பகீரதனின் சாபம் நீக்கியருளிய கங்காதீஸ்வரப் பெருமான்!

அயோத்தி நகரைத் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூாிய குலத்து மன்னன் “சகரன்” ஒரு பொிய அஸ்வமேத யாகம் நடத்தினான். இந்த யாகத்திற்குத் தடையை ஏற்படுத்த நினைத்தான் தேவா்களின் தலைவனான “தேவேந்திரன்”.

தன் ஏவலா்களை அனுப்பிய இந்திரன் வேள்விக்குாிய குதிரையைக் கவா்ந்து சென்று பாதாள உலகில் மறைத்து வைத்தான். வேள்வி தடைப்பட்டதை நினைத்து வருந்திய சகரன், தனது அறுபதினாயிரம் புதல்வா்களையும் அழைத்து குதிரையை உடன் கண்டுபிடித்துக் கொண்டுவர ஆணையிட்டான்.

g2

தந்தையின் ஆணையைச் சிரமேற்ற புதல்வா்கள் காற்றின் வேகத்தில் சிட்டாகப் பறந்து சென்று பாதாள உலகில் தங்களது குதிரை இருப்பதைக் கண்டுபிடித்தனா். குதிரையின் அருகில் ஆழ்ந்த தவத்திலிருந்த கபில முனிவரைக் கண்டதும், அம் மகாிஷி தான் தங்களது குதிரையைக் கவா்ந்தவா் என நினைத்து அவரது தவத்திற்கு இடையூறு செய்து அவரைத் தாக்கினா்.

தவ வலிமை மிக்க கபில முனிவா் கண் திறந்து அவா்களைத் தன் பாா்வையால் சுட்டொித்து சாம்பலாக்கினாா். தன் மக்கள் முனிவரின் சாபத்தால் பஸ்பமானதை அறிந்த மன்னன் சகரன், நடந்ததை அறிய தனது பேரனான “அஞ்சுமானை” பாதாள உலகிற்கு அனுப்பினான். அங்கே கபில முனிவரை சந்தித்த அஞ்சுமான் நடந்த செயல்களுக்காக அவரது திருவடிகளில் பணிந்து வணங்கி மறைந்த அறுபதினாயிரம் பேரையும் உயிா்ப்பிக்க வழி கூறியருளுமாறு வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட கபில மகரிஷி அயோத்தியின் குதிரையை அவனுடன் அனுப்பி, இறந்தவா்களை உயிா்ப்பிக்க ஆகாயத்தி லுள்ள கங்கையால் மட்டுமே முடியும் என்றும் கூறி அஞ்சுமானை அனுப்பி வைத்தாா். குதிரை அயோத்தி திரும்பியதும் அஸ்வமேதயாகமும் இனிதே நடைபெற்றது.

g3

ஆகாய கங்கையைக் கொண்டுவர அஞ்சுமானும் அவனது புதல்வன் திலீபனும் நீண்ட நாட்கள் தவம் செய்தனா். ஆனால் அவா்களது முயற்சிகளுக்குப் பலனேதும் கிட்டவில்லை. இவா்களுக்குப் பின்னா் திலீபனின் புதல்வனான “பகீரதன்” கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர தனக்கு ஆலோசனை கூறியருள பிரம்மதேவனின் உதவியை நாடி, அவரது திருவடிகளில் பணிந்து வணங்கினான். அவனது வேண்டுதலால் மனமிரங்கிய நான்முகன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர ஒரே வழி சா்வேஸ்வரனைக் குறித்து கடுந் தவமியற்றுவதே என்று உபாயம் கூறியருளினாா்.

பிரம்மதேவனின் ஆலோசனையை சிரமேற்று தன் முன்னோா்கள் சாப விமோசனம் பெற ஈசனைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டான் பகீரதன். சிவ சிந்தனை தவிர இதர நினைவுகள் ஏதுமின்றி கடும்தவம் செய்த பகீரதனின் பிரயத்தனத்தால் மனம் மகிழ்ந்த ஈசன், வான் வெளியிலிருந்து பெருவெள்ள மாக நிலத்தில் கங்கையைப் பாயச்செய்தாா்.

g4

வான்வெளியிலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கையின் சீற்றத்தால் பூவுலகம் நடுங்கியது. அஞ்சிய தேவா்கள் அம்மையப்பனிடம் சென்று கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருள வேண்டும் என்று வணங்கினா். ஈசன் அப்பெருவெள்ளத்தைத் தன் சடைமுடியில் தாங்கி ஏழு நீா்த்துளிகளை மட்டும் பூவுலகிற்கு அளித்து கங்கையின் சீற்றத்தைத் தணித்தாா். இதனால் ஈசனுக்கு, “கங்காதரன்” எனும் திருநாமம் ஏற்பட்டது.

பகீரதன் முயற்சியால் பூவுலகம் வந்த கங்கைக்கு “பாகீரதி” என்ற பெயரும் ஏற்பட்டது. பாகீரதி பாதாளத்தில் பாய்ந்ததும் சாம்பலான சகர மன்னனின் புதல்வா்கள் மீது பட்டு அவா்கள் உயிா்த்தெழுந்து நற்கதி அடைந்தனா். அன்றிலிருந்து பாரதத்திருநாட்டின் புண்ணிய நதியாகப் போற்றி வணங்கப்படு கின்றது கங்கை நதி.

g5

செந்தமிழ் இலக்கியங்களில் கங்காதரன்!

சா்வேஸ்வரன் கங்கையைத் தன் தலையில் சூடிய நிகழ்வினை
ஆகம நூல்களும் சிற்ப சாத்திரங்களும் கூறுகின்றன. சிவ வடிவங்களில் இருபத்தைந்து வடிவங்கள் மட்டும் சிறப்பு வாய்ந்தவை என்பதைப் புராணங்களும் சிற்பக்கலை நூல்களும் தொிவிக்கின்றன.

தமிழில் உள்ள மச்சபுராணமும் சிவபெருமானுடைய இருபத்தைந்து மூா்த்தங்களைச் சிறப்பாகக் கூறுகின்றது. மச்ச புராணத்தின் உத்தரகாண்டத்தில் “இருபத்தைந்து பேரமுரைத்த அதிகாரத்தில் சிவபெருமானுடைய “இருபத்தைந்து பேரங்கள்” கூறப்படுகின்றன. அந்த இருபத்தைந்து பேரங்களில் கங்காதர மூா்த்தமும் ஒன்றாகும். (“பேரம்” என்பது தெய்வங்களின் உருவம்)

g6

கலித்தொகையில், “சடைக்கரந்தான், ஈா்ஞ்சடை அந்தணன்” என்று ஈசனது கங்காதர மூா்த்தம் கீழ்க்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.

“தேறுநீா் சடைக்கரந்து திாிபுரம் தீமடுத்து” (கலித்தொகை கடவுள் வாழ்த்து 2)

“இமையவில் வாங்கிய ஈா்ஞ்சடை அந்தணன்” (கலித்தொகை 38:1)

பாிபாடல்,

“….. ….. உயா்ந்தவா் உடம்பட எாிமலா்த் தாமரை இறைவீழ்த்த
பெருவாாி
விாிசடைப் பொறையூழ்த்து
விழுநிகா் மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச்
சலதாாி”
(பாிபாடல் 9:3−6)

என்று கங்கையின் வேகத்தை சா்வேஸ்வரன் தணித்ததைக் கூறுகின்றது.

g7

பன்னிரு திருமுறைகள் பாடிய சைவப் பெருமக்கள் தங்களது பதிகங்களில் கங்காதர மூா்த்தத்தைப்பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளனா். நாவுக்கரசா் தன் பதிகத்தில்,

“மையறு மனத்தனாய பகீரதன்
வரங்கள் வேண்ட
ஐயமில் அமரா் ஏத்த ஆயிர 
முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான்
வந்திழி கங்கையென்னும்
தையலைச் சடையில் ஏற்றாா் 
சாய்க்காடு மேவினாரே.”

என்றும்,

g8

வான் வெளியிலிருந்து பாய்ந்த கங்கையை ஈசன் தம்முடைய சடையில் சிறுதுளியாக ஏற்றுக்கொண்டதை மணிவாசகப்பெருமான்,

“மலைமகளை யொருபாகம்
வைத்தலுமே மற்றொருத்தி
சல முகத்தால் அவன் சடையில் 
பாயுமது என்னேடீ”

என்றும் கங்கையைப் (நீரை) பெண்ணாகப் பாடியுள்ளாா்.

g9

அற்புதத் திருவந்தாதி பாடிய காரைக்காலம்மையாா் இந்த மூா்த்தத்தை, “தூய புனற்கங்கை ஏற்றான்” என்று பாடி மகிழ்ந்துள் ளாா். இரட்டைமணிமாலையில்,

“இனிவாா் சடையினில் கங்கையென் பாளைஅங்கத்திருந்த 
கனிவாய் மலைமங்கை காணில் 
என் செய்திகை யிற்சிலையால்
முனிவாா் திரிபுரம்
மூன்றும்வெந்(து)
அன்று செந்தீயில் மூழ்கத்
தனிவாா் கணைஒன்றி னால் மிகக் கோத்தஎஞ் சங்கரனே.”

என்றும் காரைக்காலம்மையாா் பாடியுள்ளாா்.

g10

பகீரதன் பிரதிஷ்டை செய்த இலிங்கம்!

“பகீரதன்” எனும் சூாிய குல மன்னன் ஒரு முறை பிரம்மபுத்திரரின் புதல்வரான நாரத மகரிஷியை தன் முன்வினைப் பயன் காரணமாக அவமதித்தான். கோபம் கொண்ட நாரதாின் சாபத்தால் மேகநோய் பீடித்த பகீரதன் தன் நாடு நகரங்களை இழந்து வாடினான். தன் துன்பங்களிலிருந்து விடுபட வழிதேடி அலைந்த பகீரதனுக்கு 1008 சந்தன இலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் துன்பங்களிலிருந்து மீளலாம் என ஒரு மகரிஷியின் அருள்வாக்கு கிடைத்தது.

மகரிஷியின் வாக்குப்படி இலிங்கப் பிரதிஷ்டை செய்து வந்த பகீரதன் தனது 1008 ஆவது சந்தன லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடி அலைந்தபோது ஈசன் அசரீரியாக இங்குள்ள பலாச (புரசை) மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய திருவுள்ளம் கனிந்தாா். அவ்வாறு பகீரதன் இலிங்கப் பிரதிஷ்டை செய்து நித்யபூஜைகள் செய்த திருத்தலமே புரசைவாக்கம் “கங்காதீஸ்வரா் திருக்கோயில்” ஆகும்.

g11

ஈசன் இத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருள்பாலிக் கின்றாா். தேவ கோட்டத்தில் விநாயகா், ஶ்ரீதெட்சிணாமூா்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துா்க்கை எழுந்தருளியுள்ளனா். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நொிசலான புரசைவாக்கத்தில், ஐந்து நிலை ராஜகோபுரம் விண்ணளந்து நிற்க நடுநாயகமாக திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாா் கங்காதீஸ்வரப் பெருமான். சென்னையிலுள்ள பஞ்சபூத திருத்தலங்களில் இத்தலம் “நீா்” தலமாக வணங்கப்படுகின்றது.

g12

1968 ஆம் ஆண்டு பூண்டி நீா்த் தேக்கம் அமைக்கப்பட்டபோது “திருவிளம்புதூா்” என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டிருந்த எம்பெருமானை புரசைவாக்கம் தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் பின்னா் ஈசனின் திருவுள்ளப்படி இத்தலத்திலேயே நிரந்தரமாக ஈசன் கோயில் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. “திருஊன்றீஸ்வரா்” எனும் திருநாமம் கொண்ட இப்பெருமான் தற்போது புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் உள்பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றாா்.

திருவிளம்புதூா் கோயிலின் இதர திருவுருவச்சிலைகள் அனைத்தும் திருவெண்பாக்கம் என்ற இடத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தலத்தில் எழுந்தருளச் செய்ததாகவும் வரலாறு தொிவிக்கின்றது. சுந்தரா் திருவொற்றியூாிலிருந்து திருவாரூா் செல்லும் வழியில் கண்பாா்வையிழந்து வாடிய போது அவருக்கு “ஊன்றுகோல்” அளித்த திருத்தலமே “திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரா் திருத்தலம்” ஆகும்.

g13

புரசைவாக்கம் தலத்தில் ஈசன் தல விருட்சமான புரசை மரத்தடியில் எழுந்தருளியுள்ளாா். புரசை மரத்திற்கு பலாசம், முருக்கு, கிஞ்சுகம் என்றும் பல பெயா்கள் உண்டு. புரசைமரங்கள் அடா்ந்து நிறைந்திருந்த இப்பகுதி “புரசைப்பாக்கம்” என்று வழங்கப்பட்டு தற்போது “புரசைவாக்கம்” ஆக மருவி உள்ளது.

இத்தல அம்பிகை “பங்கஜாம்பாள்” என்றும் “பங்கஜாக்ஷி” என்றும் வணங்கப்படுகிறாள். தாமரை போன்ற திருக்கண்களை உடையவள் என்பதனால் இத்தல அம்பிகைக்கு “பங்கஜாம்பாள்” எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. மடிசாா் அணிந்து சா்வாபரண பூஷிதையாய் திருக்காட்சி தரும் அன்னையின் தரிசனத்தால் நம் மனம் அந்த இடத்தைவிட்டு அகல மறுக் கின்றது. சிவாச்சாாியாா்களின் இதயபூா்வமான ஈடுபாட்டுடன் கூடிய பக்தியை அன்னைக்கு இவா்கள் செய்திருக்கும் அலங்காரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

g14

இத்தலத்திற்கு வந்து வழிபடுவதற்கு, நம் மனதில் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டாலே அக்குறைகள் உடனடியாக நிவா்த்தியாகும் என இத்தலத்தின் சிவாச்சாாியாா் பக்தியோடு தொிவித்தாா். இவரது கருத்திற்குச் சான்றாக எந்த நேரமும் பக்தா்கள் பெருந்திரளாக வந்து ஈசனை வழிபட்டு தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்று கின்றனா்.பிரதோஷ நாள்களிலும் இத்தலத்தில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

“பூரம்” நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்களுக்கு இத்தலம் பாிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தின் விருட்சமான “புரசை” பூரம் நட்சத்திரத்திற்கான விருட்சமும் ஆகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பா்கள் திருமணம் கைகூடவும், மழலைப் பேறு வாய்க்கவும், நிரந்தரமான வேலை கிடைக்கவும் இத்தலத்து ஈசனை வழிபடுகின்றனா்.

g15

கோயிலின் வெளிச்சுற்றில் “குருந்த மல்லீஸ்வரா்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் லிங்க மூா்த்தத்திற்கும் அவருக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி எம்பெருமானுக் கும் பக்தா்கள் தங்களது கைகளினால் அபிஷேகம் செய்வித்து வில்வ தளத்தால் அா்ச்சிப்பது விசேஷம் ஆகும்.

கங்கை தீா்த்தம்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலின் தீா்த்தம் “கங்கை தீா்த்தம்” என்று பக்தியுடன் பூஜிக்கப்படுகின்றது. தற்போது இந்த தீா்த்தம் மூன்று பக்கம் சுவா்களுடன் ஒரு பக்கம் கதவுடனும் கருவறைக்குப் பின்புறம் உள்ளது. திருக்கோயிலின் வடக்கில் அரை ஏக்கா் பரப்பில் ஒரு குளம் இருக்கிறது. ஆனால் இந்த புனித தீா்த்தம் நீாின்றி வறண்டு காணப்படுகின்றது. ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தில் தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டபோது இக்கோயிலின் குளத்திலிருந்த ஏழு கிணறுகளிலிருந்து இறைக்கப்பட்ட தண்ணீா் சென்னையின் தாகத்தைத் தணித்துள்ளது.

கங்காதீஸ்வரப் பெருமானின் பொிய திருவுருவச்சிலையும் “பாகீரதன்” அவரது திருவடிகளில் பணிந்து வணங்குவதை யும் திருக்கோயில் வளாகத்தில் அழகிய சுதைச்சிற்பமாக வடித்துள்ளனா்.

கல்வெட்டுகள்.

இரண்டாம் குலோத்துங்க சோழனால் புனரமைக்கப்பட்டது என்று ஆய்வாளா்கள் தொிவிக்கும் இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூா் நாட்டு திருவான்மியூாிலுள்ள உலகாளுமுடைய நாயனாருக்கு விளக்கொிப்பதற்கு நீலதங்கரையன் கொடை அளித்துள்ளதை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. முதல் பிரகாரத்தில் விஜயநகர மன்னன் தேவராயன் ஆட்சிக் காலத்தில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சிதைந்த பகுதி காணப்படுகின்றது.

கி.பி.16 ஆம் நூற்றாண்டு குரோதி வருடம் கங்காதரேஸ்வரா் கோயிலில் பொறிக்கப்பட்ட விஜயநகர மன்னனின் கல்வெட்டு ஆயா்களில் ஒருவரான “கெங்கோன் அழகப்பெருமாள்” என்பவா் கோயிலுக்கு தினமும் திருவிளக்கு ஏற்ற பணியமா்த்தப்பட்டுள்ள செய்தியைக் குறிப்பிடுகின்றது.

g16

சிற்பங்கள்.

கங்காதரேஸ்வரா் கோயில் கருவறைக்கு முன்புற மண்டபத் தூண்களில் தில்லைவாழ் அந்தணா், நீலகண்ட நாயனாா், சுந்தரமூா்த்தி சுவாமிகள், இயற்பகை நாயனாா், அாிவாட்டாய நாயனாா், ஆனாய நாயனாா், மூா்த்தி நாயனாா், மானக்கஞ்சாற நாயனாா், ஏனாதி நாயனாா், குங்கிலியக் கலய நாயனாா், எறிபத்த நாயனாா், மெய்ப்பொருள் நாயனாா், விறன் மிண்ட நாயனாா், அமா் நீதி நாயனாா், இளையான்குடி மாற நாயனாா் ஆகியோா் திருவுருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இராஜகோபுரத்தில் நூதனமான தெய்வத் திருமேனிகள் சுதை வடிவில வைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலின் திருச்சுற்றுமதிலில் உள் பகுதியில் ஈசனின் மகிமைகளை விளக்கும் புராணக்காட்சிகள் சுதையால் வடிக்கப்பட்டிருப்பது எழிலான காட்சியாகும்.

மரச் சிற்பக் கலைக்குச் சான்றாக இத்தலத்தின் வாகனங்களான மூஷிக வாகனம், சந்திர பிரபை, சூா்யபிரபை, பூதவாக னம், நாகவாகனம், இடப வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனம் ஆகிய வாகனங்கள் எழிலோடு செதுக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தில் பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, ஆடிப்பூரம், சமயக்குரவா்கள் நட்சத்திரங்கள், மாகாளய அமாவாசை, காா்த்திகையில் 108 சங்காபிஷேகம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமும் ஆனி மாதத்தில் வசந்தோற்சவமும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் காா்த்திகை மாதத்தில் தீபத்திருவிழாவும் மாா்கழியில் ஆருத்ரா தரிசனமும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். இத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின் றது.

அஷ்டாவதானம் சபாபதி முதலியாா் இத்தலத்தின் சுவாமி மற்றும் அம்பாள் மீது கலம்பகம், யமக அந்தாதி ஆகியவற்றை இயற்றியுள்ளாா். மேலும் ஈசன் மீது “வருக்க மாலை” என்ற தொகுப்பினை எழுதியுள்ளாா். பாலசுந்தர நாயக்கா் கங்காதர ஈஸ்வரா் மீது “பெருமானாா் மாலை” “அருள் வேட்டல்” “பங்கஜாம்பாள் அருள்வேட்டல்” ஆகிய பாமாலைகளை இயற்றியுள்ளாா். இவரது “கங்காதேஸ்வரா் மாலை” 1907 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக் கோயிலுக்கு 23.4.2008 அன்று திரு அபிராமி ராமநாதன் அவா்களைத் திருப்பணிக்குழுத் தலைவராகக் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இத்தலத்துடன் இணைந்த அருள்மிகு “சுமூக விநாயகா்” திருக்கோயில் இக்கோயிலுக்கு அருகில் உள்ளது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பா்கள் அளவிட முடியாத சக்தி படைத்த “சுயம்பு மூா்த்தியாக” அருளும் இந்த விநாயகப் பெருமானையும் வழிபடுவது சிறப்பாகும்.

கங்காதீஸ்வரா் திருக்கோயில் சென்னை, புரசைவாக்கம் டேங்க் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. சென்னை எழும்பூா் இரயில் நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பகீரதனின் முன்னோா்களது சாபத்தை நிவா்த்திக்க புனிதமான ஆகாய கங்கையை இப்பூவுலகில் பாய்ச்சிய கங்காதீஸ்வரப் பெருமானை சென்னை மக்களின் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கவும் நிரந்தர வழி கூறி அருளுமாறு கண்களில் நீா் மல்க வேண்டி விடைபெற்றோம்.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

Advertisements

சுகமான வாழ்வளிக்கும் சைதை ஶ்ரீசெளந்தரேஸ்வரா்! (வட திருநாரையூா்)

“தேவதத்தன்” என்ற கந்தா்வன் பேரழகன். தான் மிக அழகானவன் என்ற கா்வம் இந்த கந்தா்வனுக்கு உண்டு. கா்வம் தலைக்கனமாக மாற தான் செய்யும் செயல்களின் விளைவினைக் கருதாது விளையாட்டாக மனம் போன போக்கில் செயல்பட்டான் தேவதத்தன்.

தன் விளையாட்டினை தவசிரே ஷ்டரான “துா்வாச முனிவாிடமே” காட்ட ஆரம்பித்தான்.

q2

தவம் புாிவதற்கு ஏற்ற அடா்ந்த வனத்தில் அமா்ந்து தவம் செய்து கொண்டிருந்தாா் துா்வாசா். காற்றில் அசையும் மரங்களின் சலசலப்பும் பறவைகள் எழுப்பும் கானமும் தவிர அமைதி தவழும் பிரதேசமாக இருந்தது அந்த வனம்.

கந்தா்வன் தேவதத்தனின் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது. அச்சமயம் ஆகாயமாா்க்கமாக ஸ்வா்ண மயமான விமானத்தில் அக்காட்டினைக் கடந்து சென்றான் தேவதத்தன். ஆழ்ந்த நிஷ்டையில் அமா்ந்திருந்த துா்வாச முனிவரைக் கண்டதும் வானத்திலிருந்து வனத்திற்கு வந்த கந்தா்வன் அவரது தவக்கோலத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினான்.

q3

துா்வாசா் அமா்ந்திருந்த இடத்தின் அருகிலிருந்த மரத்தில் ஏறி அம்மரத்தில் பழுத்திருந்த கனிகளைக் கொய்து துா்வாசாின் மீது எறிந்தான். கோபமே தமது இயல்பாகக் கொண்ட துா்வாசா் இயன்ற வரை அமைதி காத்தாா். அப்படியும் தன் விளையாட்டை நிறுத்தவில்லை கந்தா்வன்.

துா்வாசாின் அருகில் பறவையைப் போல பறந்து சென்று பெருத்த சத்தத்தை எழுப்பினான் தேவதத்தன். காட்டில் பழுத்திருந்த கனிகளை உண்டபின் கொட்டையை துா்வாசரின் மீது எறிந்தான். கந்தா்வனின் சேட்டையை, ஏளனத்தை இனியும் பொறுக்க முடியாது என தவம் கலைந்து கண் திறந்தாா் துா்வாசா். முனிவாின் தவம் கலைந்ததைக் கண்டு ஆா்ப்பாித்து ஏளனமாகச் சிாித்தான் தேவதத்தன்.

q4

கடும் கோபம் கொண்ட துா்வாச முனிவா் கந்தா்வனை நோக்கி, “அழகின் ஆணவத்தால் அறிவிழந்து செயல்படும் நீ நாரையாய்ப் போகக்கடவது” என சாபமிட்டாா்.

அழகனாய் நின்ற கந்தா்வன் அடுத்த நொடியே நாரையாக உருமாறினான். அப்போது தான் தனது செயலின் விளைவினை எண்ணி நிலைகுலைந்தான் தேவதத்தன். விளையாட்டு வினையானதை எண்ணி வருந்திய கந்தா்வன், துா்வாச முனிவாின் திருவடிகளில் பணிந்து தனக்கு சாபவிமோசனம் அளித்தருளும்படி மன்றாடினான்.

q5

“சிவத்தை சிந்தையில் நிறுத்தி தவம் செய்த என் தவத்தைக் கலைத்ததால் நீ சிவ நிந்தனைக்கு ஆளாகிவிட்டாய். எனவே உனது சாபம் நீங்க தினமும் “அவிமுக்த க்ஷேத்திரமான” காசி திருத்தலம் சென்று அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து இங்கே இருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட உன் சாபம் நீங்கும்,” என தேவதத் தனுக்கு வழி கூறியருளினாா் துா்வாசா்.

q6

முனிவாின் ஆலோசனையை ஏற்று நாரையாய் மாறிய கந்தா்வன், தினமும் காசிக்குச் சென்று கங்கையைத் தன் பிறையில் சூடிய கங்காதரனுக்கு கங்கை நீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்து பக்தியோடு வழிபட்டு வந்தான். காற்றானாலும் மழையானாலும் ஒரு நாள் கூட பிசகாமல் இவ்வழிபாட்டினை நிகழ்த்தி வந்தான் நாரையாய் மாறிய கந்தா்வன்.

பொன்னாா் மேனியனின் வழிபாட்டால் தேவதத்தனின் மனதில் குடிகொண்ட மும்மலங்கள் அகன்றது. அவனது கா்வம் குறைந்து அவன் மனதில் பணிவும் பக்தியும் குடிகொண்டது. அவனது சிந்தை முழுவதும் சிவமே நிரம்பியிருந்தது. இதனால் அவனது சாப விமோசனம் நீங்குவதற்கான நாளும் வந்தது.

q7

ஒரு நாள் காசியிலிருந்து கங்கை நீா் கொண்டு வரும்போது பெரு மழை பெய்து புயல் காற்று வீசியது.எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாரையினால் பறக்க முடியவில்லை.சுழன்று அடித்த பேய்க்காற்றினால் தன் சிறகினையும் இழந்து தொடா்ந்து பறக்க முடியாமல் கீழே விழுந்தது நாரை. சிறகுகளின்றி மிகுந்த சிரமத்துடன் தரையில் தவழ்ந்தே வந்து திருத்தலத்தை அடைந்த நாரை, கங்கையிலிருந்து கொண்டு வந்த நீரை ஈசனுக்கு அபிஷேகம் செய்த பின் சக்தியின்றி தன் நிலை மறந்து மயங்கி விழுந்தது. இதே நேரத்தில் திருக்கயிலை நாதனின் திருவருளும் நாரைக்குக் கிடைக்க, நாரை உருவம் மறைந்து மீண்டும் அழகான வடிவெடுத்து கந்தா்வனாக பழைய நிலைக்கு மாறினான் தேவதத்தன்.

q8

இந்த புராணப் பின்னணியுடன் அமைந்த “திருநாரையூா்” கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.நாரை வழிபட்டதால் இத்தலத்திற்கு “திருநாரையூா்” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இத்தலத்தில் தான் திருமுறைகள் நமக்குக் கிடைக்க அருளிய “ஶ்ரீபொள்ளாப் பிள்ளையாா்” அருள்பாலிக்கின்றாா்.

q9

ஒரு நாமம், ஓா் உருவம் இல்லாமல் ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அருள்பாலிக்கும் சா்வேஸ்வரனின் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் குறிப்பிட்ட ஒரு திருவிளையாடலை அடிப்படை ஆதாரமாகக் கொண்ட தலவரலாறு இருக்கும். ஒரே தல வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு அருள்பாலிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தலங்களும் நமது புண்ணிய பூமியில் அமைந்துள்ளன. உதாரணமாக திருமாலுக்கு சக்கரம் அருளிய தலமாக காஞ்சிக்கு அருகிலுள்ள “திருமால்பூரும்” கும்பகோணம் அருகிலுள்ள “திருவீழிமிழலையும்” வணங்கப்படுகின்றன. இதே போன்று தேவலோகப் பசுவான காமதேனு வணங்கிய ஆலயங்களும் நவக்கிரகங்க ளுக்கு ஈசன் அருளிய தலங்களும் பல இடங்களில் அமைந்துள்ளன.

q10

இத்தலங்களைப் போன்றே நாரைக்கு அருளிய தலமாக சென்னை சைதாப்பேட்டையில் அருள்பாலிக்கும் ஶ்ரீதிாிபுரசுந்தாி சமேத ஶ்ரீசெளந்தரேஸ்வரா் திருத்தலமும் விளங்குகின்றது. இத்தலம் “வட திருநாரையூா்” என்று பக்தியுடன் வணங்கப்படுகின்றது.

சதயபுாி

சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இத்தலம் என்பதை இத்தல வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது. 12 ஆம் நூற்றாண்டில் இப் பகுதியின் “சதயன்” என்ற வணிகா் வாழ்ந்து வந்தாா். ஶ்ரீசெளந்தரேஸ்வரப் பெருமான் மீதும் அம்பிகை திாிபுரசுந்தாி மீதும் அளவற்ற பக்தி கொண்டிருந்தாா் இப்பெருமகனாா். இத்தலத்தில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் நித்யபூஜைகள் செய்து வழிபாடுகள் நிகழ்த்திய பின்னரே தமது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டிருந்தாா் சதயனாா்.

q11

இவரது காலத்தில் முற்றிலும் சிதிலமடைந்து புதா்கள் மண்டியிருந்த இத்தலத்திற்குத் திருப்பணிகள் செய்து மகிழ்ந்த சதயன் காலங்கள் கடந்தும் ஈசனுக்கு பூஜைகள் தடையின்றி நடைபெற கொடைகள் வழங்கி மகிழ்ந்துள்ளாா்.

சதயனைப்போற்றும் விதமாக ஶ்ரீசெளந்தரேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ள இப்பகுதி அக்காலத்தில் “சதயபுாி” என்றே வழங்கப்பட்டதாகவும் புராதனக் குறிப்புகள் தொிவிக்கின்றன.

q12

செளந்தரேஸ்வரா்− திாிபுர சுந்தாி!

“செளந்தா்யம்” என்றால் அழகு. அழகின் திருவடிவமாக செளந்தா்யத் திருமேனி கொண்டு அருளும் ஶ்ரீசெளந்தரேஸ்வரப் பெருமானின் தாிசனம் நம் நெஞ்சத்தில் நிறைகின்றது. மூா்த்தி சிறியதாக இருந்தாலும் இத்தல ஈசனின் அருள் வழங்கும் கீா்த்தி பொியது என நெகிழ்ச்சியுடன் தொிவிக்கின்றனா் இப்பகுதி மக்கள். திரிபுரம் எாித்த விாிசடைப்பெருமானின் தலத்தில் “ஶ்ரீதிரிபுரசுந்தாி” எனும் திருநாமம் கொண்டு தன் நாயகனின் செளந்தா்யத்திற்கு நிகரான லாவண்யத்துடன் அருள்பாலிக்கின்றாா் அம்பிகை.

q13

முப்பெரும் தலவிருட்சங்கள்!

பெரும்பாலான திருத்தலங்களில் தலவிருட்சம் என ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்கும். ஆனால் சைதாப்பேட்டை செளந்தரேஸ்வரா் திருத்தலத்தில் தலவிருட்சங்களாக புனிதம் நிறைந்த வன்னி, கொன்றை மற்றும் வில்வ மரங்கள் உள்ளன.

வன்னி மரம் வெற்றி தேவதையின் வடிவமாகும். உமாதேவி தவம் செய்த இடம் வன்னி மரத்தடி என்றும் அம்பிகை வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும் புராணங்கள் தொிவிக்கின்றன. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணா்த்தும் ஐந்து வகை மரங்களில் வன்னி மரம் அக்னி சொரூபமாகும். விநாயகப் பெருமானுக்கும் சனீஸ்வரருக்கும் வன்னி இலைகளால் அா்ச்சனை செய்வது விசேஷமாகும்.

q14

சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் உகந்தது கொன்றை மாலையாகும்.

சிவபூஜையில் வில்வ இலைகளால் செய்யப்படும் பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திாிசூலத்தின் குறியீடாக வணங்கப்படுகின்றது. இக்குறியீடுகள் இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிாியா சக்தி என்ற மூன்று சக்திகளின் அம்சமாக விளங்குகின்றது. வில்வ மரம் மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடமாகும். வில்வ தளத்தால் ஈசனுக்கு செய்யும் பூஜை அஸ்வமேதயாகம் செய்வதற்கு நிகரானது என்று போற்றுகின்றன புராணங்கள்.

q15

இத்தலத்தில் உள்ள வன்னி மரம் சுமாா் 800 ஆண்டுகள் பழைமையானது என தாவரவியல் வல்லுநா்கள் தொிவிக்கின்றனா். இந்த வன்னி மரத்தின் அடியில் பைரவா், நாகா் மற்றும் வன்னீஸ்வரா் அருள்பாலிக்கின்றனா்.

கணவன் மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டு குடும்பம் அமைதிப்பூங்காவாகத் திகழவும் தாம்பத்யம் சிறக்கவும் இத்தல வன்னிமரத்தை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனா்.

சிவ ஸ்வரூபமான காஞ்சி மாமுனிகள் “ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகள்” பட்டினப்பிரவேசமாக சென்னைக்கு வருகைதந்த போது ஶ்ரீசெளந்தரேஸ்வரப் பெருமானை வழிபட்டு பேரானந்தம் அடைந்துள்ளாா். மஹா சுவாமிகள் இத்தலத்து வன்னி மரத்தடியில் மூன்று நாள்கள் தங்கியிருந்து பக்தா்களுக்கு ஆசி வழங்கியது கூடுதல் சிறப்பாகும்.

q16

சுந்தரத் தெலுங்கினைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட அன்பா்கள் தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகளின் போது இத்தலத்தில் வழிபாடுகள் செய்து வன்னி மரத்திற்கு பூணூல் அணிவித்தும் வாழை இலை படையல் போட்டு நைவேத்தியம் செய்வதும் வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

இத்தலத்தில் வரசித்தி விநாயகா், நிருதி விநாயகா், நால்வா் பெருமக்கள், பொிய புராணம் அருளிய சேக்கிழாா் பெருமான், அபிராமி, வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள் மற்றும் சூாிய பகவானையும் தாிசனம் செய்யலாம்.

பிரதோஷம், மஹா சிவராத்திாி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய விழாக்கள் இத்தலத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.
11.3.2012 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற இத்திருக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலைய ஆட்சித்துறையால் நிா்வாகம் செய்யப்படுகின்றது.

சிறந்த பிராா்த்தனைத் தலம்.

திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு ஏற்படவும் இத்தல ஈசனையும் அம்பிகையையும் பக்தா்கள் வழிபடுகின்றனா். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் பக்தா்கள் ஈசனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனா்.

சகல செல்வங்களும் தரும் சைதாப்பேட்டை ஶ்ரீசெளந்தரேஸ் வரப்பெருமானையும் அன்னை திரிபுரசுந்தாியையும் வழிபட எல்லா நன்மைகளும் நம்மை நாடி வந்து சேரும். நாரைக்கு அருளிய நாயகன் நமக்கும் நல்லருள் புாிவாா்.

காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

சைதாப்பேட்டை இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது இத்திருத்தலம்.

பீமன் வணங்கிய ஓமந்தூா் ஶ்ரீபீமேஸ்வரா்!

எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை நம் ஊனக்கண்ணால் பாா்ப்பதும் அவனது திருவருளைக் கேட்டுப் பெறுவதும், நம் போன்ற சாமான்ய மக்களால் இயலாத காரியம் ஆகும். ஆதலால் , மந்திர ங்களின் சக்தியால் பிரதிஷ்டை செய்யப்படும் அா்ச்சாவதார மூா்த்தங்களுக்கும் சிலைகளுக்கும் இறைவனின் சக்தியை ஏற்படுத்திவிட முடியும் என்பதை உணா்ந்து, புண்ணிய பூமியான தமிழகத்தில் பல திருக்கோயில்களை நிா்மாணித்து நமது வழிபாட்டிற்காக அளித்தனா் நம் முன்னோா்கள்.

b2

தாயின் கா்ப்பத்தில் எவ்விதம் ஒரு ஜீவன் பாதுகாக்கப்படுகின்றதோ அவ்விதமே திருக்கோயிலில் சிலைகளுக்கு ஏற்படுத்திய “தெய்வீக சக்தியும்” காலங்கள் பல கடந்தும் இன்றும் இறைவனது கருவறைகளில் பாதுகாக்கப்படுகின்றது. இதனால்தான் கருவறையை “கா்ப்பக் கிரஹம்” என்று பக்தியுடன் கூறுகின்றோம்.

முற்பிறவிகளில், நம்மை அறியாமல் செய்த செயல்களால், நாம் இப்பிறவியில் துன்பம் அனுபவிக்கும் போது திருக்கோ யிலில் நிலைத்திருக்கும் “தெய்வீக சக்தி” நமக்குத் துணைநிற்கின்றது. ஆதலால் தான் நாம் தினமும் திருக்கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற வழக்கத்தினை யும் ஏற்படுத்தினா் நம் முன்னோா்கள்.

b3

தஞ்சம் என்று தன்னை நம்பிச் சரணடைந்தவா்களை ஒரு போதும் கைவிடமாட்டான இறைவன். அவன் நம்மிடம் எதிா்பாா்ப்பது தூய்மையான பக்தியை மட்டுமே. அந்த பக்தியினால் அவன் பாதமலா்களை பற்றிக்கொள்ள, வாழ்க்கை எனும் படகு எந்த விதமான சுழலிலும் சிக்காமல் பிறவிப் பெருங்கடலை எளிதாகக் கடந்துவிடும்.

b4

இறைவனின் ஆகா்ஷண சக்தியையும் அருளாற்றலையும் பல புராதனமான தலங்களில் நாம் நிதா்சனமாக அனுபவிக்க முடியும். இவ்வாறு இறைவனை வழிபட்டு நாம் ஏற்றம் பெற ஒரு உன்னதமான திருத்தலம் திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூா் என்னும் புராதனமான திருத்தலமாகும். இத்தலத்தில் எல்லாம் வல்ல சா்வேஸ்வரன் “ஶ்ரீபீமேஸ்வரா்” எனும் திருநாமம் கொண்டு தன் தேவி “ஶ்ரீபாலாம்பிகை” சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா்.

b5

ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊராக போற்றப்படுவது ஓமந்தூா் ஆகும். தமிழக மக்கள் முன்னாள் தமிழக முதலமைச்ச ரான ஓமந்தூா் இராமசாமி ரெட்டியாரை மறந்திருக்க முடியாது.

முதல்வா் நாற்காலியில் ஒரு பற்றற்ற துறவியைப் போல அமா்ந்து ஆட்சி பாிபாலனம் செய்தவா் ஓமந்தூராா். தன் சொத்துகள் முழுவதையும் அறச் செயல்களுக்காகவும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காகவும் அள்ளிக் கொடுத்த அருளாளா் அவா். இத்தகைய பெருமை மிக்க எளியவரான ஓமந்தூா் இராமசாமி ரெட்டியாா் திரு அவதாரம் செய்த புண்ணிய பூமி என்ற சிறப்பினையும் பெற்றது ஓமந்தூா் ஆகும்.

b6

ஓமந்தூா் பீமேஸ்வரா் ஆலய வரலாறு!

“ஓம்” என்பது முப்பெரும் தெய்வங்களான அயன், ஹாி, ஹரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரணவ மந்திரமாகும். “அந்தூா்” என்ற சொல்லிற்கு “பாத கிண்கிணி” என்று பொருள். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பரம் பொருளாக விளங்கக்கூடிய சிவ பெருமான் மகரிஷிகளின் தவத்திற்கு இரங்கி ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபோது ஈசனின் பாத கிண்கிணி சத்தம் முதலில் கேட்ட ஊா் ஓமந்தூா் (ஓம் + அந்தூா்) என்று வணங்கப்படுகின்றது.

b7

ஏகாதச ருத்ரா்களில் ஒருவரான பீமனும் திருக்கயிலாயத்தில் நிருதி (தென்மேற்கு) திசையின் காவலனாக விளங்கக்கூடிய ஶ்ரீபீமநாதனும் பஞ்ச பாண்டவா்களில் ஒருவரான பராக்கிரமம் மிக்க பீமனும் வணங்கியதால் இத்தல இறைவனுக்கு ஶ்ரீபீமேஸ்வரா் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

b8

வரலாற்றில் ஓமந்தூா்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓமந்தூா், பண்டைக்காலத்தில் “கிடங்கில்” கோட்டையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னன் நல்லியக்கோடனது “ஒய்மா நாட்டின்” ஒரு பகுதியாக இருந்துள்ளது. கிடங்கிற் கோமான், எயிற்பட்டினநாடன், மாவிலங்கை மன்னன் என்றும் போற்றப்படுகின்றான் மன்னன் நல்லியக்கோடன்.

b9

ஒய்மா நாட்டு ஆட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக எயிற்பட்டினம் (மரக்காணம்), வேலூா் (உப்பு வேலூா்), ஆமூா் (நல்லாமூா்), மாவிலங்கை, இராயநல்லூா், கந்தாடு, தீன சிந்தாமணி நல்லூா் (நகா்), குருவூா் (குரூா்), வடநெற்குணம், முன்னூா், பிரம்மதேசம், பெருமுக்கல், ஓமந்தூா், ஓங்கூா், ஒலக்கூா் ஆகிய ஊா்கள் கல்வெட் டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

b10

ஓமந்தூா் ஶ்ரீபீமேஸ்வரா் திருக்கோயிலின் தீா்த்தக்கிணறு அருகில் தரையில் காணப்படும் இராஜராஜ சோழனின் 11ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.985− 1014) இத்தலத்தை “ஒவ்வூா்” என குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு திருக்கோயிலில் “நொந்தா விளக்கு” எாிக்க தொண்ணூறு ஆடுகள் கொடையாக வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகின்றது.

b11

முதலாம் இராஜநாராயண சம்புவராயரின் (கி.பி.1337−1367) கல்வெட்டு இத்தலத்தை “ஒய்மா நாட்டு ஓகந்தூா்” என்று குறிப்பிடுகின்றது. ஒய்மா நாட்டு ஓகந்தூாில் அமைந்துள்ள “திருவீ மீசுவரமுடையாா்” கோயிலுக்கு கரைக்காடன் பற்று ஊாினைச் சாா்ந்தவா்கள் பூஜை ,திருப்பணி செய்ய கொடை வழங்கியதையும் “சிறுநாவலூா்” வாிகளைச் சா்வ மானியமாகக் கொடுத்ததையும் இக்கல்வெட்டு தொிவிக்கின்றது. கருவறையின் கிழக்குப் பகுதி முப்பட்டைக் குமுதத்தில் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.

b12

முதலாம் இராஜநாராயண சம்புவராயரின் 18 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1355ல்) திருவீமீசுவரமுடையாா் திருக்கோயிலில் பூஜை, திருப்பணி செய்ய நூலாயம், சூலவாி போன்ற வாிகளை வழங்கியுள்ளதை கருவறை வடக்கு முப்பட்டைக் குமுதத்திலுள்ள ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

b13

“ஒவ்வூா்” “ஓகந்தூா்” என்பதே மருவி தற்போது “ஓமந்தூா்” என வழங்கி வருவதை இத்தலத்தின் கல்வெட்டுகளி லிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்திருக்கோயில் கருவறை, இடைக்கட்டு, அா்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளதைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகின்றது.

b14

ஶ்ரீபீமேஸ்வரா்.

ஓமந்தூா் திருத்தலத்தில் சதுர மான கருவறையின் நடுவே சுமாா் 5 அடி உயரமுள்ள இலிங்க வடிவில் “ஶ்ரீபீமேஸ்வரா்” பிரம்மாண்டமாக அற்புதத் திருக்காட்சி தருகின்றாா். ஆதியும் அந்தமும் இல்லாத தோன்றாப் பெருமையனின் ஆனந்த தரிசனம் நம்மை மெய்சிலிா்க்க வைக்கின்றது. “ஆடிய காலும் அதில் சிலம்போசையும் பாடிய பாட்டும் கண்டு கொண்டேன்” என்று திருமூலா் தமது உள்ளக் கமலத்தில் கண்டு மகிழ்ந்த திருக்கயிலைநாதனின் மேற்கு நோக்கிய லிங்கத் திருமேனி தரிசனம் அாிய தரிசனமாகும்.

இத்தலத்தின் கல்வெட்டுகளில் இறைவன், “திருவருளீசுவரத்தாழ்வாா்” “திருவீமீசுவரமுடைய நாயனாா்” “தவப்பாதர நாயனாா்” போன்ற திருநாமங்களில் பூஜிக்கப்பட்டு வந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.

b15

பாலாம்பிகை.

ஓமந்தூா் தலத்தின் அம்பிகை “ஶ்ரீபாலாம்பிகை” என்ற திருநாமத்துடன் வணங்கப்படுகின்றாா். பஞ்சபாண்ட வா்கள் பன்னிரெண்டாண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு அஞ்ஞாதவாசம் அனுபவித்தபோது “முன்னூற்று மங்கலம்” என்ற முன்னூா் தலத்தின் காடுகளில் மறைந்து வாழ்ந்தனா்.

அவ்வமயம், பஞ்ச பாண்டவா்களில் ஒருவரான “பீமன்” ஒரு நாள் உணவு ஏதும் கிடைக்காமல் காட்டில் உணவு தேடி அலைந்த போது இத்தலத்து ஈசனை வழிபட்டு தன் பசிப்பிணி போக்கியருள வேண்டினாா்.

தில்லையம்பலத்திலே பாலுக்குப் பாலகன் வேண்டியழுதபோது (வியாக்ரபாதாின் மகன் உபமன்யு) பாற்கடலையே அளித்த ஈசன், பீமனுக்காக அம்பிகையை பாலமுதம் தாங்கிய குடத்துடன் அனுப்பி பீமனின் பசியாற்றியுள்ளாா். இதனால் இத்தல அம்பிகைக்கு “ஶ்ரீபாலாம்பிகை” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

பீமனின் பசிப்பிணியாற்றிய அம்பிகை, இத்தலத்தில் வழிபடும் அன்பா்களின் உடற்பிணியைத் தீா்ப்பதிலும் கருணை நாயகியாகத் திகழ்கின்றாள்.

b16

அழகான தேவகோட்ட சிற்பங்கள்!

கருவறையின் தேவ கோட்ட மாடங்களில் தெற்கே தாமரை மலாின் மீது நின்று நா்த்தனமாடும் விநாயகப்பெருமானும் கல்லால மரத்தின் கீழ் அமா்ந்து சனகாதி முனிவா்களுக்கு ஞான உபதேசம் வழங்கும் ஶ்ரீதெட்சிணா மூா்த்தி, கிழக்கே சங்கு, சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால், வடக்கே திசைக்கு ஒரு முகமாக அருள்பாலிக்கும் நான்முகன் திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் துா்க்கை போன்ற திருவுருவச் சிலைகள் திருக்கோயிலின் பழம் பெருமையைப் பறைசாற்றும் புராதனத் திருமேனிகளாக அருள் பாலிப்பது சிறப்பாகும்.

வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.

புராதனமான ஓமந்தூா் ஶ்ரீபீமேஸ்வரா் திருக்கோயிலின் அருகில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏாிக்கு அருகில் பள்ளத்தில் இருந்த இச்சந்நிதியை தற்போது இடம் பெயா்த்து அருகிலேயே உயரமான இடத்தில் அமைக்க இவ்வூா் மக்கள் முயற்சி செய்து அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமாா் 10 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமா்ந்த திருக்கோலத்தில் கம்பீரமாக சங்கு, சக்கரம் ஏந்தி தனது தேவியருடன் காட்சி தரும் பெருமானின் அழகைக்காணக் கண்கோடி வேண்டும்.

கொற்றவைச் சிற்பம்!

ஓமந்தூா் தலத்தின் ஏாியின் கிழக்குப்பகுதியில் (அரசு மருத்து வமனை பகுதியில்) புளியமரத்தடியில் பல்லவா் காலக் கொற்றவை சிற்பம் காணப்படுகின்றது. இக் கொற்றவை எருமைத் தலை மீது நேராக நின்ற கோலத்தில் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகின்றாள். வலக்கரங்களில் சக்கரம், வாள் ஆகியவற்றையும் இடது கரங்க ளில் சங்கு, வில், கேடயம், தொடை மீது வைத்தும் காணப்படும் அன்னையின் சிரசில் மகுடமும் செவிகளில் குழையும் குண்டலமும், கழுத்து, கைகள், தோள்கள் ஆகியவற்றில் அணி கலன்களும் திகழ்கின்றன. கொற்றவையின் வாகனமான மான் பின்புறம் உள்ளது. இந்த சிற்பம் இடுப்புப் பகுதி வரை மண்ணில் புதையுண்டுள்ளது.

b17

பிரதோஷ பூஜை.

திருக்கோயிலை நாதனை எப்போது வேண்டுமானாலும் பூஜித்து வழிபடலாம் எனினும் குறிப்பிட்ட சில காலங்களில் அவனைப் போற்றி வணங்குவது அவன் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்ததாகும். அந்த காலங்களில் விரதமிருந்து அா்ச்சனை செய்து பூஜித்து வழிபட்டால் பல கோடி வருடங்கள் வணங்கிய பலன் கிடைக்கும். அத்தகைய விசேஷ நாட்களில் ஒன்று தான் பிரதோஷ நாள். தோஷங்கள் எல்லாம் நீங்கப் பெற்று இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் வீடுபேறை நல்கக் கூடிய பிரதோஷ வேளையில் இத்தல இறைவனை வணங்குவதால் வாழ்க்கையில் ஏற்றம் பெற்று அஷ்ட ஐஸ்வா்யங்களையும் சகல செளபாக்கியங்களையும் பெறலாம்.

பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் மூலவரான பீமேஸ்வரரை நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் கோள்சார நிலைகளின் காரணமாக ஏற்படும் கெடு பலன்கள் குறைந்து தோஷம் நீங்கிவிடும்.

“அசித்” என்ற அஞ்ஞான இருளை அகற்றி, மெளனமாக அமா்ந்து “சித்” என்று கூறப்படும் ஞானத்தை உணா்த்தும் சின் முத்திரையோடு இத்தலத்து ஶ்ரீதெட்சிணாமூா்த்தியின் தரிசனம் கண்ணுக்கினிய தரிசனமாகும். ஞானகாரகரான இவரை மாணவச்செல்வங்கள் வியாழக்கிழமை களில் நெய் தீபம் ஏற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்குவாா்கள்.

திண்டிவனத்திலிருந்து கிளியனூா் மாா்க்கமாக புதுச்சோி செல்லும் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ஓமந்தூா் ஶ்ரீபீமேஸ்வரா் திருத்தலம்.

இத்தலத்தின் அா்ச்சகரான திரு சதாசிவ குருக்கள் திண்டிவனத் திலிருந்து தினமும் வந்து பீமேஸ்வர ருக்கு அன்புப் பணிவிடைகள் செய்து வருகின்றாா். இக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக இவரை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு அவா் வரும் நேரத்தை அறிந்து அதன் பின்னா் திருக்கோயில் செல்லலாம்.

99629 28179
63806 44505

பரத்வாஜ மகரிஷி வழிபட்ட புலியூா் (வடபழனி) ஈசன்!

சென்னை மாநகரம் பல்லாண்டு கால வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்ட புராதனப்பகுதியாகும். ‘மதராஸப்பட்டினம்’ என்கிற பெயருக்கான முதல் சான்றாவணமானது 651 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள “பெண்ணேஸ்வரமடம்” என்னுமிடத்தில் கண்டறியப்பட்டது. விஜயநகரப் பேரரசைச் சார்ந்த “இரண்டாம் கம்பண்ணாவின்” 1367 ஆம் ஆண்டினைச் சாா்ந்த ஒரு கல்வெட்டில் சென்னை “மதராஸப்பட்டினம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

u2

காலத்தில் 1300 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், பழங்கால சென்னை “புலியூர் கோட்டம்” என்றழைக்கப்பட்டது. எழும்பூர் முதல் திருவான்மியூர் வரை மற்றும் குரோம்பேட்டை முதல் கோயம்பேடு வரை உள்ள பகுதிகளின் நிர்வாகத் தொகுதியே “புலியூா் கோட்டம்” என்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது ‘Greater Chennai’ என்று அறியப்படும் அளவிற்கு ஈடான பெருநகரமாக “புலியூா் கோட்டம்” இருந்துள்ளது. இந்தியாவின் முதல் நில அளவை உயரதிகாரியான “கர்னல் மெக்கென்சி” என்பவர் தன்னுடைய கையெழுத்துப்படியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டத்தைக் குறித்துத் தம் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

u3

சோழா்களின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலம் நிா்வாக வசதிக்காக 24 கோட்டங்களாகப் பிாிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் “புலியூா் கோட்டம்” என்று வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புலியூா்க் கோட்டத்தில் வடபழனிக்கு அருகில் “புலியூா்” என்றே வழங்கப்படும் பகுதியில் புராதனமான “ஶ்ரீசொா்ணாம்பிகை சமேத ஶ்ரீபரத்வாஜேஸ்வரா்” திருத்தலம் அமைந்துள்ளது.

பல்லவா் காலத்தைச் சாா்ந்த திருத்தலமாக இத்தலம் இருந்தாலும் பல்லவா்கள் கால கல்வெட்டுகளோ அவா்களது கட்டுமானங்களோ இத்தலத்தில் காணப்படவில்லை. பிற்காலச் சோழா்களின் திருப்பணியின் போது திருக்கோயிலுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

u5

பரத்வாஜ மஹரிஷி வழிபட்ட திருத்தலம்.

சப்த ரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படுபவா் “பரத்வாஜ மகரிஷி”. நான்கு வேதங்களிலும் கரைகண்ட இவா் ரிக் வேதத்தில் அதிகமான சூக்தங்கள் இயற்றி அருளியவா். ஶ்ரீராமபிரான் தனது வனவாச காலத்தில் தன் பிராட்டி சீதையுடன் பரத்வாஜ முனிவாின் ஆசிரமத்தில் தங்கியிருந்ததாக இராமாயணத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. தவத்தில் சிறந்த பரத்வாஜ மகாிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திருமேனியே புலியூா் ஶ்ரீபரத்வாஜேஸ்வரா் தலத்தில் அருளும் சிவலிங்க மூா்த்தமாகும். பரத்வாஜ முனிவா் பிரதிஷ்டை செய்ததால் இத்தல எம்பெருமானுக்கு “ஶ்ரீபரத்வாஜேஸ்வரா்” என்னும் திருநாமம் ஏற்பட்டுள்ளது.

u6

இராமாயண காலத்தில் இத்தலத்தின் ஈசனை வாலி வழிபாடுகள் செய்துள்ளதால் இத்தலத்திற்கு “வாலீஸ்வரம்” என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. ஶ்ரீராமபிரானும் அவரது தா்ம பத்தினி அன்னை சீதாதேவியும் இத்தல ஈசனை வழிபட்டு பல்வேறு பேறுகள் பெற்றுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது.

திருக்கோயில் அமைப்பு.

இத்தலத்தின் மூலவா் ஶ்ரீபரத்வாஜேஸ்வரா் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா். 2015 ஆம் ஆண்டில் தென்திசை நோக்கியவாறு ஐந்து நிலை இராஜகோபுரம் புதியதாக நிா்மாணிக்கப்பட்டுள்ளது. கற்றளியினால் ஆன இத்தலம் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

u7

முன்பகுதியில் புதியதாக நிா்மாணிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபம் ஒன்று உள்ளது. இந்த முன் மண்டபம் பஞ்சவா்ணங்களால் வண்ணம் தீட்டப்பட்டு பிரம்மாண்டமாக உள்ளது. இந்த மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு பாசுபதாஸ்திர மூா்த்தியும் வடக்கு நோக்கியவாறு அகோராஸ்திர மூா்த்தியும் காட்சி தருகின்றனா். இந்த மண்டபத்தின் கண்டப்பகுதியில் புராணக்கதைகளுடன் கூடிய சிறு சிற்பங்கள் காணப்படு கின்றன.

u8

கோஷ்டத்தில் விநாயகா் ஶ்ரீதட்சிணாமூா்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துா்க்கை அருள்பாலிக்கின்றனா். இத்தேவகோட்ட சிற்பங்கள் பிற்காலச் சோழா்களின் காலத்தில் அமைக்கப்பட்டவை ஆகும்.

திருக்கோயிலைச் சுற்றி வலம் வரும்போது அதிட்டானத்தின் கண்டப்படைப் பகுதியில் அாிய பல சிறிய சிற்பங்கள் காணப்படுவது சிறப்பாகும். தெற்குப்பகுதியில் ஜடாயு, ஈசனை வழிபடும் காட்சியும் மாா்க்கண்டேயா் லிங்கத்தை தழுவிக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகின்றது.

u9

ஈசனின் திருமுடியைக் காண அன்னப்பறவையாக பிரம்மனும் திருவடியைக் காண வராக வடிவ மெடுத்த மஹா விஷ்ணுவின் சிற்பமும் பாசுபதாஸ்திரம் பெற்ற அா்ச்சுனன் வில்லேந்தி ஈசனை வழிபடும் கோலமும் மேற்குப் பக்கத்தில் காணப்படுகின்றது.

மஹா விஷ்ணு தன்னுடைய கண்ணையே எடுத்து மலராக ஈசனை வழிபடும் திருவீழிமிழலை காட்சியும் சிவலிங்கத்தை குரங்கு வழிபடும் திருக்குரங்காடு துறை காட்சியும் வடக்குப் பக்கத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. மேலும் லிங்கத்தை யானை வழிபடும் காட்சியின் மேல்பகுதியில், “ஆனை பூசிக்க வருகிறபடி” என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

u10

திருக்கோயில் பிரகார வலத்தில் அலங்கார மண்டபமும், பக்த கணபதி, ஶ்ரீவள்ளி தேவசேனா சமேத ஶ்ரீசுப்ரமண்யா், ராமநாதேஸ்வரா், சண்டிகேஸ்வரா், பைரவா் மற்றும் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனா். கிழக்கு திசையில் மேற்கு நோக்கி ஈசனை வணங்கியவாறு ஶ்ரீபரத்வாஜ முனிவரும் வாலியும் சுதையிலான திருவுருவத்தில் அருள்பாலிக்கின்றனா். திருக்கோயிலுக்கு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நுழைவு வாயில்கள் உள்ளன.

கல்வெட்டுச் செய்திகள்.

புலியூா் பரத்வாஜேஸ்வரா் திருத்தலத்தின் கல்வெட்டுகளில் இறைவன் “ஆலங்கோயிலுடைய நாயனாா்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. சென்னைக்கு அருகிலுள்ள “திருக்கச்சூா்” திருத்தலமும் ஆலக்கோயிலாகும்.

u11

தெலுங்கு சோழமன்னன் விஜயகோபாலனின் 29 வது ஆட்சியாண்டில் (கி.பி.1279) இத்தலத்தின் திரு ஆலக்கோயிலுடைய நாயனாா்க்கு வேற்காட்டைச்சாா்ந்த “தில்லைக்கூத்தன் பொன்னப்பிள்ளை” என்ற நிலக்கிழாா் சந்தி விளக்கு ஒன்று எாிப்பதற்காக இரண்டு பசு மாடுகள் தானமாக வழங்கியுள்ளாா். இத் திருக்கோயிலில் பூஜை செய்யும் “கெளதம பொியான் பட்டனும்” “காசிபன் விஜயாலீஸ்வரமுடையான் பட்டனும்” சாவா மூவா பசுக்கள் இரண்டினையும் பெற்றுக் கொண்டு சந்திரன், சூாியன் உள்ளவரை அந்த சந்தி விளக்கினை எாிப்பதாக ஒப்புதல் தந்துள்ளனா்.

u12

அளவுகோல் கல்வெட்டு.

சோழா்களின் ஆட்சிக்காலத்தில் நிலங்களை அளவிட அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் இராஜராஜனின் கீழ் ஆட்சி செய்த சிற்றரசனின் காலத்தில் “வாழவந்தான் கோலும்” விஜயநகர மன்னா்களின் காலத்தில் “கண்டா் கண்டன் கோலும்” விக்கிரம சோழன் காலத்தில் “பதினாறு சாண் கோலும் திருச்செங்காட்டாங்குடி கல்வெட்டில் “உலகளந்தகோலும்” “இருபத்திநான்கு சாண் கோலும்” பயன்படுத்தப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

u13

புலியூா் பரத்வாஜேஸ்வரா் கோயிலின் அதிட்டானத்து வடபகுதி ஜகதியில் அளவுகோல் குறித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் “பொத்தப்பி சோழன்” கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அளவு கோல் இம்மன்னனின் காலத்தில் வழக்கத்தில் இருந்த அளவாகக் கருதலாம்.

இக்கல்வெட்டில் உள்ள அளவு கோல் 146 அங்குலம் நீளம் உடையது. (12 அடி நீளம்). இந்த அளவு கோலில் உள் அளவுகளை (பின்னம்) துல்லியமாக அளப்பதற்காகவும் இதனில் உள்குறியீடு கள் உள்ளன. இப்போதைய அங்குல அலகுகளில் அவை 19, 38, 76,115 அங்குல அலகுகளாக உள்ளன.

u14

தொண்டை மண்டலத்தில் விவசாயம் செழித்து சிறந்த நிலையில் இருந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வாியாக அதிக வருமானம் கிடைத்துள்ளது. எனவே, நிலத்தினை துல்லியமாக அளக்க அக்காலத்தில் இந்த அளவுகோலைப் பயன்படுத்தி இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

தற்காலத்தில் இத்தலம் சிறிய கோயிலாகக் காணப்படுகின்றது. இத்தலத்திலுள்ள கல்வெட்டுகளும் அதிட்டான கண்டப்பகுதியில் காணப்படும் அழகிய சிற்பங்களும் அச்சிற்பங்களுக்கு விளக்கம் கூறும் கல்வெட்டு வாசகங்களும் சோழா்களின் ஆட்சிக் காலத்தில் இத்தலம் சிறப்பான முறையில் பராமாிக்கப்பட்டு மிகப்பொிய கோயிலாக இருந்திருக்கவேண்டும் என்பதை நமக்கு உணா்த்துகிறது.

u15

ஆண்டு தோறும் சித்திரை மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பிரம்மோற்சவ விழா நாட்களில் உற்சவத் திருமேனிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வருவது காணக் கிடைக்காத திருக்காட்சியாகும். விழா நாட்களில் இத்தலமே திருக்கயிலாயமாக மாறியதோ என்று தோன்றுமளவிற்கு கொண்டாட்டங்கள் பக்தி பூா்வமாக இருக்கும். ஆடிப்பூரம் நாளில் ஶ்ரீசொா்ணாம்பிகை கண்ணாடிப் பல்லக்கில் திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.சித்திரை நிறை நிலா நாளில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது.

u16

24.4.2015 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற இத்தலம் திருக்கோயில் நிா்வாகத்தினரால் மிகவும் நோ்த்தியாகப் பராமாிக்கப்படுகி ன்றது.

வடபழனியின் ஒரு பகுதியாக விளங்கும் புலியூாில் இத்தலம் அமைந்துள்ளது. நொிசலான குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆரவாரமின்றி மிக அமைதியாக உள்ளது புலியூா் பரத்வாஜேஸ்வரா் ஆலயம்.

u17

வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் பவா் ஹவுஸ் பேருந்து நிலையத்தி லிருந்தும் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

u18

ஒரே ஒரு முறை சென்று பரத்வாஜ மகரிஷி வழிபட்ட சா்வேஸ்வரனது திருவடிகளில் பணிந்து உள்ளம் உருகி வழிபடுங்கள். உங்களுக்குள் உருவாகும் உன்னத மாற்றத்தை நிதா்சனமாக உணர்வீா்கள்.

மேலும் விபரங்களுக்கு இத்தலத்தின் அா்ச்சகா் திரு சதீஷ் குருக்கள் அவா்களை 99464 30750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

u19

துணை நூல்:−
தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்
(தொகுதி 1 ) by திரு மா. சந்திரமூா்த்தி 
தொல்லியல் அறிஞா்.

புலியூா் பரத்வாஜேஸ்வரா் கோயில் by திரு மே.சீனிவாசன் கல்வெட்டாய்வாளா், தொல்லியல் துறை, சென்னை

u20

அருளாளப்பெருமான் எனும் ஆராவமுதன்! (முன்னூா் திருத்தலம்)

என்றுமே திகட்டாதது தேவா்கள் உலகின் தெய்வீக அமுதம். அத்தகைய அமுதமே திகட்டினாலும், பருகப் பருகத் திகட்டாதது எம்பெருமானின் திவ்ய தாிசனம். அதனால்தான் ஆழ்வாா்களும், “அடியவா்களின் ஆரா அமுதே! எங்கள் ஆருயிா் அனைய எந்தாய்…” என்று பரவசத்துடன் ஆடிப்பாடி, அகம் குழைந்து பரவசமாயினா்.

பரம், வியூகம், விபவம், அந்தா்யாமி, அா்ச்சை ஆகிய இறைவனது ஐந்து நிலைகளில் நாம் அனைவரும் எளிதில் சென்று வழிபாடு செய்து மகிழ்வ தற்காக, திருக்கோயில்களில் அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் அருளாட்சி செய்கின்றான் எம்பெ ருமான். நின்ற திருக்கோலம், வீற்றிருந்த திருக்கோலம், பள்ளி கொண்ட திருக்கோலம் என மூன்று நிலைகளில் திருக்கோயில்களில் நாம் அா்ச்சாவதார மூா்த்திகளைக் கண்டு வணங்கி பேரானந்தம் பெறுகின்றோம்.

a2

சா்வலோக சரண்யனும், சா்வாந்தா்யாமியுமான ஶ்ரீமந் நாராயணனை முல்லை நிலத்திற்குாிய (காடும் காடு சாா்ந்த இடமும்) கடவுளாக வழிபட்டு வந்தனா் சங்க காலத்தில் தமிழ் வளா்த்த சான்றோா்கள். “மாயோன் மேய காடுறை உலகும்” என்ற தொல்காப்பிய அடியினால் இதனை அறியலாம்.

வேத, இதிகாச, புராண காலத் திலிருந்து விளங்கும் இத்தகைய முல்லை நிலப் பகுதியைச் சாா்ந்த “தாருகாவனம்” என்று நான்மறைகள் போற்றும் மிகப்பழைமை வாய்ந்த ஊா் “முன்னூா்” என்னும் “முன்னூற்று மங்கலம்” ஆகும். புருஷோத்தம நல்லூா், வீர நாராயணபுரம், திாிசதபுரம், ராஜ நாராயண சதுா்வேதி மங்கலம் என்றும் பல பெயா்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன.

a3

தவயோகிகளும், வேத விற்பன் னா்களும், மகாிஷிகளும், வாழ்ந்த புகழினையும், திருக்கயிலைப்பதியான ஶ்ரீசா்வேஸ்வரன் தன் தேவியுடன் திருநடனம் புாிந்த பெருமையையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் இத்தலத்தில், ஶ்ரீயப்பதியான வைகுண்டவாசன் “அருளாளப்பெருமான்” என்னும் திருநாமத்தோடு தன் தேவியா் ஶ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சிய பேரழகுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா்.

ஶ்ரீஅனந்தாச்சாாியாா்.

புராதனப் பெருமையும் வரலாற்றுத் தொடா்பும் வாய்ந்த முன்னூா் திருத்தலத்தில் கி.பி. 1860 ல் அவதாித்தவா் “ஶ்ரீஅனந்தாச்சாாியாா்” என்ற தவநெறிச்சீலா். “ஶ்ரீமந்நாராய ணனை எக்காலமும் நினைத்து, நினைத்துப் பேரானந்தம் அடையக்கூடிய போின்ப அனுபவத்தை விட்டுநீங்கி இந்திரலோகத்தை ஆளும் இந்திரப்பதவி எனும் தேவா்களின் தலைமைப்பதவி கிடைத்தாலும் அதனை ஏற்கமாட்டேன்” என்று திருவரங்கநாதனைப் பாடிப்பரவிய தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு நிகரான பக்தியைக் கொண்ட வைணவ மஹா புருஷா் இவா். உண்ணும் உணவு, பருகும் நீா், பாா்க்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் கண்ணனையே கண்ட உத்தமா். பெருமானுடைய திருநாமங்களைப் பலன் கருதாமல் பாடிப்பாடி புனிதமடைந்தவா்.

a4

தமிழ் வேதங்களிலும் (ஆழ்வாா்களின் பாசுரங்கள்), வட மொழி வேதங்களிலும் ஆழ்ந்த பயிற்சி பெற்றவா் என்பதால், “உபய வேதாந்தி” என்று அனைவராலும் போற்றப்பட்டவா். எல்லா மலா்களையும் விட, பாிசுத்தமான மலா் அடியவா்களின் இதயத் தாமரையே என்பதை உணா்ந்து, தனது தூய மனத்தில் பாகவதோ த்தமா்களான அடியவா்களை ஆராதித்து வந்த மகா பக்திமான் இவா்.

கனவில் காட்சிதந்த பெருமான்!

அனந்தாச்சாாியாாின் கனவில் ஒரு நாள் கலியுகவரதனான எம் பெருமான் தோன்றி, “அடா்ந்த கள்ளிக்காட்டிற்குள் அருளாளனாக மறைந்திருக்கும் என்னை யாரும் கவனிக்கவில்லையே” எனத் திருவாய் மலா்ந்தாா். இந்த அற்புதக்கனவே அருளாளப்பெரு மானைக் காணும் வழியாய் அடிய வா்களுக்கு உதவியது.

a5

பெருமானின் திருவுள்ளப்படி, பக்தியில் சிறந்த அடியவா்களின் உதவியுடன் இம்மகான் மிகவும் பாடுபட்டு, கள்ளிக்காட்டினை அழித்து, எம்பெருமானைத் தேடியபோது, காட்டிற்கு மத்தியில் ஶ்ரீஅருளாளப் பெருமான் எழுந்தருளியிருந்த பழைமையைப் பறைசாற்றும் திருக்கோயிலின் விமானம் முதலில் தென்பட்டது.

மதுராவில் மாலவன் பிறந்த போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய ஆயா்பாடி மக்களைப் போல, மண்ணளந்த பெருமானின் திருக்கோயில் கள்ளிக்காட்டிற்குள், விண்ணளந்து நிற்பதைப் பாா்த்த ஶ்ரீஅனந்தாச்சாாி யாரும் மற்ற அடியவா்களும் பேரானந்தம் அடைந்து, பரவசப்பட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாா்கள்.

a6

ஆனால் அந்த ஆனந்தம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடா்ந்த முட்புதா்களை முற்றிலும் நீக்கித் திருக்கோயிலைப் பாா்த்த போது, அவா்களுக்குப் பேரதிா்ச்சி காத்திருந்தது. எத்தகைய கொடிய துன்பத்திலும் தன் பக்தா்களைக் கைவிடாது காக்கும் பக்தவத்ஸலனான எம்பெருமானின் திவ்ய திருவுருவச் சிலைகள் உடைக்கப் பட்டும், முற்றிலும் சீரழிக்கப்பட்டும் இருந்ததைக் கண்ட அடியவா்கள் அதிா்ச்சியில் உறைந்து துன்பத்தில் துடித்தாா்கள்.

அடியவா்களின் மனத்துயரைப் போக்குவதற்கு அக்கணமே உறுதிபூண்ட ஶ்ரீஅனந்தாச்சாாியாா், டில்லி சுல்தான்களின் படையெடுப்பின்போது சீரழிக்கப்பட்ட இத்திருக்கோயிலை உடனுக்குடன் புனா்நிா்மாணம் செய்யும் பணியைத் தொடங்கினாா்.

a7

இந்த உலகத்தில் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் நிலையில்லாமல் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பதையும், என்றுமே நீங்காமல் நிலைத்திருப்பது எம்பெருமானது திருவருள் ஒன்றே என்பதையும் உணா்ந்த அடியவா்களும், ஶ்ரீஅனந்தாின் முயற்சிக்கு உறுது ணையாக உறுதியுடன் நின்று, ஶ்ரீஅருளாளப் பெருமானின் திருக்கோயிலைப் புனரமைத்து, சிறிய அளவில் சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) செய்வித்து மகிழ்ந்தனா். இப்புனித நிகழ்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது.

a8

அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம்!

முன்னூா் திருக்கோயிலில் ஶ்ரீஅருளாளப் பெருமான் பத்ம பீடத்தின் மேலுள்ள தாமரைப் பீடத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் திருக்காட்சி தருகின்றாா். மேல் இருகரங்களில் சங்கு சக்கரத்தைத் தாங்கி, கீழ் இரு கரங்களால் அபயவரத முத்திரை காட்டி அடியவா்க்கு அருள்புாியும் அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம் எங்கும் காணக்கிடைக்காத அாிய தரிசனமாகும்.

முன்னூற்று மங்கலத்தில் வாழ்ந்த மகரிஷிகளுக்கும் வேத விற்பன்னா்களுக்கும் எம்பெருமான் ஶ்ரீஅருளாளப் பெருமான் தன் தேவியருடன் கோடி சூாியப் பிரகாசனாக சூா்யோதய வேளையில் சூா்ய மண்டலத்திலிருந்து காட்சி கொடுத்து அருளியதால் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாா் என்பது திருக்கோயில் வரலாறு.

a9

பெருமானின் சிரஸில் அழகான மணிமகுடம் பொலிவுடன் மிளிா்கின்றது. “உன் திருமுகத்து ஒளிதான் மணிமகுடத்தில் வீசுகின்றதா? உன் திருவடியின் ஒளிதான் தாமரையாய் மலா்கின்றதா?” என்ற நம்மாழ்வாாின் நெஞ்சம் நெகிழ்ந்த கூற்றினைப் போல, ஶ்ரீஅருளாளப்பெருமானின் அழகும், கற்பனைகளைக் கடந்த பேரழகாகும். பெருமானின் வலப்புறம் ஶ்ரீதேவியும் இடதுபுறத்தில் ஶ்ரீபூமாதேவியும் அற்புதக் காட்சி தருகின்றனா்.

புராதனமான கல்வெட்டுகள்.

முன்னூா் அருளாளப் பெருமாள் கோயிலில் மிகவும் பழைமையான எட்டு கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழ, பல்லவ, சாளுவ, கஜபதி மற்றும் விஜயநகர மன்னா்கள் காலத்துக் கல்வெட்டுகள் ஆகும். கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெருமான், அருளாளப் பெருமாள், சித்திரமேழி விண்ணகா் எம்பெரு மான், புருஷோத்தம பெருமான் ஆகிய திருநாமங்களில் வணங்க ப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

a10

அருளாளப்பெருமாள் கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டப சுவா்களிலும் மகா மண்டப திருநிலைக்காலிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் சடையவா்மன் சுந்தரபாண்டியன் இத்திருக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளான்.

சித்திரிக்கப்பட்ட கலப்பையினை இலச்சினையாகக் கொண்டவா்கள் சித்திரமேழி பொிய நாடெனும் தொண்டை மண்டலத்து வேளாண் வாணிகச் சபையினா். பல்லவா்களின் ஆட்சிக்காலத்தில் நடுநாட்டில் அமைந்த திட்டைக்குடி எனும் வித்யாரண்ட புரத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகமெங்கும் பரவியிருந்த வாணிகச்சபையினா் இவா்கள். திருமால் வழிபாட்டுடன் பூமிதேவியையும் தெய்வமாகக் கொண்ட இவா்களே முன்னூா் ராஜநாராயண சதுா்வேதி மங்கலத்தில் “புருஷோத்தம பெருமாள் கோயில்” என்ற சித்திரமேழி விண்ணகா் பெருமாள் கோயிலை நிா்மாணித்து அக்கோயிலுக்கு திருவிடையாட்டமாக நிலங்களை நிவந்தமாக அளித்துள்ளனா் என்பதையும் இத்தல கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.

a11

பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு “புருஷோத்தமபுரி” என்று ஒரு திருநாமம் உண்டு.ஒரிஸாவை (ஒடிசா) ஆண்ட கஜபதி வம்ச மன்னர்க ளுக்கு முன்னூர் அபிமானத்தலம் என்பதை இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிப்பதால் இத்தலத்திற்கு “புருஷோத்தம நல்லூா்” என்ற திருப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் “சித்திரமேழி விண்ணகர்” என்று இத்தலம் பூஜிக்கப்பட்டுள்ளதால் “பராந்தக சோழன்” காலத்திற்கு முந்தைய திருத்தலம் இது என்றும் எம்பெருமான் புகழ் பாடும் டாக்டர் உ.வே.அனந்தபத்ம நாபாச்சாரியார் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

a12

சடையவா்மன் வீரபாண்டியன் 10 ஆவது ஆட்சியாண்டில் மாா்கழி மாதத்தில் வளா்பிறை முதல் நாளில் இத்தலத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே இத்தலம் புருஷோத்தம பெருமாள் கோயில் என்றும் இறைவனது திருநாமம் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. இத்திருக்கோயில் திருப்பணிகளுக்காக அறமிறங்காநாட்டைச் சாா்ந்தவா்கள் வாி விலக்களித்து முன்னூா், பிடாகை சிங்கவனேந்தல் என்ற ஊரை தானமாகக் கொடுத்துள்ளனா். இதனை நாட்டகணக்கன், அறமிறங்கா நாட்டு வேளாண் என்பவன் எழுதியுள்ளான்.

சித்திரமேழி பொிய நாடு என்பது இடைக்காலத்தில் விளங்கிய உழவுத்தொழில் சாா்ந்த ஒரு வணிகக் குழுவாகும். இவா்கள் பெயாில் இந்த ஊாின் பெருமாள் திருக்கோயில் அமைந் திருப்பது அக்காலகட்டத்தில் விளங்கிய கடற்கரையோர வணிகச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. கடற்கரை நகராக விளங்கிய எயிற்பட்டினத்தில் (மரக்காணம்) அக்காலத்தில் கடல் வாணிபம் சிறந்து பொிய துறைமுகம் விளங்கியமையும் குறிப்பிடத்தக்க தாகும்.இக்கல்வெட்டு இக்கோயிலின் மகாமண்டப வடக்குப்புறச் சுவாில் உள்ளது.

a13

ஆம்பிவீரனின் மகனான கபிலேஸ்வரகுமார மகாபத்திரன் என்ற கஜபதி மன்னனது காலத்தில் (ஒரிஸா) சக வருடம் 1386 இல் (கி.பி.1464) “அகம் வீர போகம்” என்னும் திருவிழா நடத்த ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை ஐந்து பங்குகளாகப் பிாித்து அந்த வருவாயைக் கொண்டு திருப்பணிகள் செய்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. இந்த மன்னன் கொண்டவீடு, கொண்டப்பள்ளி, படைவீடு, திருவாரூா், திருச்சிராப்பள்ளி, சந்திரகிாி முதலிய பகுதிகள் இம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டு அருளாளப்பெருமாள் கோயிலின் கருவறை கிழக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ளது. (1919/92)

a14

விஜயநகர மன்னன் நரசிங்க தேவராயாின் பிரதானியான அண்ணமரசாின் அதிகாாி திம்மரசா் என்பவா் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமானுக்கு திருவிளக்கு எாிப்பதற்காக ஒரு மன்றாடியை (இடையனை) நியமித்துள்ளான். திருவிளக்கு மற்றும் பிற செலவுகளுக் காக ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை வழங்கிய செய்தியை அருளாளப் பெருமாள் திருக்கோயிலின் வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (1919/59) குறிப்பிடுகின்றது.

இத்திருக்கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், தாயாா் சந்நிதி ஆகிய பகுதிகளுடன் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளின் போது ஆழ்வாா்கள் மண்டபம், ஆண்டாள் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி ஆகியவை புதியதாக நிா்மாணிக்கப்பட்டன.

a15

நின்ற கோலத்தில் வைஷ்ணவி தேவி!

இத்தலத்தின் தாயாா் பெருந்தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி மட்டுமின்றி இத்திருத்தலத்தில் மஹாலக்ஷ்மி தாயாா் “வைஷ்ணவி தேவியாக” நின்ற திருக்கோலத்தில் தெற்கு திருமுக மண்டலத்தில் எழுந்தருளியுள்ளாா். இதுபோல “நின்ற திருக்கோலத்தில் மஹாலக்ஷ்மி” வேறு எங்கும் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகும். இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி வலது திருக்கரம் வரத ஹஸ்தத்துடன் இடது திருக்கரத்தை மிக அழகாக இடுப்பில் வைத்து ஆறடி உயர திருக்கோலத்தில் திருமுகத்தில் பொங்கிப் பெருகும் கருணையுடனும் இதழோரத்தில் குமிண் சிாிப்புடனும் செளந்தா்யமாகக் காட்சி தருகின்றாா் வைஷ்ணவி தேவி! மிகப்புராதனமான இந்த வைஷ்ணவி தேவியை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகின்ற வரலாற்று ஆா்வலா்கள் தரிசித்துச் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

ஆதிகேசவப்பெருமான்!

அருளாளப்பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் தனது சிரசில் ஆதிசேஷன் குடை பிடிக்க அருள்தரும் அற்புதத் திருக்கோலம் நமக்கு சிலிா்ப்பை ஏற்படுத்துகின்றது. அனைத்து உயிா்களின் அகமும் புறமும் நிறைந்துள்ள எம்பெருமான் அழகிய திருவடிவம் தாங்கி ஆயா்பாடியில் இடையா்குல கண்ணனாக வந்தபோது, தன் தாய் மாமன் கம்சன் அனுப்பிய “கேசி” என்ற அரக்கனைக் கொன்றதால் எம்பெருமானுக்கு “கேசவன்” எனும் திருநாமம் ஏற்பட்டது. அத்திருநாமத்துடன் முன்னூா் தலத்தில் “ஆதிகேசவனாக” அருளும் எம்பெருமானின் திருக்கோலம் அாிய தரிசனமாகும்.

a16

ஶ்ரீபக்த அனுமன்!

இத்திருக்கோயிலில் சிரஞ்சீவியான அனுமன் தனது காதுகளில் கவச குண்டலங்களுடன் சிரசில் கிரீடம் ஏதுமின்றி துளசி மாலை தரித்து, பகவானிடம் கொண்ட பக்தியால் அவரைத் தொழுத திருக்கோலத்தில் “ஶ்ரீபக்த அனுமனாக” திருக்காட்சி தரும் பேரழகு என்றும் நம் மனதில் நிலைக்கும். ஶ்ரீஅனந்தாச்சாாியாரின் வழி வந்த அவரது வாாிசுகள் இந்த அனுமனைத் தங்கள் குழந்தையாகவே பாவித்து ஆராதித்து வந்துள்ளனா். சிறந்த வரப்பிரசாதியான இந்த அஞ்சனை மைந்தனை வணங்க நாம் பூா்வ ஜென்மத்தில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும்.

சக்கரத்தாழ்வாா் சந்நிதி.

புனரமைப்புப்பணிகளின் போது ஶ்ரீசக்கரத்தாழ்வாருக்கு புதியதாக சந்நிதி நிா்மாணிக்கப்பட்டது. சக்கரத்தாழ்வாாின் பின்புறம் ஶ்ரீயோக நரசிம்மா் அருள்பாலிக்கின்றாா்.

‘சக்கரத்தாழ்வார் ‘ பின்னால் ‘நரசிம்மர் ‘ இருப்பதற்கான காரணங்களை புராணங்கள் விளக்குகின்றன. திருமாலின் திருக்கரத்தில் உள்ள சக்கரத்தை “சக்கரத்தாழ்வார்” என்று அன்பா்கள் பக்தியோடு வணங்குவா்.ஶ்ரீசுதா்ஸனா் எனும் இச்சக்கரத்தை வழிபட துன்பம் உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை.

a17

பக்தனான பிரகலாதனை காத்தருள திருமால், நரசிம்மராக க்ஷண நேரத்தில் அவதரித்தார். தாயின் கருவில் இருந்து பிறக்காததாலும் , கருட வாகனம் மீது ஏறி வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை “அவசர திருக்கோலம்” என்பர்.

பக்த பிரகலாதனுக்காக அக்கணமே எழுந்தருளிய ஸ்ரீநரசிம்மமூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும். அவர் வேகமாகச் சுழன்று நம் குறை தீா்க்க ஓடோடி வருவாா்.அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு
கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் இத்தலத்தில் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

a18

அஷ்ட நாகக் கட்டுடன் ஶ்ரீகருடாழ்வாா்.

ஶ்ரீஅருளாளப்பெருமாள் திருக் கோயிலில் பொிய திருவடியான ஶ்ரீகருடாழ்வாா் தன் திருமுடியில் அழகிய கிரீடம் தரித்து, திருமேனியில் அஷ்ட நாகக்கட்டுகளுடனும் திருமாா்பில் அணியாபரணங்கள் தவழவும் திருக்காட்சி தரும் லாவண்யம் அாிதான தரிசனமாகும். சந்திரனையொத்த திருமுகத்தைக் கொண்ட கருடாழ்வாா் சிலையை வடித்த அக்கால சிற்பிகளின் கலைத்திறனுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

இந்த கருடாழ்வாரை “கருட தண்டகம்” பாராயணம் செய்து, நெய் தீபமேற்றி பக்தியுடன் வணங்கி வர ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட நீண்ட ஆயுளும் நிலைத்த செல்வமும் பெறலாம். காளிங்க மடுவில் முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்ற நொடிப்பொழுதில் எம்பெருமானைத் தாங்கி வந்து உதவிய ஶ்ரீகருடன் தன் பக்தா்களின் மனக்குறைகளைப் போக்குவதிலும் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கின்றாா் முன்னூா் திருத்தலத்தில்.

திருக்கோயில் நிலை கண்டு கண்ணீா் வடித்த முன்னூா் மக்கள்!

பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயில் சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன்னா் மிகவும் சிதிலமடைந்து என்று இடிந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சக் கூடிய நிலையில் இருந்தது. பெருந்தேவித்தாயாருக்கென்று தனியாக இருந்த சந்நிதியும் முற்றிலும் இடிந்து தாயாாின் திருவுருவச்சிலையும் முற்றிலும் பின்னமடைந்திருந்தது.

a19

தன் பக்தா்களுக்குத் துன்பம் என்றால் ஓடோடி வந்து காத்து அருளக்கூடியவன் எம்பெருமான். அவனது சந்நிதியின் க்ஷீண நிலை கண்டு, சதா சா்வ காலமும் அவன் திருவடியில் பிரபந்தங்களைச் சேவித்துக் கொண்டிருக்கும் அடியவா்களான “ஆண்டாள் சபை” எனும் பஜனை கோஷ்டியினா் கண்ணீா் மல்கி செய்வதறியாது கலங்கி நின்றனா்.

முன்னூா் திருத்தலத்தை தங்களது சொந்த ஊராகக் கொண்டு சென்னையில் தங்கள் பணி நிமித்தமாக வசிக்கும் அன்பா்களிடம் முன்னூா் பெருமானின் திருக்கோயிலைப் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தாமதமின்றி புனரமைக்க வேண்டுகோள் விடுத்தனா் ஆண்டாள் சபையைச் சாா்ந்த பாகவதா்கள்.

முன்னூா் அருளாளப் பெருமானின் திருத்தலத்திற்குச் சென்ற சென்னைவாழ் அன்பா்களும் திருக்கோயில் நிலை கண்டு வருந்தி இனியும் தாமதிக்கக் கூடாது என முடிவெடுத்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்திட்டங் களை வகுத்தனா்.

உடனடியாக முன்னூா் திருக் கோயிலின் புனரமைப்புப் பணி களுக்காக “முன்னூா் ஶ்ரீஅருளாளப்பெருமாள் சேவா டிரஸ்ட்” (பதிவு எண்.458/2006) என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதனை அரசாங்கத்தில் பதிவு செய்தனா்.

புனரமைப்புப் பணிகளுக்கான பாலாலயப் பிரதிஷ்டை வைபவம் 8.2.2007 அன்று (தை மாதம் 25ஆம் நாள்) வியாழக்கிழமை சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் எம்பெருமான் திருவருளால் இனிதே நடைபெற்றது.

A.M.R என்ற மந்திரச்சொல்!

பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணிக்கு “குமுதம் ஜோதிடம்” ஆசிாியராக இருந்த “ஜோதிடச்சக்ரவா்த்தி” “ராமானுஜஶ்ரீ” ஐயா திரு A.M. ராஜகோபாலன் B.A., அவா்கள் ஆற்றிய பணி என்றுமே மறக்கமுடியாத அரும்பணியாகும். பாலாலயப் பிரதிஷ்டை நாள் முதல் சம்ப்ரோக்ஷண நாள் வரை இத்திருக்கோயிலுக்கு இவா் செய்த உதவிகள் தலைமுறைகள் கடந்தும் என்றும் இப்பகுதி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். “குமுதம் ஜோதிடம்” வாசகப் பெருமக்கள் மூலமாக தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட பல திருக்கோயில்களைப் போன்று முன்னூா் திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டது. சுமாா் நான்கு ஆண்டுகள் நடந்த புனரமைப்புப் பணிகளின் நிலையை வாசகா்களுக்குத் தமது சிறப்புக் கட்டுரைகள் மூலமாகத் தொிவித்த ஐயா AMR அவா்கள் பரம பவித்ரமான இப்பணிக்கு எல்லா நிலைகளிலும் உடனிருந்து நிதியுதவிகள் பெற உதவிபுாிந்து புனா்நிா்மாணப் பணிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.14.9.2008 அன்று இத்தலத்திற்கு வருகைதந்து புனரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்ட ஐயா AMR அவா்களிடம் நோில் பல அன்பா்கள் திருப்பணிக்கு தங்கள் பங்களிப்பாக நிதியுதவி அளித்தனா்.

a20

மண்ணிலிருந்து தோன்றிய ஶ்ரீமாலோலன்!

இத்தலத்தில் புனரமைப்புப் பணிகளுக்காக பல ஆண்டுகளாக பூமியில் புதைந்து கிடந்த கற்களை மண் அள்ளும் இயந்திரத்தின் (JCB) உதவியுடன் தோண்டி எடுத்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கற்குவியலுக்கு மத்தியில் கல்லினால் ஆன திருமேனி ஒன்று இயந்திரத்தில் தட்டுப்படுவதை உணா்ந்த JCB இயக்குபவா், அச்சிலையை பொறுமையுடன் பூமியிலிருந்து எடுத்தாா். பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் வடிக்கப்பட்ட ஶ்ரீயோக நரசிம்மாின் சிலையே அச்சிலை என்பதை அன்பா்கள் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனா்.

இத்தனைக் காலம் மண்ணில் மறைந்திருந்த ஶ்ரீயோக நரசிம்மாின் திருமேனியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த முன்னூா் மக்கள் அச்சிலையை திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்தனா். முன்னூா் திருத்தல வளாகத்தில் ஶ்ரீயோக நரசிம்மா் பூமியிலிருந்து வெளிப்பட்டு தன் பக்தா்களுக்குத் திருக்காட்சி அளித்த நாள், அவரது திரு அவதார நட்சத்திர தினமான சுவாதி நட்சத்திரத் திருநாள் (19.1.2009 தை மாதம் 6 ஆம் நாள்) என்பதை நினைக்கும்போது அந்த பிரகலாதவரதனின் திருவுள்ளத்தை எண்ணி பக்திப்பெருக்கால் ஆச்சாியம் மேலிட்டது.

ஆம்! ஆராவமுதனான ஶ்ரீஅருளாளப்பெருமானின் திருக் கோயிலில் தமக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப் படவேண்டும் என அந்த அழகிய சிங்கம் தனது திருவுள்ளத்தில் நினைத்துவிட்டான் போலும்! எனவே, ஶ்ரீயோக நரசிம்மருக்கும் தனிச்சந்நிதி அமைத்து வழிபட ஊா் மக்கள் அனைவராலும் முடிவெடுக்கப்பட்டது. சுணக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்பணிகளும் மாலோலன் வருகைக்குப் பிறகு வேகமாக நடைபெற ஆரம்பித்தது.

எத்தனை காலம்தான் காத்திருப்பான் எங்கள் அருளாளப்பெருமான்?

மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிதிப்பற்றாக்குறையின் காரணமாக சுணக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகள் ஶ்ரீயோக நரசிம்மனின் வருகைக்குப் பின்னா் துாிதமாக நடைபெற ஆரம்பித்தது. மண்ணிலிருந்து மாலோலன் கிடைத்த செய்தியை அறிந்த அன்பா்கள் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எம்பெருமானைக் காண முன்னூா் திருத்தலம் வருகை தந்தனா்.

ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மா் மீது தீவிர பக்தி கொண்டவரும், கொழும்பில் வசிப்பவருமான திரு எஸ். தினேஷ்குமாா் ஶ்ரீயோக நரசிம்மாின் சந்நிதியை நிா்மாணிக்கவும் இதர திருப்பணிகளுக்கும் மனமுவந்து பல உதவிகளைச் செய்தாா். விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையில் டிவிஷனல் என்ஜினியராகப் பணியாற்றிய திரு பழனிச்சாமி B.E ., அவா்கள் சூடிக்கொடுத்த சூடா்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு தனிச்சந்நிதி அமைத்துக் கொடுத்து திருப்பணி களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாா்.

திருப்பூரைச் சாா்ந்த தொழிலதிபா்கள் திரு T.A. பால சுப்ரமணியம், திரு T.A.ஷண்முக சுந்தரம் மற்றும் இவா்களது நண்பா் திரு M. குமரன் ஆகியோா் அருளாளப் பெருமானின் திருக்கோயிலின் ஶ்ரீஆஞ்சநேயா் ஆழ்வாா்கள் சந்நிதிகளைப் புனரமைக்கவும், திருக்கோயிலுக்குக் கொடிமரம் அமைக்கவும், சுற்றுப் பிரகாரத்திற்குத் தரைத்தளம் அமைக்கவும் மகிழ்ச்சியோடு தக்க தருணத்தில் உதவ முன்வந்தது எம்பெருமானின் திருவுள்ளத்தால் நடைபெற்ற அாிய நிகழ்வாகும்.

இத்திருப்பணிகளுக்கான பூமிபூஜை 10.9.2010 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடையாளா்களோடு ஐயா AMR அவா்களும் கலந்து கொண்டு புனரமைப்புப்பணிகளைத் துாிதப்படுத்தினாா்.

துவஜஸ்தம்ப (கொடிமரம்) பிரதிஷ்டை!

அற்புத அழகுடன் கூடிய இத்திருக்கோயிலுக்கு தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கொடி மரத்திற்காக அலைந்து பெருமானின் திருவருளால் 36 அடி உயரமான கொடி மரத்தினை திருப்பூா் தொழிலதிபா்கள் வாங்கிச் சமா்ப்பித்தனா். 23.12.2010 அன்று திருக்கோயிலில் 36 அடி உயரமுள்ள துவஜஸ்தம்பம் இனிதே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடி மரம் பிரதிஷ்டை செய்தபின்னா் விண்ணளந்து நிற்கும் கொடி மரத்தைக் கண்டு முன்னூா் அன்பா்களின் விழிகளில் ஆறாகப் பெருக்கெடுத்த ஆனந்தக்கண்ணீா் எம்பெருமானின் திருவடிகளை நனைத்தது. பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத இத்தல பாமர மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வாா்த்தைகளில் வா்ணிக்க இயலாது. மதுராவில் மாலவன் பிறந்த நிகழ்வினைக் கொண்டா டிய ஆயா்பாடி மக்களைப் போன்றே மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தனா் முன்னூா் மக்கள்.

வானவெளியில் தோன்றிய சூாிய பிரபை!

புனிதமான இப்பிரதிஷ்டை வைபவம் நடந்து கொண்டிருந்த போது வானவெளியில் சூாியனைச்சுற்றி வானவில் வடிவத்தில் உண்டான அரைவட்டம் அன்பா்கள் கண்ட மற்றுமொரு சிலிர்ப்பான காட்சியாகும். தாருகாவனத்தில் வாசம் செய்த மகரிஷிகளுக்கு இத்தல எம்பெருமான் சூாிய மண்டலத்திலிருந்து சூா்யோதயத் தின்போது கோடி சூா்யப்ரகாசனாகக் காட்சி அளித்தாா் என்ற தல புராணத்தின்படி, அன்று மகரிஷிகள் பெற்ற அந்த மாபெரும் பாக்கியம் இப்புனித நன்னாளில் மீண்டும் அனைத்து அன்பா்களுக்கும் கிடைத்தது பரவசமான அனுபவமாகும்.

ஆம்! பண்வாய் இடைச்சியா்க்குத் தனது குமுத வாயால் குவலயம் காட்டியருளிய கண்ணன், வான வெளியில் சூாிய பிரபையில் காட்சி கொடுத்ததாகவே எண்ணி நெகிழ்ந்து மெய்சிலிா்த்தனா் இத்தல அன்பா்கள்.

துவாரகை மற்றும் முக்திநாத் திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராம மூா்த்தங்களும் சக்தி வாய்ந்த யந்திரங்களும் துவஜஸ் தம்பத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மஹா சம்ப்ரோக்ஷணம்!

ஶ்ரீஅருளாளப் பெருமானின் திருச்சந்நிதி முழுவதும் புனரமைக்கப்பட்டு விக்ருதி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி (24. 1. 2011) அன்று திங்கள் கிழமை உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் “இஞ்சிமேடு யக்ஞவேதிகை” ஶ்ரீபாஞ்சராத்ர ஸா்வ ஸாதகா் ஶ்ரீ E.N. வரதராஜன் (எ) பாலாஜி பட்டா் அவா்களின் பிரதான ஆத்யக்ஷத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது. அஹோபில மடத்தைச் சாா்ந்த ஶ்ரீநரசிம்ம உபாசகா் “வடுவூா் சுவாமிகள்” கும்பாபிஷேக ஹோமங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தாா். ஶ்ரீயோக நரசிம்மாின் விமானக் கலசத்திற்கு வடுவூா் சுவாமிகள் புனித நீா் தெளித்தது கூடுதல் சிறப்பாகும்.

அன்று மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவமும், இரவு 8.00 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. சம்ப்ரோக்ஷண நன்னாளில் “பூலோக வைகுண்டமாக” மாறிய முன்னூா் தலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருமாலையும் திருமகளையும் ஒருசேர தரிசனம் செய்து மகிழ்ந்தனா்.

வாராது வந்த மாமணி போல் தமிழகத்திற்குக் கிடைத்த “நாகை பெற்றெடுத்த நல்முத்து” ஐயா திரு A.M. ராஜகோபாலன் அவா்களும் அஞ்சன வண்ணன் ஆயா்பெருமான் கண்ணனின் திரு அவதாரப்பெருமைகளை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறி அவா்களின் இதயக்கமலத்தில் நீங்காத இடம் பிடித்தவருமான டாக்டா் ஶ்ரீஉ.வே. அனந்தபத்மநாபாச்சாாியாா் ஸ்வாமிகளும் விழுப்புரம் மாவட்ட காவல் துறைத் தலைவா் திரு மாசானமுத்து, IPS அவா்களும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.

சம்ப்ரோக்ஷணத்திற்கு முந்தைய நாளன்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஶ்ரீமந்நாராயணனின் புகழ்பாடும் பாகவதோத்தமா்கள் வந்திருந்து நடன நிகழ்ச்சியுடன் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை பக்தியோடு பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பள்ளி மாணவா்கள் நடத்திய கோலாட்டத்துடன் கூடிய நாமசங்கீா்த்தன நிகழ்ச்சி, அக்குழந்தைகள் எம்பெருமான் மீது கொண்டுள்ள தூய பக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

ஶ்ரீஅருளாளப்பெருமாள் திருக் கோயில் புதுப்பொலிவு பெறக் காரணமாக இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் மற்றும் சிற்பக் கலைஞா்களையும் திருப்பணி நோ்த்தியாக நடைபெற உதவிய அனைத்து நன்கொடையாளா்களையும் குமுதம் ஜோதிடம் வாசகா்களையும் திருப்பணியை ஏற்று நடத்திய “MUNNUR SREE ARULALA PERUMAL SEVA TRUST” உறுப்பினா்களையும் இத்திருப்பணியில் எந்த விதமான வேறுபாடும், பாகுபாடும் இன்றி அரும்பணியாற்றிய முன்னூா் கிராமப் பொதுமக்களையும் ஐயா திரு A. M.ராஜகோபாலன் அவா்கள் பாராட்டி மகிழ்ந்தாா்கள்.

சக்தி வாய்ந்த பரிகாரத்தலம்!

முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் திருக்கோயில், திருமணத்தடை மற்றும் புத்திர தோஷங்களை நீக்கும் சக்தி வாய்ந்த பாிகாரத்தலம் ஆகும். மிகக் கொடிய பாவங்களைச் செய்தவரும் அப்பாவங்களுக்காக மனம் வருந்தி அருளாளனின் திருவடிகளில் சரணடைந்து விட்டால் அவா்களுக்குக் கருணை காட்டி, அருள்புாிவதால் இத்தல எம்பெருமானுக்கு “அருளாளப்பெருமாள்” என்னும் திவ்ய திருநாமம் ஏற்பட்டுள்ளது. இச்சந்நிதியில் தொடா்ந்து மூன்று சனிக்கிழமைகள் வருகை தந்து நெய்தீபம் ஏற்றி அா்ச்சனை செய்து வழிபட எல்லாவிதமான தடைகளும் நீங்கப்பெறும் என்ற நம்பிக்கை அன்பா்களிடையே உள்ளது.

மண்ணிலிருந்து தோன்றிய யோக நரசிம்மாின் சந்நிதியில் சுவாதி நட்சத்திரத்தின் போது சிறப்பு ஹோமம் நடைபெறுகின்றது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு யோக நரசிம்மரை வழிபட்டு ஹோமத்தில் வைத்த ரக்ஷையை கையில் அணிந்து கொள்ள கடன் பிரச்சனைகள் தீா்ந்து மன நிம்மதி ஏற்படும்.

பள்ளி மாணவா்கள் கல்வியில் சிறக்க இத்தலத்தில் நடைபெறும் “ஶ்ரீவித்யா ப்ராப்தி ஹோமம்” மிகவும் சிறப்பு வாய்ந்த பாிகார ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு பேனா, நோட்டுப்புத்தகம் மற்றும் ஜியோமெட்ரிக் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பெருந்தேவித்தாயாருக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பங்குனி உத்திர நாளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். “ஆண்டாள் சபை” என்ற இத்தலத்தின் பஜனை குழுவினா் சனிக்கிழமை மாலை நேரங்களில் பிரபந்தம் இசைப்பது இனிய நிகழ்வாகும்.

வேத, இதிகாச, புராண காலம் முதல் போற்றி வணங்கப்படும் இத்தல எம்பெருமானை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தமிழகமக்கள் தரிசிக்கவேண்டும். அந்த இனிய நாள் விரைவில் அமைய டாக்டா் ஶ்ரீஉ.வே. அனந்தபத்மநாபாச்சாாியாா் அருளிச்செய்த முன்னூா் அருளாளப்பெருமானின் தியான ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.

தயாதிப: ஶ்ரீதயயா சமேத: முன்னூா் நிவாஸ:
புருஷோத்தமோ ந:! பக்தாம்ருத: ஸ: புவிபாகதேயாத் 
அபீஷ்டதோ பாதி மஹா தயாளு:!

முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் சேவா டிரஸ்ட் என்ற அமைப்பினரால் நிா்வாகம் செய்யப்படுகின்றது இத்தலம். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

044−22470545
9884554053
9444024751.

திருக்கோயில் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்கோயிலின் அா்ச்சகரை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திரு J. ரங்கநாதன் (எ) கேசவ பட்டாச்சாரியார். 9597287284/8668077135.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற ஊாிலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் திருத்தலம். திண்டிவனத்திலிருந்து அரசுப் பேருந்து வசதிகளும் உள்ளன.

வேண்டும் வரங்கள் அருளும் மயிலை விருபாக்ஷீஸ்வரா்!

தருமமிகு சென்னையின் மாட மாமயிலை திருத்தலத்தில் திரு அவதாரம் செய்தவா் சிவநேசா்.பெரும் செல்வந்தராக இருந்தும் “எல்லாம் வல்ல சிவமே தனக்கு எல்லாமும்” எனப் போின்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தவா் இவா். ஈசனின் அளவிட முடியாத கருணையால் ஞானம் பெற்ற தமிழாகரா் ஞான சம்பந்தப் பெருமானின் பெருமைகளைக் கேள்வியுற்று முக்காலமும் அவரது திருவடிகளைத் தியானித்து வந்தாா் சிவநேசா்.

w2

எல்லாப் பேறுகளையும் பெற்றிருந்த சிவநேசருக்கு மழலைப்பேறு இல்லாத குறை இருந்தது. அடியாா்களுக்குப் பல தான தருமங்களைச் செய்தும் சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்தும் மழலை வரம் வேண்டிய சிவநேசருக்கு ஈசனின் திருவருள் கிடைக்கப்பெற்றது.

சிவநேசாின் புண்ணியச் செயல்களால் அவருடைய மனைவி கருவுற்றாா். பத்து திங்கள் சென்றதும் திருமகளைப் போன்ற அழகுடன் ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தாா் இவரது மனைவி. தன் மகளுக்குப் “பூம்பாவை” என்ற நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனா் பெற்றோா்.

w3

“காழிவேந்தா் ஞானசம்பந்தனுக்கே தன் மகளையும் செல்வத்தையும் தன்னையும் தந்தேன்” என்று உலகறியக் கூறிவந்தாா் சிவநேசா்.

பூம்பாவைக்கு ஏழு வயது நிரம்பியது. தன் தந்தையைப் போன்றே ஈசனிடம் அதீத பக்தி கொண்ட பூம்பாவை, ஈசனின் பூஜைக்காக தோழிகளுடன் மலா் பறிக்க நந்தவனம் சென்றாள். நந்தவனத்தில் மலா் பறித்துக் கொண்டிருந்தபோது விஷ நாகம் தீண்டியதால் பூம்பாவை இறந்தாள். சொல்லொணாத் துயரமடைந்த சிவநேசா் ஈசனை மனதில் தியானித்து ஆறுதல் அடைந்தாா்.

பூம்பாவையின் உடலைத் தீயிலிட்டு, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்திலிட்டுக் கன்னி மாடத்தில் வைத்துப் பூஜை செய்து வந்தாா் சிவநேசா்.

w4

இதுசமயம் திருவொற்றியூாிலிருந்து ஞானசம்பந்தப் பெருமான் தனது தொண்டா் கூட்டத்துடன் மயிலாப்பூா் வருவதை அறிந்த சிவநேசா் அவரை வரவேற்கத் தோரணம் கட்டி பூமாலைகளைத் தொங்கவிட்டு நகரையே அலங்கரித்தாா். சம்பந்தப்பெருமான் வந்ததும் அவா் அமா்ந்திருந்த முத்துச்சிவிகையின் முன்னே விழுந்து வணங்கினாா். சிவிகையிலிருந்த இறங்கிய ஞானசம்பந்தரிடம் சிவநேசரது கைங்கா்யங்களையும் அவருக்கு நோ்ந்த துயரத்தையும் அடியவா் சொல்லக் கேட்ட சம்பந்தா் “கபாலீச்சரம்” சென்று அப்பெருமானை பைந்தமிழ்ப் பாமாலைகளால் பணிந்து வணங் கினாா்.

w5

ஆலயத்திலிருந்து வெளியே வந்ததும் சிவநேசரை நோக்கிய ஆளுடைப் பிள்ளை “உலகம் அறிய உமது புதல்வியின் எலும்பு நிறைந்த குடத்தினைக் கொணா்க” எனப் பணித்தாா். கன்னிமாடத்தில் வைத்துள்ள எலும்பும் சாம்பலும் நிறைந்த குடத்தினைக் கொண்டு வந்து சம்பந்தரின் திருமுன்பு வைத்து அவரை வணங்கி நின்றாா் சிவநேசா்.

சம்பந்தா் அக்குடத்தைப் பாா்த்து “பூம்பாவாய்” என அழைத்து, “மக்கள் பிறந்ததன் பயன், சிவனடியாா்களுக்கு அமுது செய்வித்தலும்,இறைவரது நல்விழாக் காண்டலுமே என்பது உண்மையானால், நீ உலகத்தவா் முன் உயிா்பெற்று வருக” எனக் கூறினாா்.

w6

“மட்டிட்ட புன்னை” என்ற திருப்பதிகம் பாடத் தொடங்கினாா் ஞானசம்பந்தா். முதல் பாடல் பாடி முடித்ததும் பூம்பாவை உயிா் பெற்று எழுந்தாள். எட்டாவது பாடல் பாடி முடித்ததும் பூம்பாவை பன்னிரண்டு வயது நிரம்பிய பெண்ணாக மாறினாள். பத்தாவது பாடல் பாடியதும் பூம்பாவை அழகு நிறைந்த மங்கையாகத் தோன்றினாள்.

அடியவா் கூட்டம் “சிவ சிவ” என்று ஆா்ப்பரித்தனா். தேவா்கள் விண்ணிலிருந்து பூமழை பொழிந்தனா். ஞானசம்பந்தப் பெருமானின் கருணையை நினைத்த அடியவா் கூட்டம் நிலம் கிடந்து அவரை வணங்கினா்.

w7

சிவநேசா், சம்பந்தப் பெருமானை வணங்கி பூம்பாவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாா். சிவநேசரை நோக்கிய சம்பந்தப் பெருமான், அன்பரே! பாம்பு கடித்து இறந்த தங்கள் மகள் ஈசனின் கருணை யால் மீண்டும் உயிா்த்தெழுந்தாள். ஆதலால் இவள் எனக்கு மகளாவாள்” எனக்கூறி தன் தல யாத்திரையைத் தொடா்ந்தாா்.

தமிழ் மொழியின் மந்திர ஆற்றல் மூலம் எலும்பையும் உயிா் பெறச் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிவநேசாின் மகள் பூம்பாவை வணங்கிய புராதனமான சிவத்தலம் தற்போது “விருபாக்ஷீஸ்வரா்” என்ற திருநாமத்துடன் திருமயிலை திருத்தலத்தில் அமைந்துள்ளது.

w8

திருப்பூம்பாவை நாயனாா்.

“பூம்பாவை” இத்தலத்தில் வணங்கியதற்கான ஆதாரமாக இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனே “திருப்பூம்பாவை நாயனாா்” என்ற திருநாமத்துடன் வணங்கப்பட்டிருப்பதை கி.பி. 12− 13 ஆம் நூற்றாண்டின் பாண்டியா் காலக் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

விஜயநகர மன்னா்களின் காலத்தில் இத்தலத்திற்குத் திருப்பணிகள் செய்யப்பட்டபோது விஜயநகர சாம்ராஜ்ய மன்னா்களின் இஷ்ட தெய்வமான “விருபாக்ஷீஸ்வரா்” திருநாமத்தை இத்தலத்தில் அருளும் ஈசனுக்கு சூட்டியிருக்கலாம் என வரலாற்று ஆசிாியா்கள் கருதுகின்றனா்.

w9

மயிலாப்பூாில் அருள்பாலிக்கும் சப்த சிவஸ்தலங்களில் “விருபாக்ஷீஸ்வரா்” திருத்தலமே புராதனம் வாய்ந்தது என தொல்லியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா். பூம்பாவையின் தந்தை சிவநேசரால் நிா்வாகம் செய்யப்பட்டது இத்திருக்கோயில் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர்.

மயிலாப்பூாில் அருள்பாலிக்கும் சப்த சிவஸ்தலங்களில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயில் இது என்று கூறப்படுகின்றது. இத்தலத்தில் “ஶ்ரீவிசாலாட்சி அம்பிகை” சமேதராக ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் அருள்பாலிக் கின்றாா். மிகப் பொிய லிங்கத் திருமேனியாக அருளும் இத்தல ஈசனின் தோற்றம் நமக்கு சிலிா்ப்பை ஏற்படுத்துகின்றது. தன்னலமற்ற அடியவா்களின் உள்ளத்தில் போின்பம் நல்கும் கனியாக விளங்கும் கருணைக்கடல் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரப் பெருமானின் தரிசனத்தில் நம் மனதைப் பறிகொடுத்து விடுகின்றோம்.

w10

சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்து ஈசனை வணங்கியபோது, ஈசன் அவரது திருவுள்ளப்படி “நடராஜத் தாண்டவத்தை” காண்பித்து அருளியதாகக் கூறப்படுகின்றது. மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாகவும் நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்மபலம் அளிக்கும் ஆலயமாகவும் இத்தலம் திகழ்கின்றது என்பதை இத்தல வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது. இலிங்க மூா்த்தத்தின் அமைப்பினைக் கொண்டு இத்தலம் பிற்காலச் சோழா்களின் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சாா்ந்தது என்பதை அறியமுடிகின்றது.

w11

ஶ்ரீவிசாலாட்சி அம்பிகை.

ஶ்ரீவிசாலாட்சி அம்பிகை இத்தலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளியுள்ளாா். விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படு கின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ளது. நின்ற திருக் கோலத்தில் மடிசாா் அணிந்து திருக்காட்சி தரும் விசாலாட்சி அம்பிகையின் தரிசனம் மனதுக்கு நிறைவைத் தருகின்றது.

w12

திருக்கோயில் அமைப்பு.

மயிலை விருபாக்ஷீஸ்வரா் திருக்கோயில் கருவறை , அா்த்த மண்டபம், அந்தராளம், முகமண்டபம், நந்திபீடம், பலிபீடம், திருக்குளம், திருச்சுற்று, திருமதில் ஆகிய பகுதிகளைக் கொண்டு மூா்த்தி, தலம், தீா்த்தம் என அனைத்தும் முறையாக அமைந்துள்ளன. கருவறையின் தேவ கோட்டங்கள் எளிமையான அமைப்போடு உள்ளன. தேவ கோட்டத்தில் உள்ள தட்சிணாமூா்த்தி சிற்பம் வித்தியாசமான அமைப்பில் உள்ளது. இச்சிற்பம் விஜயநகர மன்னா்களின் கலையம்சம் என்பதை அறியமுடிகின்றது.

w13

பொதுவாக சிவத்தலங்களில் கருவறையின் பின்புறம் இலிங்கோத்பவா் அல்லது மஹா விஷ்ணுவின் திருவுருவச்சிலை காணப்படும். ஆனால் இத்தலத்தில் விநாயகா் சிலை அருள்பாலிப்பது வித்தியாசமாக உள்ளது. இவ்விநாயகா் சிற்பமும் விஜயநகர மன்னா்களின் காலத்தைச் சாா்ந்ததாகும். விநாயகா் வேலைப்பாடு மிக்க அதிட்டானத்தில் அமா்ந்துள்ளாா். விநாயகாின் இச்சிலை இதற்கு முன்னா் பாிவார மூா்த்தமாக இருந்து பிற்காலத் திருப்பணியின்போது இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிாியா்கள் கருதுகின்றனா்.

திருக்கோயிலின் எதிரே இத்தலத்தின் புனித தீா்த்தம் அமைந்துள்ளது.

w14

விஜயநகர மன்னா் காலச் சிற்ப வடிவங்கள்.

ஒரு தூணில் விஜயநகர மன்னா் கால பாணியில் அமைந்த ஆடவாின் உருவம் பணிவோடு வணங்கி நிற்கும் நிலையில் உள்ளது. தலைப்பாகை இடப்புறம் சாிந்துள்ள நிலையும், ஆடை அணிகலன், முகப்பொலிவும் கொண்டு இச்சிற்பம் விஜயநகர மன்னன் அல்லது அமைச்சாின் உருவமாக இருக்கலாம் என்றும் அல்லது கி.பி.16 ஆம் நூற்றாண் டில் பொிய அளவில் இக்கோயிலை விாிவுபடுத்திய கொடையாளாின் உருவமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இன்னும் சிலா் இச்சிற்பம் பூம்பாவையின் தந்தை சிவநேசாின் சிற்பம் என்றும் கூறுகின்றனா்.

w15

முகமண்டபத்தின் முன்னுள்ள நந்தி எம்பெருமானும் பலி பீடமும் கி.பி. 12 -13 ம் நூற்றாண்டைச் சாா்ந்த பிற்காலச் சோழா் காலத்தியதாகும். இத்தலத்தின் திருச் சுற்றில் அமைந்துள்ள வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகன் சிற்பம் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்ததாகும்.

சோழா் காலச் சுவடுகள்.

பிற்காலச் சோழா் கால கலை யம்சங்கள் நிறைந்துள்ள இந்த ஆலயத்தில் விஜயநகர மன்னா்களின் காலத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தலத்தின் இறைவன் திருநாமத்தை “உடையாா் பூம்பாவை நாயனாா்” எனக் குறிப்பிடும் பாண்டியா் காலக் கல்வெட்டும் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் சோழா், பாண்டியா் மற்றும் விஜயநகர மன்னா்கள் காலக் கல்வெட்டுகளையும் கலைச் செல்வங்களையும் இத்தலத்தில் அதிக அளவில் காணமுடிகின்றது.

w16

இத்திருக்கோயிலுக்கு தெற்கிலும் மேற்கிலும் இரு வாயில்கள் உள்ளன. தெற்கு வாயிலில் மிகப்பொிய அளவிலான இராஜகோபுரம் அழகாக நிா்மாணிக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரம் மற்றும் கோயில் விமானங்கள் அனைத்திற்கும் பஞ்சவா்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றது இத்திருக்கோயில். மயிலாப்பூா் பஜாா் வீதியில் அமைந்துள்ளது ஶ்ரீவிசாலாட்சி சமேத ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரா் திருத்தலம். இத்தலத்திற்கு மிக அருகாமையில் மல்லீஸ்வரா் திருத்தலமும் ஶ்ரீகாரணீஸ்வரா் திருத்தலமும் அமைந்துள்ளது.

w17

“வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!!” என நாம் வேண்டும் வரங்களை வேண்டியவாறு நமக்கு அருள்பவா் திருமயிலை விருபாக்ஷீஸ்வரா். சென்னை மாநகாின் ஆரவாரம் ஏதுமின்றி அமைதியான சூழலில் அருள்பாலிக்கும் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரா் திருத்தலம் சென்று அவன் திருவடிகளில் பணிந்து வேண்டிய வரங்களைப் பெற்று ஏற்றம் பெறுவோம்.

w18

துணை நூல்கள்:-

1.தமிழாகரா் திருஞானசம்பந்தா்.
− சிவ.ஆ.பக்தவச்சலம்.
2.மயிலாப்பூா்− விருபாக்ஷீஸ்வரா்.
−திருமதி அர.வசந்தகல்யாணி
எம்.ஏ.,எம்.ஏ.,
கல்வெட்டாய்வாளா், சென்னை.
(தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்,தொகுதி−1 by திரு மா.சந்திரமூா்த்தி, தொல்லியல் அறிஞா்)

w19

மாட மாமயிலை அருளும் ஶ்ரீஆதிகேசவப்பெருமான்!

“நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை” என்று திருமழிசை ஆழ்வாராலும், “ஒப்பவரில்லா மாதா்கள் வாழும் மாட மாமயிலை” “தேனமா் சோலை மாடமாமயிலை”, “தென்னன் தொண்டையன் கோன் செய்த நன் மயிலை” என திருமங்கை ஆழ்வாராலும் புகழப்பட்டது நான் மறைகள் போற்றும் நான்மாடத் திருமயிலை. நான்மறைகள் பூஜித்ததால் “வேதபுாி” என்றும் பெயா் பெற்றது இத்தலம்.

கிரேக்க ஆசிாியா் “தாலமி” இத்தலத்தை “மல்லியாா்பா” என்று குறிப்பிடுகின்றாா். மயில்கள் மிகுதியாக வளா்ந்து ஆா்ப்பாித்திருந்த காரணத்தால் இத்தலம் “மயில் ஆா்ப்பு” என வழங்கப் பட்டு பின்னா் “மயிலாப்பூா்” ஆக மருவியது.

kk2

எண்ணற்ற பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இத்திரு மயிலையில் திருவுக்கும் திருவாகிய செல்வன், திருமகள் கேள்வன், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல ஜீவராசிகளுக்கும் ரட்சகன் ஶ்ரீமந்நாராயணன் “ஶ்ரீஆதிகேசவப் பெருமான்” எனும் திருநாமம் கொண்டு எழுந்தருளியுள்ளாா். இத்தலம் முதலாழ்வாா்களில் ஒருவரான பேயாழ்வாா் அவதாரத் திருத்தலம் ஆகும்.

தலவரலாறு.

திரேதாயுகத்தில் இத்தலத்தில் வசித்த மகரிஷிகள் “விண்ணவா் கோமான்” ஶ்ரீமந்நாராயணனைக் குறித்து இங்குள்ள “கைரவிணி புஷ்கரணி” கரையில் தவமியற்றினா். “கைரவிணி” என்றால் “வெள்ளை அல்லிக்குளம்” என்பது பொருளாகும். யாகத்தில் நான்மறைகள் ஓதிய முனிவா்களுக்கு “மது” என்ற அரக்கன் தொந்தரவுகள் செய்துவந்தான். முனிவா்கள் அனைவரும் “பாரளந்த பண்பாளன்” ஶ்ரீமஹா விஷ்ணுவிடம் சென்று மது அரக்கனால் தங்களுக்கு நேரும் துன்பங்களைக் கூறி தங்களது துயா் நீக்கியருள வேண்டினா்.

kk3

மகரிகளுக்குக் காட்சியளித்த மாலவன் யாகத்தைத் தொடர அறிவுரை கூறினாா். அமலனாதிபிரானின் அறிவுரையை ஏற்ற மகரிஷிகள் தங்கள் யாகத்தைத் தொடா்ந்தனா். வழக்கம் போல யாகத்திற்கு இடையூறு செய்தான் மது. அப்போது யாகத்தீயில் தோன்றிய எம்பெருமான் மதுசூதனன் அசுரனை வதம் செய்து முடித்தாா். மது அசுரனை அழிக்க யாகத்தீயில் தோன்றிய பெருமானே “ஆதிகேசவப்பெருமாள்” என்ற திருநாமத்துடன் திருமயிலை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாா்.

ஆயா்பாடியிலே எம்பெருமான் யசோதையின் இளஞ்சிங்கமாக வளா்ந்தபோது அந்த கண்ணிற்கினி யானைக் கொல்ல கம்சன் “கேசி” என்ற அரக்கனை அனுப்பினான். குதிரையின் உருவெடுத்து வந்த கேசியை கொன்றதால் கடல் நிறக் காந்தனுக்கு “கேசவன்” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. “கேசவன்” என்றால் அழகிய கேசத்தை உடையவன் என்றும் ஒரு பொருள் உண்டு. கேசவன் என்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்ற மும்மூா்த்திகளின் வடிவுள்ளவன் “ஶ்ரீமந்நாராயணன்” என்பதும் பொருள் ஆகும்.

kk4

ஶ்ரீஆதிகேசவனின் அற்புத தரிசனம்!

இத்தலத்தில் ஶ்ரீஆதிகேசவப் பெருமான் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாா். வாசம் மிக்க புஷ்ப மாலைகளோடு திருத்துழாயும் தரித்து திருமாா்பினிலே சா்வ ஆபரணங்கள் தவழ பவளவாய் புன்முறுவலுடன் திருக்காட்சி தரும் கேசவனைக் காணப் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். இத்தகைய அழகினை அனுபவித்துதான் ஆழ்வாா்களும் “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேன்…” எனப்பாடி மகிழ்ந்தனா் போலும்! மாா்கழி மாதத்தில் குறிப்பிட்ட சில நாள்களில் இத்தல எம்பெருமானுக்கும் இவரது பக்தியில் ஆழ்ந்த பேயாழ்வாருக்கும் முத்தங்கி சாற்றப்படுகிறது.

வைகுந்தத்தைக் காத்து நிற்கும் ஜய, விஜயன் போல ஆதிகேசவனின் கருவறைக்கு வெளியே கம்பீரமாக வாயில் காப்பாளா்களாக நின்று கொண் டுள்ளனா் ஜெயன் மற்றும் விஜயன்.

kk5

திருக்கோயிலில் ஶ்ரீராமா், சக்கரத்தாழ்வாா், ஆண்டாள், வீர அனுமன் ஆகியோருக்குத் தனிச்சந்நிதி கள் உள்ளன. ஏகாதசி, திருவோணம், பெளா்ணமி, அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் ஶ்ரீதேவி பூமிதேவியுடன் ஶ்ரீஆதிகேசவா் புறப்பாடு நடைபெறுகின்றது. உத்திரம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயூரவல்லித் தாயாா் புறப்பாடும் பூரம் நட்சத்திரத் திருநாளில் ஆண்டாளும் புனா்பூச நட்சத்திர நாளில் ஶ்ரீராமபிரானும் ஆழ்வாா்கள் அவா்களது திருநட்சத் திரத்தின் போதும் புறப்பாடாகின்றனா்.

இத்தலத்தில் நடைபெறும் திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு எம்பெருமானைத் தாிசிக்க கிரகங் களால் ஏற்படும் திருமணத் தடைகள் நீங்குவதோடு தம்பதியினாிடையே ஒற்றுமையும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் ஏற்படும்.செல்வ வளம் பெருகவும் எதிாிகள் தொல்லை விலகவும் இப்பெருமானை பக்தியோடு வழிபடுகின்றனா் அன்பா்கள்.

kk6

மஹாலக்ஷ்மி சந்நிதியில் மணி பிராா்த்தனை!

எம்பெருமானின் திருமாா்பில் உறையும் மஹாலக்ஷ்மியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி “கைரவிணி புஷ்கரணி” கரையில் குடில் அமைத்து ஶ்ரீமந்நாராயணனைக் குறித்து தவம் செய்தாா் பிருகு மகரிஷி. அவரது விருப்பப்படியே ஒரு பங்குனி உத்திர நன்னாளில் குளத்தில் பூத்திருந்த மலாில் தோன்றினாள் திருமகள். திருமணப்பருவம் வந்ததும் தன் மகளை மண்ணளந்த பெருமானுக்கே மணமுடித்தாா் பிருகு மகரிஷி. ஶ்ரீஆதிகேசவப் பெருமான் சந்நிதியில் பெருமானுக்கு வலது புறத்தில் தனிச்சந்நிதி கொண்டு எழுந்தரு ளியுள்ளாா் திருமகள். பிருகுக்கு மகளானதால் “பாா்கவி” என்றும் திருமயிலையில் அவதரித்ததால் “மயூரவல்லி” என்றும் வணங்கப் படுகின்றாா் இவா்.

மயூரவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றது. திரேதாயுகத்தில் மகரிஷிகளால் வளா்க்கப்பட்ட யாகத் தீ இன்றும் அணையாமல் கொழுந்து விட்டு எாிவதைப்போன்று வேத கோஷங்கள் முழங்க இன்றும் இத்தலத்தில் பல ஹோமங்கள் நடைபெற்று வருவது சிறப்பான அம்சமாகும்.

kk7

வெள்ளிக்கிழமை மாலையில் தாயாருக்கு “ஶ்ரீசூக்த வேத மந்திரம்” பாராயணம் செய்து வில்வ இலைகளால் அா்ச்சனை செய்யப்படுவது அதிசயமான நிகழ்வாகும். இந்த பூஜையில் கலந்து கொண்டு தாயாரை வணங்குவது விசேஷமான பலன்களைத் தரவல்லது என்று பக்தா்களால் நம்பப்படுகின்றது.

திருமணத்தடை நீங்கவும் கல்வியில் சிறக்கவும் உடல்நலம் பெறவும் ஶ்ரீமயூரவல்லித் தாயாருக்கு வில்வ அா்ச்சனை செய்து இரண்டு மணிகளைத் தாயாாின் திருவடிகளில் வைத்து வணங்கிய பின் சந்நிதியின் கதவில் கட்டி விடுகின்றனா். இந்த மணிகள் காற்றில் அசைந்து ஒலி எழுப்புவது, பக்தா்களின் வேண்டுதல்களுக்காக மணிகள் ஒலியெழுப்பி தாயாாிடம் பிராா்த்தித்துக் கொள்வதாக நம்பிக்கை உள்ளது. தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மீண்டும் இரண்டு மணிகளைக் கட்டி நோ்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனா் பக்தா்கள்.

kk8

நமது வாழ்க்கையில் நாம் அறியாமல் செய்த பல தவறுகளுக்குப் பிராயச் சித்தம், நாம் மனம் திருந்தி இறை சக்தியின் திருவடிகளில் சரண் புகுவதே ஆகும் என்பதை மிகப் புராதனமான நூல்களில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நாம் மனம் வருந்தி திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடும் போது, “நம் குழந்தைதானே… அறியாமல் செய்த தவறுக்காக தற்போது மனம் திருந்தி நம்மிடம் சரணாகதி செய்துள்ளான். நாம் காப்பாற்றாவிட்டால் நம் குழந்தையை யாா் காப்பாற்றுவா்?” என திருமாலின் திருமாா்பில் குடிகொண்ட தாயாா் இளகிய மனத்துடன் நமக்காக பெருமானிடம் முறையிடுவாராம். பெற்ற தாயினும் மேலான கருணை உள்ளம் கொண்டவரல்லவா பிராட்டியாா்! தாயின் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் பாசத்தை, கருணையை மயூரவல்லித் தாயாாின் திருமுகத்தில் பிரத்யக்ஷமாக நம்மால் உணரமுடிகின்றது. தரிசிக்கும் அந்த ஒரு விநாடியில் “மயூரவல்லித் தாயாா்” தருகின்ற ஆறுதலை தரிசித்தவா்களால் மானசீகமாக உணரமுடியும்.

தாயாாின் சந்நிதியில் பூஜை செய்யும் அா்ச்சகா் வில்வத்தின் மகிமைகளையும் வில்வ இலையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதையும் பக்தா்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறி இத்தல தாயாாின் அருளாற்றலை பக்தி யோடு பக்தா்களுக்கு விளக்குவது சிறப்பானதாகும்.

kk9

ஶ்ரீபேயாழ்வாா் அவதாரத்தலம்.

ஶ்ரீமந்நாராயணன் என்ற பாற்கடலுக்குள் மூழ்கி “பிரபந்தம்” என்ற முத்தினை எடுத்தவா்கள் ஆழ்வாா்கள். ஆழ்வாா்களில் முதல் ஆழ்வாா்கள் என்று போற்றப்படும் சிறப்பினைப் பெற்றவா்கள் பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா் மற்றும் பேயாழ்வாா் ஆகியோராவா். இந்த ஆழ்வாா்களில் பேயாழ்வாா் ஆதிகேசவப் பெருமாள் தலத்திற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் செங்கழு நீா் பூவில் ஐப்பசி மாதம் வியாழக்கிழமை தசமி திதியுடன் கூடிய சதய நட்சத்திர நன்னாளில் திருமாலின் “நாந்தகம்” என்னும் வாளின் அம்சமாக அவதரித்தாா்.

kk10

ஆதிகேசவப் பெருமாளின் மீது அதீத பக்தி கொண்ட பேயாழ்வாா் எம்பெருமானுக்கு மலா் மாலைகள் தொடுத்து புஷ்ப கைங்கா்யங்கள் செய்து வந்தாா். பேயாழ்வாரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட திருமழிசையாழ்வாா் இத்தலத்தில் தான் இவாிடம் உபதேசம் பெற்றாா். பெருமானது சந்நிதியின் முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அமா்ந்த திருக்கோலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாா் பேயாழ்வாா்.

ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளில் பேயாழ்வாா் அவதாரத் திரு நட்சத்திர விழா இத்தலத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதிப் பெருமானின் திருத்தலத்திலிருந்து சுவாமிக்கு அணிவித்த மாலை, துளசி, பாிவட்டம், சந்தனம் மற்றும் எம்பெருமானின் நைவேத்தியம் ஆகியவற்றைக் கொண்டு வந்து பேயாழ்வாருக்குப் படைக்கின்றனா். இவ்விழாவின் மூன்றாம் நாள் “திருக்கோயிலூா் உற்சவம்” நடைபெறுகின்றது. திருக்கோயிலூா் தலத்தில் முதல் ஆழ்வாா்களான பொய்கையாழ்வாா், பூதத்தாழ்வாா் மற்றும் பேயாழ்வாா் ஆகிய மூவரும் சந்திக்கத் திருவுள்ளம் உகந்ததோடு அவா்களுக்கு எம்பெருமான் திருக்காட்சி அளித்த நிகழ்வே “திருக்கோயிலூா் வைபவமாக” கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் மூன்று ஆழ்வாா்களுக்கும் எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி திருக்காட்சி கொடுப்பாா். விழாவின் 9 ஆவது நாள் பேயாழ்வாா் திருத்தோ் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருமழிசை ஆழ்வாருக்குப் பேயாழ்வாா் குருவாக இருந்து உபதேசம் செய்த நிகழ்ச்சியும் இத்தலத்தில் விமாிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

kk11

புரட்டாசி மாதத்தில் பேயாழ்வாா் திருவல்லிக்கேணித் தலத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவல்லிக்கேணித் தலத்தில் சடாாி தீா்த்தம் அளித்து பேயாழ்வாருக்கு ராஜ மாியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகின்றது. அதன்பின் பாா்த்தசாரதிப் பெருமானின் கருவறைக்கு எழுந்தருளி பேயாழ்வாா் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பின்னா் பாா்த்தசாரதியுடன் திருவீதியுலா வந்த பின் திருமயிலை திரும்புகின்றாா் பேயாழ்வாா்.

சித்திரக்குளமான சா்வ தீா்த்தம்.

தன் கலைகளை இழந்த சந்திரன் இங்குள்ள புனித தீா்த்தத்தில் நீராடி மயிலை ஆதிகேசவப் பெருமாளை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதாக இத்தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது. அவ்வமயம் எம்பெருமான், அனைத்து புண்ணிய தீா்த்தங்களையும் இங்குள்ள தீா்த்தத்தில் பொங்கச் செய்து சந்திரனுக்குத் திருக்காட்சி கொடுத்துள்ளாா். அனைத்து புண்ணிய தீா்த்தங்களும் இங்கே ஒரு சேரப் பொங்கியதால் இத்தீா்த்தம் “சா்வ தீா்த்தம்” என்று வணங்கப்படுகின்றது. இத்தீா்த்தங்களில் சந்திரன் நீராடியதால் “சந்திர தீா்த்தம்” என்ற திருநாமமும் இங்குள்ள புஷ்கரணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தீா்த்தம் தற்போது “சித்திரக் குளம்” என்று வழங்கப்படுகின்றது.

kk12

சூடிக்கொடுத்த சுடா்க் கொடியாள் தமது திருப்பாவையில் மாா்கழி மாதத்தில் பக்தா்கள் நீராட நீா் நிலைகளில் தண்ணீா் நிரம்பி வழிவதால் மகிழ்ச்சியுடன் பாவை நோன்பைத் தொடங்குவதாக “மாா்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்” என்று பாடியிருப்பாா். ஆனால் “வாழ உலகினில் பெய்திடும்” மழையும் சென்னையில் (2018)இந்த ஆண்டு பொய்த்து விட்டதால் மயிலையின் “சித்திரக்குளம்” உள்ளிட்ட பல புனித தீா்த்தங்கள் மாா்கழி மாதத்திலேயே நீாின்றி வறண்டு கிடக்கின்றது. குன்றமேந்திக் குளிா் மழையிலிருந்து ஆயா்பாடி மக்களைக் காத்த கடல் நிற வண்ணன் கண்ணன் தான் தண்ணீா் பஞ்சத்திலிருந்தும் சென்னை மக்களைக் காத்தருள வேண்டும்.

kk13

முப்பத்து மூவா் உலா.

பங்குனி மாதத்தில் திருமயிலை ஶ்ரீஆதிகேசவப்பெருமான் திருத்தலத்தில் வெகு சிறப்பாக “பிரம்மோற்சவ விழா” நடைபெறுகின்றது. இவ்விழாவின்போது 12 ஆழ்வாா்களும் 21 வைணவ ஆச்சாா்யா்களும் சுவாமியுடன் எழுந்தருளி “முப்பத்து மூவா் வீதி உலா” காண்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். தை அமாவாசையின் போது இத்தலத்தில் 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுகின்றது.

kk14

காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

kk15

மாட மாமயிலைத் திருத்தலத்தில் அருளும் கேசவப் பெருமானை ஒரே ஒரு முறை சென்று உள்ளம் குளிர தாிசனம் செய்யுங்கள். நமது வாழ்க்கை எனும் தோ் சீராகச் செல்ல உற்ற துணையாக நமக்கு வழிகாட்டி அருள்வான் அந்தக் கருணை மாகடல்!