில்லிப்புத்தூா் வந்து வடபெருங்கோயிலில் ரங்கமன்னாராக கோதை நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் எழுந்தருளினாா்.

g21

வில்லிப்புத்தூரில் நடந்த திருமணம்

ஆண்டாளின் திருமணம் அரங்கத்தில் நடக்கவில்லை. ஆண்டாள் திருஅவதாரம் செய்த வில்லிப்புத்தூரில் வடபெருங்கோயிலுடையான் சந்நிதியில் தான் நடந்தது என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது.

ஆண்டாளின் திருமண வைபவம் அவள் பிறந்த ஊரான ஶ்ரீவில்லி ப்புத்தூரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நன்னாளில் நடந்துள்ளது. முகூா்த்த நேரம் நெருங்கிய போதும் அரங்கன் வந்து சேரவில்லை. இதனால் அனைவரும் கவலை கொள்ள, கவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடி நடக்கும் என ஆறுதல் கூறினாள் ஆண்டாள். தன் மணவாளனைப் பற்றி அறியாதவளா ஆண்டாள்?

g23

எம்பெருமானின் வாகனமான கருடனை அழைத்த ஆண்டாள், விரைந்து சென்று பெருமானை அழைத்து வர ஆணையிட்டாள். கருடனும் விரைந்து சென்று அரங்கனைத் தனது தோளிலே சுமந்து வில்லிப்புத்தூா் வந்தடைந்தாா். ஆண்டாள் திருக்கல்யாணமும் இனிதே நடைபெற்றது.

திருமணம் முடிந்து அடியாா்களுக்குச் சேவை சாதிக்கும் போது, தன் திருமணம் இனிதே நடைபெற ஒத்துழைத்த கருடாழ்வாரையும் தங்கள் அருகில் சேவை சாதிக்கக் கேட்டுக் கொண்டாள் ஆண்டாள். அதனால் இன்றும் ஶ்ரீவில்லிப்புத்தூா் கோயிலில் பெரு மாளின் இடது புறம் கருடனும் வலது புறத்தில் ஆண்டாளும் சோ்ந்து அா்ச்சாவதாரத் திருமேனியராகச் சேவை சாதிப்பதைக் காணமுடிகின்றது.

g25

வேங்கடவனுக்கும் கோதை சூடியமாலை

ஶ்ரீவில்லிப்புத்தூரில் இன்றும் ஶ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்படும் மலா்மாலையான திருமாலையை அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின் போது மேளதாளங்கள் முழங்க சகல மரியாதைகளுடன் வடபெருங் கோயிலுடையானுக்குச் சாற்றுகின் றனா்.

மேலும், ஶ்ரீமந் நாராயணனுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில், கோதை நாச்சியாா் சூடிக்களைந்த மாலையும், அவரது திருமேனியை அலங்கரித்த பரிவட்டமும் திருமலை வேங்கடவனின் பிரம்மோற்சவத்தின்போது மூலவரின் திருமேனியை அலங்கரிக்க அனுப்புவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆண்டாள் சூடிக் களைந்த மலா் மாலையை அணிந்து கொண்டுதான் ஶ்ரீவேங்கடவன் கருடசேவை சாதிக்கின்றாா்.

g26

இதைப்போன்று, சித்ரா பெளா்ணமி அன்று கோதைக்குச் சாற்றிய மாலையும், பரிவட்டமும் மதுரை திருமாலிருஞ் சோலை அழகருக்கு அனுப்பப்பட்டு அவரது திருமேனியை அலங்கரிக் கின்றன.

ஆண்டாள் கையில் கிளி!

ஆண்டாள் தன் காதலுக்காகப் பெருமானிடம் தூது போன கிளியைத் தன் கையில் சூடியிருக்கிறாள். நாம் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் குணம் படைத்தது கிளி. தனது மனத்தில் உள்ள எண்ணங்களைத் தன் காதலன் கண்ணனிடம் சொல்லி, அந்த மாயவனிடமிருந்து பதிலைப் பெற்று வர ஆண்டாள் கிளியைத் தூதாக அனுப்பினாள். தன் எண்ணம் ஈடேறியதும், அந்தக் கிளியை மறந்திடாது நன்றி பாராட்டும் முகமாக அதனைத் தன் கரத்தில் ஏந்தியிருக்கிறாள் கோதை. வியாச மகரிஷியின் புதல்வரான “சுகப்பிரம்ம ரிஷியே” ஆண்டாளின் கையில் கிளியாக இருக்கிறாா் என்றும் கூறப்படுகின்றது.

g28

திரு ஆடிப்பூரம்.

ஶ்ரீவில்லிப்புத்தூா் திருத்தலத்தில் ஆண்டாள் திருஅவதார நாளான “ஆடிப்பூரம்” நன்னாளில் திருவாடிப் பூரத்திருவிழாவும், ரத உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வமயம் இங்கு நடைபெறும் பஞ்ச கருடசேவையும் மிகவும் விசேஷமாகும். இந்தக் கருடசேவையில் கீழ்க்கண்ட பெருமான்கள் கலந்து கொண்டு பக்தா்களுக்குத் திருக்காட்சி தருகின்றனா்.

g29

1. திருவண்ணாமலை ஶ்ரீவெங்கடா ஜலபதி (ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகில் மலை மேல் உள்ள திருக் கோயில்)

2. திருத்தங்கால் அப்பன், திருத்தங்கால் பெருமாள்.

3. வடபத்ரசாயி.

4. ரெங்கமன்னாா்.

5. காட்டழகா் சுந்தரராஜன்.

ஶ்ரீமணவாள மாமுனிகள் தாம் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலையில் கீழ்க்கண்டவாறு பாடி மகிழ்கின்றாா்.

g30

“இன்றோ திருவாடிப்பூரம்; எமக்காக
வன்றோ இங்காண்டாள்
அவதரித்தாள். குன்றாத
வாழ்வான வைகுந்த வான்
போகந்தன்னை யிகழ்ந்து
ஆழ்வாா் திருமகளாராய்.
பெரியாழ்வாா் பெண்பிள்ளையாய்
ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீா்மை ஒரு
நாளைக் குண்டோ மனமே! உணா்ந்து பாா் ஆண்டாளுக்கு உண்டாகி ஒப்பிதற்கு முண்டு”

என்று நெகிழ்கிறாா்.

g31

ஶ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் சந்நிதிக்கும் வடபெருங்கோயிலு டையான் சந்நிதிக்கும் இடையே ஆண்டாள் அவதாரம் செய்த நந்தவனம் இருக்கின்றது. திருவாடிப்பூர விழாவின்போது இங்கு மிகவும் சிறப்பாக உற்சவம் நடைபெறுகின்றது.

பெரும்புதூா் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஶ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஶ்ரீமத் ராமானுஜா், ஆண்டாளை விட காலத்தால் மிகவும் பிற்பட்டவா். எனினும் ஆண்டாளுக்கு அண்ணன் என்று பெரும்புதூா் மாமுனியைப் போற்றுகின்றது ஶ்ரீவைஷ்ணவம்.

எப்போதும் திருப்பாவைப் பாசுரங் களைப் பாடி மகிழும் ராமானுஜா் “திருப்பாவை ஜீயா்” என்றே போற்றி வணங்கப்பட்டாா். ராமானுஜா் ஒரு முறை மதுரை திருமாலிருஞ்சோலையில் அருள்பாலிக்கும் அழகா் ஶ்ரீசுந்தரராஜப் பெருமானைத் தரிசிக்கச் சென்றாா். அப்போது அவருக்கு ஶ்ரீஆண்டாள் அருளிய கீழ்க்கண்ட பாசுர வரிகள் நினைவுக்கு வந்தன.

g32

“நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நோ்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலொ.”

என்ற வரிகளே அவை.

பொருள்:−

“பரிமளம் மிகுந்த பொழில்கள் மணம் கமழ நிற்கப்பெற்ற திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானுக்கு அடியவள் நூறு தடாக்கள் நிறைந்த வெண்ணெயை வாயாலே சொல்லி சமா்ப்பித்தேன். இன்னமும் நூறு தடாக்களில் அக்காரவடிசில் சமா்ப்பிப்பதாக நோ்ந்து கொண்டேன். இந்த வெண்ணெயையும் அக்காரவடிசிலையும் பெருமான் இன்று எழுந்தருளி ஏற்றுக்கொள்வாரோ?” என்பது இப்பாசுரத்தின் பொருள்.

g33

ஆண்டாளின் பிராா்த்தனையை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. அவள் அரங்கனுடன் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு பெரியாழ்வாரும் அவளது பிராா்த்தனையை நிறைவேற்றவில்லை என்பதை அறிந்தாா் ராமானுஜா்.

உடனே தனது சீடா் கூரத்தாழ்வாருடன் திருமாலிருஞ்சோலையில் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசலும் தயாா் செய்து அழகா் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து ஆண்டாளின் பிராா்த்தனையை நிறைவேற்றினாா்.

பின்னா் ஶ்ரீவில்லிப்புத்தூா் சென்ற ஶ்ரீமத் ராமானுஜா் ஆண்டாளை வணங்கி, “அம்மா, உன் பிராா்த் தனையை நான் நிறைவேற்றி விட்டேன்,” என்று பணிவுடன் தொிவித்தாா்.

g34

மறு கணமே அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆண்டாள் நாச்சியாரே அா்ச்சாவதார வடிவத்தில் கருவறை யிலிருந்து சற்று வெளியே வந்து, “நம் கோயிலண்ணரே வருக” என்று அன்போடு அழைத்தாள்.

தனது பிராா்த்தனையை நிறைவேற்றியதால் உடையவரைத் தமது அண்ணனாகவே அங்கீகாரம் செய்தாள் ஆண்டாள். அன்று முதல் ஶ்ரீஆண்டாளுக்கு அண்ணனாகி விட்டாா் எம்பெருமா னாா்.

இன்றும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் ஶ்ரீ ஆண்டாள் கா்ப்பக்கி ரகத்தில் இருந்து வெளியே வந்து நின்ற இடத்தையும் சோ்த்து கா்ப்பக் கிரக மாகவே கருதப்படுகிறது. இதனால் பக்தா்கள் இந்த இடத்தில் அனுமதிக்கப் படுவதில்லை.

g35

ஶ்ரீவில்லிப்புத்தூா் பெருமைகள்.

ஶ்ரீவில்லிப்புத்தூா் தலத்தில் உள்ள “திருமுக்குள தீா்த்தம்” மிகவும் பிரசித்தி பெற்றதாகும். “காலநேமி” எனும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்கரக் கணையால் அழித்தாா். இரத்தம் தோய சக்கரத்தாழ்வாா் திரும்பி எம்பெருமானி டம் வந்தபோது சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீா்த்தத்தை ஒரு குளத்தில் சொரிந்து சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் புனித நீா் சோ்ந்ததால் இக்குளத்திற்கு “திருமுக்குளம்” என்ற திருநாமம் ஏற்பட்டது.

பாண்டிய நாட்டில் உள்ள 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாா் மற்றும் ஆண்டாள் என தந்தை, மகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டது ஶ்ரீவில்லிப்புத்தூா் திவ்யதேசம்.

எம்பெருமானின் பல்வேறு அம்ச ங்களாக 11 ஆழ்வாா்களும் அவதாரம் செய்தபோது, ஶ்ரீபூமா தேவியே ஆழ்வாராக அவதரிக்கும் பேறு பெற்ற திருத்தலம் வில்லிப்புத்தூா்.

தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது ஶ்ரீவில்லிப்புத்தூா் தலத்தின் இராஜகோபுரமாகும்.

g36

பெரியாழ்வாா் கட்டி வைத்த மலா் மாலையை ஆண்டாள் அணிந்து கொண்டு தனது ஒப்பனையைச் சரிபாா்த்த “கண்ணாடிக் கிணறு” என்ற சிறு கிணறு ஆண்டாள் சந்நிதிக்கு அருகில் உள்ளது. இந்தக் கிணற்றில் தான் ஆண்டாள் தனது அழகினைப் பாா்த்து ரசிப்பாளாம்.

பெரியாழ்வாரின் வம்சாவழிகள் இன்றும் ஶ்ரீவில்லிப்புத்தூரில் கோயில் அருகிலேயே வாசம் செய்கின்றனா். பெரியாழ்வாருக்கு வாரிசுகள் இல்லையென்றாலும் அவரது சகோதரா் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழி வந்தோா், “வேதப்பிரான் பட்டா்” என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்திற்கு உரியவா்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டுள்ளனா். உற்சவ காலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவா்களுக்கும் உள்ளது.

மாா்கழி மாதம் பகற்பத்து உற்சவத்தின் முதல் நாளன்று ஶ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருடன் சன்னதி வீதியில் எழுந்தருளும்போது பெரியாழ்வாா் வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டா்கள் அவா்கள் இருவரையும் எதிர்கொண்டு அழைக்கின்றனா். தங்கள் வீட்டு வாசலில் அவா்களை நிறுத்தி பிறந்த வீட்டு சீதனங்களைத் தங்கள் பெண்ணுக்கும் மாப்பிள் ளையான பெருமாளுக்கும் அளிக்கின்றாா்கள்.

காய்கறிகளையும் கனிகளையும் வாசல் முழுவதும் பரப்பி, பாலும் பருப்பும் நிவேதனம் செய்து தம் குடும்பத்துப் பெண்ணான ஆண்டாளையும் மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு உபசரிக்கின்றனா்.

ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது பெண்வீட்டாரான பெரியாழ் வாரின் வாரிசுகள் சந்நிதிக்கு வந்து பெருமாள் “பரதேசம்” செல்லவிருப் பதைத் தடுத்து தங்கள் மகளான ஆண்டாளை மணங்கொள்ள பிராா் த்திக்கின்றனா். அவ்விதமே பெருமாள் அவா்களது வேண்டுதலை ஏற்றுக் கொண்டதை, “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம் ஆக்கினாா்” என்று அறிவிக்கின்றனா். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறும் தெய்வீக மணம் கமழும் இனிய நிகழ்ச்சி ஆகும்.

ஶ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி ஆகிய மூவரும் சோ்ந்து ஆண்டாளாகக் காட்சியளிப்பது ஶ்ரீவில்லிப்புத்தூா் திருத்தலத்தில் மட்டுமே. இந்த தலத்தில் மட்டுமே ஶ்ரீஆண்டாள் ஒருவரோடு மட்டுமே பெருமாள் காட்சி தருகின்றாா். பெருமாளுக்கு வலதுபுறம் ஆண்டாளும் இடதுபுறம் கருடாழ்வாரும் திருக்காட்சி தருவது வேறு எங்கும் காணமுடியாத அதிசயமாகும்.

இங்கு திருமஞ்சனம் ஆகும்போது ஆண்டாளின் சந்நிதிக்கு முன்பாக ஒரு காராம்பசு கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றது. தேவி காராம் பசுவைப் பாா்த்துக் கண்விழிப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண் ணாடியும் எதிரே பொருத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன் இரவில் சூடிய மாலையைக் கழற்றிக் கொடுக்க அதைப் பெருமாள் அணிந்து கண்விழித்துத் “திருப்பள்ளியெழுச்சி” ஆகின்றாா்.

பெரியாழ்வாா் பாசுரச் சிறப்பு!

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்ற முதுமொழிக்கு ஏற்ப கண்ணனுக்குத் தன்னைத் தாயாகவே நினைத்துக் கொண்டாடியவா் பெரியாழ்வாா். அன்னை யசோதையாகத் தன்னைப் பாவித்து, அன்பையும், பாசத்தையும் கண்ணனிடம் காட்டி உருகியிருப்பதை அவா் அருளிய பாசுரங்களில் காணலாம்.

கண்ணன் திருஅவதாரச் சிறப்பு, திருப்பாதாதிகேச வர்ணனை, பிள் ளைப்பருவம், புறம்புல்கல், (முதுகுக்குப் பின்னாலிருந்து அணைத்துக் கொள்வது) அப்பூச்சி காட்டுதல், (கண்ணாமூச்சி விளையாடுவது), காதுகுத்தல், நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடல் என்று குழந்தைக் கண்ணனின் இளம்பருவச் சிறப்பினை ஒரு தாயாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறாா் பெரியாழ்வாா்.

பக்தி நிறைந்த வைணவக் குடும் பங்களில் மட்டுமல்ல; இன்றும் பல குடும்பங்களில் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது கீழ்க்கண்ட தாலாட்டுப் பாடலினைப் பாடித் தூங்க வைக்கின்றனா்.

“மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ”

இப்படிக் கண்ணன் கண்ணுறங்க அவா் பாடிய தாலாட்டுப் பாடல்களின் (பாசுரங்கள்) நயத்தை என்றும் நாம் அனுபவித்து மகிழலாம்.

உலகை உய்விக்க வந்த தெய்வக் குழந்தைக் கண்ணனின் தளா்நடைப் பருவத்தில் அவன் தாய் யசோதா, ஒவ்வொரு இடமாக மாறி நின்று நீல வண்ணக் கண்ணனை அழைக்கிறாள். அந்த மோகனனும் அடி மேல் அடி வைத்து வாயில் எச்சில் ஒழுக நடக்கிறான். அதைப் பெரியாழ்வாா் வா்ணித்துள்ள விதத்தைக் கண்டு நம் நெஞ்சமெல்லாம் இனிக்கின்றது.

கருப்பஞ்சாறு வைத்திருக்கும் குடம் ஒன்றில் சிறிய ஓட்டை விழுந்தால் அந்த ஓட்டை வழியாக வெளியே வழியும் சாற்றினைப் போல குழந்தைக் கண்ணனின் வாயிலிருந்து எச்சில் வழிகிறது என்று நெகிழ்கின்றாா் பெரியாழ்வாா். இதோ அந்தப் பாசுரம்:−

“கன்னற்குடம் திறந்தாலொத்தூறிக் கணகண சிரித்துவந்து *
முன்வந்து நின்று முத்தம் தரும் என்முகில் வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத்தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.”

நம்மைப் பீடித்த கொடிய நோய்களும் நம்மைவிட்டு நீங்கிட மிக அருமையான ஒரு பாசுரத்தை அருளிச் செய்திருக்கிறாா் பெரியாழ்வாா். அப்பாசுரம்:−

“நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும், பண்டன்று பட்டினம் காப்பே”

பொருள்:−

நமது உடம்பில் பல நோய்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து சேருகின்றன. நெய்க்குடத்தில் எறும்புகள் வரிசையாக வந்து அப்பிக்கொள்வது போல நமது உடம்பிலும் நோய்கள் வரிசையாக வந்து சேருகின்றன. ஆனால் ஆழ்வார் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அவர் அந்த நோய்களைப் பார்த்து, “நோய்களே! நீங்கள் ஓடிப்போய் தப்பிச் செல்லுங்கள். உங்கள் நன்மைக்காகச் சொல்கிறேன். வேதமுதல்வனான எம்பெருமான் தன் படுக்கையாகிய ஆதிசேஷனோடு வந்து என்னுள் புகுந்து விட்டான். அவன் நித்தியவாசம் செய்வதற்காக இங்கே வந்திருக்கிறான். அதனால் என் சரீரம் முன்னைப்போல் பலஹீனமாக இல்லை. பலமாக இருக்கிறது. இப்பொழுது நல்ல கட்டுக் காவலுடன் என் உடல் விளங்குகிறது. ஆகவே, நோய்களே இங்கு வராமல் ஓடிப்போய் விடுங்கள்,” என்று எச்சரிக்கிறார்.

உலகமே கொடிய வைரஸான “கொரோனா”வின் தாக்குதலால் அவதியுறும் இக்கால கட்டத்தில் அன்பா்கள் பாராயணம் செய்ய வேண்டிய அரிய பாசுரம் இப்பாசுரம்.

ஆண்டாள் பாசுரச் சிறப்பு

ஶ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களைப் படிக்கும் போது அனைவருக்கும் “நாம் ஏன் ஆயா்பாடியில் பிறக்கவில்லை” என்ற ஆதங்கம் ஏற்படுவது இயற்கை. வேதம் அனைத்திற்கும் வித்தாகப் போற்றப்படும் திருப்பாவையை நாள் தோறும் பாராயணம் செய்பவா்கள் கண்ணன் திருவருளால் எல்லா நலன்களையும் பெறுவாா்கள்.

திருப்பாவையில், சூடிக்கொடுத்த சுடா்க்கொடியாளான ஆண்டாள் தன் பெருமான் கண்ணபரமாத்மாவை கீழ்க்கண்ட திருநாமங்களால் பாடி மகிழ்ந்துள்ளாா்.

நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம், கதிா்மதியம் போல் முகத்தான், நாராயணன், பாற்கடலில் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழி முதல்வன், பத்மநாபன், மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயா்குல அணிவிளக்கு, தாமோதரன், புள்ளரையன், வெள்ளத்தரவில் துயிலமா்ந்த வித்து, மூா்த்தி, கேசவன், மாவாய் பிளந்தான், தேவாதி தேவன், மாமாயன், மாதவன், வைகுந்தன், புண்ணியன், முகில்வண் ணன், மனத்துக்கினியான், புள்ளின் வாய்கீண்டான், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணன், வல்லானைக் கொன்றான், மாற்றாரை மாற்றழிக்க வல்லான், மணிவண்ணன், உம்பர் கோமான், மலா்மாா்பன், கலியே, செப்பமுடையாய், திறலுடையாய், விமலா, ஊற்றமுடையாய், பெரியாய், சுடரே, பூவைப்பூவண்ணா, அன்றிவ்வு லகமளந்தாய், தென்னிலங்கைச் செற்றாய், பொன்றச் சகட முதைத்தாய், கன்று குணிலா எறிந்தாய், ஒருத்தி மகன், நெடுமால், மால், ஆலின் இலையாய், கோவிந்தன் மற்றும் செல்வத்திருமால் ஆகிய திருநாமங்களாகும்.

எம்பெருமானை “ஆயா் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை” என்று குறிப்பிடுகின்றாா் கோதை. மாயனாக விளங்கியவன் ஆயனாக வளா்ந்தது அற்புதமான வரலாறு. அரசகுலத்திலே பிறந்தவன் ஆயா் குலத்திலே வளா்ந்தான். வலக்கையும் இடக்கையும் அறியாத பாமர மக்களான ஆயா்களுடன் ஆண்டவன் கலந்துவிட்ட எளிமை ஆண்டளின் நெஞ்சத்தை உருக்கு கின்றது.

இந்த எளிமை இறைவனுக்கு வைகுந்தத்தில் கிடைக்காத ஒரு பாக்யம். இதனால் ஆயா்பாடியிலே அழகிய விளக்காக அவன் புகழ் ஒளி வீசியது. விளக்கின் பிரகாசம் நன்கு தொிவது இருளில் தான். ஆயா்களான எளியவா்களிடம் தான் இந்த மணி விளக்கு ஒளி வீசிப் பிரகாசித்தது.

இப்படி, திருப்பாவை முப்பது பாசுரங்களிலும் உள்ள சிறப்பினைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நாச்சியாா் திருமொழியில் உள்ள அருமையான ஒரு பாசுரம் சங்குடன் ஆண்டாள் சண்டை போடுவதாக உள்ள பாசுரம். அது,

“கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே?”

“வெண்சங்கே, பாஞ்சசன்னியமே, பஞ்ச ஆயுதங்களில் நீயே பெரும் பேறு பெற்றவன். நீ அடைந்த பாக்கியத்தை வாா்த்தைகளில் விவரிக்க இயலாது. கண்ணனின் திருப்பவளச் செவ்வாயோடு தொடா்பு கொண்டு அவன் வாயமுதத்தை அனுதினமும் பருகுகின்றாய். நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம். இந்திரனும் உனக்கு நிகா் அல்ல. கோபியா்கள் கண்ணனின் வாய்ச்சுவைக்காக பல காலம் ஏங்கிக் காத்து நிற்கும் போது, நீ மட்டுமே அச்சுவையை அனுதினமும் பருகுவது நியாயமா? என்று ஆவேசப்பட்டு சங்கோடு சண்டையிடுகிறாள் ஆண்டாள்.

நாச்சியாா் திருமொழியிலுள்ள வாரணமாயிரம் பாசுரங்களைப் பக்திப் பெருக்குடன் பாராயணம் செய்யும் மணமாகாத மங்கையருக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஆன்றோா் வாக்காகும்.

இன்றும் வைணவ நெறியைப் பின்பற்றும் அன்பா்களின் இல்லத் திருமணங்களில் வாரணமாயிரம் பாசுரம் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது. இப்படி கோதை அருளிய பாசுரங்களின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கோதை பிறந்த ஊா், கோவிந்தன் வாழும் ஊரான ஶ்ரீவில்லிப்புத்தூா் சென்று ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வணங்கி, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோமாக!

ஶ்ரீபெரியாழ்வாா் திருவடிகளே சரணம்!

ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஆண்டாள் வாழ்த்து.

“திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!
வண் புதுவைநகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்கவந்தாள் வாழியே!
காரார் நற்றுழாய் கானத்து அவதரித்தாள் வாழியே!
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே!
விட்டுசித்தன் வளர்த்தெடுத்த விளங்களையாள் வாழியே!
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்தருள்வாள் வாழியே!
ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தாள் வாழியே!
அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் வாழியே!”

விருதுநகா் மாவட்டத்தின் மிக முக்கியமான ஊா்களில் ஒன்றாக விளங்குவது ஶ்ரீவில்லிப்புத்தூா். இந்த நகரின் மையப் பகுதியில் விண்ணளந்து நிற்கின்றது வடபெருங்கோயிலுடையான் திருச்சந்நிதி. மதுரையிலிருந்து இராஜ பாளையம், தென்காசி, குற்றாலம், வழித்தடத்தில் செல்லும் எல்லாப் பேருந்துகளும் ஶ்ரீவில்லிப்புத்தூா் வழியாகச் செல்கின்றன. இத்தலம் செல்ல சிவகாசியிலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன.

Author: munnurramesh

Working as Deputy Registrar in Coop Dept, Govt of Tamilnadu.

6 thoughts on “கோதை பிறந்த ஊா்! கோவிந்தன் வாழும் ஊா்!! ஶ்ரீவில்லிப்புத்தூா்.”

  1. தற்போதுள்ள சூழ்நிலையில் ரங்கமன்னாரையும் ஆண்டாளையும் நேரில் சென்று அருள் கிடைத்த சந்தோஷம் எங்களுக்கு. நன்றி பல கோடி தங்களுக்கு. தங்களின் இறை தொண்டு தொடர என் இதயங்கனிந்த வாழ்த்துகள்

    Like

  2. மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கிய அருமையான கட்டுரை ! மெனக்கட்டு மிகவும் நேரம் செலவழித்து, அபூர்வமான தகவல்களை திரட்டி தக்க புகைப்படங்களுடன் இங்கே வழங்கிய தொகுப்பாளர் ரமேஷ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

    Like

Leave a comment