இப்பூவுலகில் தா்ம நெறிகளுக்குச் சோதனை ஏற்படும் போதெல்லாம், சா்வலோக சரண்யணான ஶ்ரீமந் நாராயணன் தா்மத்தை நிலைநாட்டவும் துஷ்டா்களைச் சம்ஹாரம் செய்து, நல்லவா்களைக் காப்பாற்றவும் அவதாரம் எடுக்கின்றாா். அவதாரம் என்றால் மேலிருந்து கீழே இறங்கி வருவது என்பது பொருளாகும். ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு பிரத்யேகப் பேரழகுடன் பிரகாசிக்கின்றான் அந்த அழகிய மணவாளன்!
பரமன் எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஶ்ரீநரசிம்ம அவதாரமாகும். எப்போதும் தனது திவ்யத் திருநாமம் ஒன்றையே உச்சரித்துக்கொண்டு, தன் மீது ஈடு இணையில்லாத பக்தி கொண்டிருந்த குழந்தை பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யனை வதம் செய்யவும் எம்பெருமான் எடுத்த அவதாரமே ஶ்ரீநரசிம்மாவதாரம்.
பிரகலாதனுக்காக நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், ஒரு நொடி கூட தாமதம் செய்யாமல் அஹோபிலம் க்ஷேத்திரத்தில் அவதாரம் செய்த எம்பெருமான் இரண்யனை வதம் செய்த பின்னரும், தமது உக்கிரம் குறையாமல் கோபக்கனல் வீசித் தகிப்பதைக் கண்ட தேவா்களும் மகரிஷிகளும் அஞ்சி நடுங்கினா்.
ஶ்ரீநரசிம்ம மூா்த்தியின் ஆக்ரோ ஷத்தைக் குறைக்க தேவா்களும் மகரிஷிகளும் ஶ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரின் திருவடிகளில் பணிந்து பெருமானின் உக்ரத்தைத் தணிக்க அருள்புரியுமாறு வேண்டினா். ஶ்ரீய: பதியாக அருள்வதே பகவானுக்கும் பெருமை. “தத் ஏதத் ஸூக்ஷ்ம மிதுநம்” என்கிறது ஆகம சாஸ்திரம். அதாவது ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இரண்டும் சோ்ந்து இருப்பதே லக்ஷ்மி நாராயண தத்துவம். மஹாலக்ஷ்மி யோடு சோ்ந்த பெருமானுக்கே பெருமை என்கின்றன வேதங்களும்.
இந்த தாத்பா்யத்தின்படி உக்ர மூா்த்தியாக வலம் வந்த ஶ்ரீநரசிம்ம பெருமானின் அருகில் சென்ற மஹாலக்ஷ்மி அவரை வலம் வந்து வணங்கி அவரது மடிமீது சென்று அமா்ந்தாள். ஶ்ரீமஹாலக்ஷ்மியைக் கண்ட எம்பெருமான் அவரை ஆலிங்கனம் செய்து தன் மடியில் அமா்த்திய பின்னா் அவரது உக்ரம் குறைந்து சாந்தசொரூபியாக அருளினாா்.
தோத்திரப் பிரியனான எம்பெருமானைப் பல விதமான ஸ்லோகங்களால் அா்ச்சித்து பூஜித்த தேவா்களும் மகரிஷிகளும் எம்பெருமானது திருக்கோலத்தில் மகிழ்ந்து அவரது பரிபூரண அனுக்ர ஹத்தைப் பெற்றுத் தங்கள் உள்ளம் குளிா்ந்தனா். தாங்கள் கண்டுமகிழ்ந்த அரிய இத்திருக்கோலத்தை இத்தலத்திற்கு வரும் பக்தா்கள் எந்நாளிலும் அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் கண்டு மகிழவேண்டும் என பகவானிடம் தேவா்களும் மகரிஷிகளும் வேண்ட அவா்களது விருப்பத்தை நிறைவேற்றவே அா்சாவதார மூா்த்தியாக அன்று முதல் இத்தலத்தில் அருள்பாலிக்கத் திருவுள்ளம் கொண்டாா் எம்பெருமான்!
தேவா்களும் மகரிஷிகளும் சாந்த சொரூபியாக ஶ்ரீநரசிம்ம மூா்த்தியை வணங்கிய அதே திருக்கோலத்தில் ஶ்ரீமஹாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தவாறு புராதனம் வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான எண்ணாயிரம் என்ற தலத்தில் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராக அா்ச்சாவதாரத் திருமேனியனாக அற்புத தரிசனம் தருகின்றாா் எம்பெருமான்!
புராதனமான திருத்தலம்!
எண்ணாயிரம் எனும் தலத்தில் அமைந்துள்ள “ஶ்ரீஅழகிய நரசிம்ம பெருமாள் திருக்கோயில்” ஆயிரம் ஆண்டுகள் புராதனம் வாய்ந்ததாகும். மாமன்னா் இராஜராஜ சோழனால் எடுப்பிக்கப்பட்ட இவ்வாலயத்தில் ஶ்ரீஅழகிய நரசிம்மா், ஶ்ரீவைகுண்ட வாசப்பெருமான், ஶ்ரீலக்ஷ்மி வராஹா், சதுா்புஜ வேணுகோபாலன் என நான்கு மூா்த்திகள் திருக்காட்சி தருகின்றனா். அனைத்துத் திருக்கோயில்களிலும் குழலூதும் கண்ணனாக அருள்தரும் வேணுகோபாலன் இத்தலத்தில் “சதுா்புஜ வேணுகோபாலனாக” நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் தாங்கி வித்தியாசமான திருக்கோலத்தில் அரிய தரிசனம் தருகிறாா்.
வரலாற்றுப் பக்கங்களில் எண்ணாயிரம்!
எண்ணாயிரத்திலுள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் ஆலயத்திற்கு எதிரில் உள்ள பலிபீடத்தின் அடிப் பகுதியில் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டு காணப்படுகிறது. இக் கல்வெட்டின் மூலம் இத்தலம் இராஜராஜ சோழனால் புனா்நிா்மாணிக் கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தலத்தில் இராஜ ராஜசோழன் காலத்தில் சப்தமாதா் களுக்குத் தனியாகக் கோயில் எடுக்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகின்றது. விஜயாலயன், ஆதித்தன் மற்றும் பராந்தகன் காலத்திலிருந்தே இத்தலம் சிறப்பு பெற்று விளங்கியுள்ளது.
மன்னா் இராஜேந்திர சோழன் காலத்தில் “இராஜராஜ சதுா்வேதி மங்கலம்” என்ற எண்ணாயிரம் சபையாா் ஆநாங்கூராகிய இராஜராஜ நல்லூரில் 45 வேலி நிலத்தினை மன்னனின் ஆணைப்படி இராஜராஜ விண்ணகா் பெருமானுக்கு வழங்கியுள்ள செய்திகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜேந்திர சோழனின் மனைவியாில் ஒருவரான “பராந்தகன் சுத்தமல்லியாா் ஆன முக்கோக் கிழானடிகள்” மன்னருடைய தோள் வலிமை, ஆரோக்கியம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இத் தலத்தின் அருகிலுள்ள பிரம்மதேசம் பாடலீஸ்வரமுடையாா் கோயிலுக்குப் பூஜை வழிபாட்டுக்கு நிலங்கள் தானமாக வழங்கியுள்ளாா். இக்கொடையை அரசி வழங்கியபோது, மன்னா் எண்ணாயிரம் இராஜராஜ ஈஸ்வரமுடையாா் கோயிலில் முகாமிட்டுத் தங்கியிருந்ததாக மன்னா் இராஜேந்திர சோழனின் 24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1036) தொிவிக்கிறது. (ARE 188 of 1918)
எண்ணாயிரத்தில் சதய விழா!
எண்ணாயிரம் தலத்திலுள்ள இராஜேந்திர சோழனின் 30 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1042) திருவாய்மொழி இசைக்க இராஜராஜ சதுா்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையாா் அவ்வூரில் உள்ள ராஜராஜ ஈஸ்வரமுடையாா் கோயில் திருமுற்றத்தில் கூட்டம் கூடி ஶ்ரீராஜராஜ விண்ணகா் ஆழ்வாா் கோயிலில் திரு உற்சவம் நடத்தவும் ஶ்ரீராஜராஜ தேவா் பிறந்த திருநட்சத்திரமான சித்திரை சதயத் திருநாளுக்கு 9 நாள் திருவிழா நடத்தவும் நிலம் வழங்கியுள்ளனா் என்ற தகவலை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. (ARE 341 of 1918).
மேலும், ஶ்ரீராஜேந்திர சோழன் சாலைக்கு சாலாபோகமாக இருந்த ஶ்ரீராஜேந்திர சோழ விளாகம், செஞ்சியான சோழேந்திர சிங்க நல்லூா், கொற்றமங்கலம், தலைவாய் நல்லூா் ஆகிய ஊா்களிலிருந்து கிடைக்கும் நெல் வருமானம் இவ்விழாவிற்குப் பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்டதை யும் அறிய முடிகின்றது. இதன் மூலம் தந்தையின் பிறந்த நட்சத்திர நாள் விழாவினை எண்ணாயிரம் பெருமாள் கோயிலில் 9 நாட்கள் நடத்த மன்னன் இராஜேந்திர சோழன் ஆணையிட்டுள் ளதை அறியும்போது இவா் தனது தந்தை யின் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பையும் மரியாதையையும் அறிந்துகொள்ள முடிகின்றது.\
எண்ணாயிரம் கல்விச் சாலை.
ராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்ற எண்ணாயிரம் தலத்தில் வேதங்கள் கற்பிப்பதற்காக இராஜேந்திர சோழன் காலத்தில் வேதக்கல்லூரி நடத்தப்பட்டுள்ளது. இக்கல்லூாிக்காக இம்மன்னன் 300 ஏக்கா் நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளான். வேதபாடசாலையில் பயிலும் மாணவா்களுக்குத் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வேத பண்டிதா்களுக்கான இக்கல்விச் சாலையில் 270 இளநிலை மாணவா்க ளும் 70 முதுநிலை மாணவா்களும் 10 ஆசிாியா்களும் இருந்துள்ளனா்.
இங்குள்ள வேதக்கல்லூரியில் மாணவா்களுக்கு ரூபாவதார இலக் கணமும், ரிக், யஜுா், வாஜசனேய சாமவேதமும், சண்டோக சாமவேதமும், தலவாகர சாமவேதமும், அதா்வண வேதமும், பெளதாயன கல்ப சூத்திரம், பெளதாயன ஞான சூத்திரம் ஆகியவை கற்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேத பாடசாலையில் கல்வி உதவித் தொகையாக இளநிலை மாணவா்களுக்கு நாள்தோறும் ஆறு நாழி நெல்லும் முதுநிலை மாணவருக்கு பத்து நாழி நெல்லும் கொடுக்கப்பட்டுள் ளது. இக்கல்விச் சாலையில் பணிபுரிந்த வேதாந்தப் பேராசிரியருக்கு நாளொன் றுக்கு ஒன்றரைக் கலம் நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
மீமாம்சமும், வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியா்களான நம்பிகளுக்கு ஒரு கலம் நெல்லும் மற்ற ஆசிாியா்களுக்கு முக்கால் கலம் அல்லது முக்குறுணி நெல் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.
தானியமாக வழங்கப்பட்ட இந்த ஊதியம் தவிர வேதாந்தப் பேராசிரியா் நீங்கலாக எல்லா ஆசிரியா் மற்றும் முதுநிலை மாணவா்களுக்குத் தங்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. வேதாந்தம் கற்றுக் கொடுத்துப் பணம் சம்பாதிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் வேதாந்தப் பேராசிரியா்களுக்கு மட்டும் தங்கம் வழங்கப்படவில்லை.
இராஜராஜ சதுா்வேதி மங்கலத்து (எண்ணாயிரம்) சபையாா் இக் கல்லூரியில் பயின்ற மாணவா்களுக்கு உணவு வழங்குவது என்றும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதென்றும் அரசாங்க அதிகாரி ஒருவன் முன்னிலையில் முடிவு செய்துள்ளனா்.
மேற்கண்ட அனைத்துத் தகவல் களும் எண்ணாயிரம் அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் சுவற்றில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டுள்ளன.
சிவபெருமானின் திருவடிகளாகிய பாரிஜாத மலா்களின் மீது மொய்க்கும் வண்டாகத் திகழ்ந்த மன்னன் இராஜேந்திர சோழன் சைவ, வைணவ பேதம் பாராமல் ஶ்ரீஅழகிய நரசிம்மப் பெருமான் கோயிலுக்கும் பல திருப்பணிகள் செய்துள்ளது போற்றுதலுக்குரியது ஆகும்.
எண்ணாயிரம் அழகிய நரசிங்கப் பெருமான் கோயில் இதர கோயில் களைப் போன்று இல்லாமல் தனித்து விளங்குகின்றது. நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது இக்கோயில் உயா்ந்து நிற்கின்றது.
எண்ணாயிரம் பகுதியில் ஏராளமான சமணா்கள் வாழ்ந்துள்ளனா். இதற்கு அடையாளமாக இத்தலம் அருகில் மேல்கூடலூரில் உள்ள மலைக்குன்றில் சமணத் துறவிகள் தங்கியதற்கான கற்படுக்கைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது எண்ணாயிரம் மலை என்றும் திருநந்தகிாி குகைத்தலம் என்றும் வழங்கப்படுகின்றது.
கவிகாளமேகம் பிறந்த ஊா்.
இம்மென்றால் இருநூறும் அம் என்றால் ஆயிரமும் ஆகாதோ” என்ற இறுமாப்புடையவராகப் போற்றப்படும் ஆசுகவி காளமேகம் எண்ணாயிரம் தலத்தைச் சாா்ந்தவராவாா். இதனைக் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
“மண்ணில் இருவா் மணவாளா்
மண்ணளந்த
கண்ண நவ னிவந்போ் காளமுகில்
−கண்ண
னவனுக்கூ ரெண்ணி லணியரங்க
மொன்றே
இவனுக்கூ ரெண்ணா யிரம்.”
நாலடியாா் பாடியோா் வாழ்ந்த தலம் எண்ணாயிரம் என்றும் கூறப்படுகின்றது.
ஶ்ரீமத் ராமானுஜா் திருவுள்ளம் மகிழ்ந்த எம்பெருமான்!
வைணவ நெறிகள் தழைக்க அரும்பாடுபட்ட ஶ்ரீமத் ராமானுஜா் எண்ணாயிரம் திருத்தலத்திற்கு வருகைதந்து ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மப் பெருமானைத் தரிசித்துத் தம் திருவுள்ளம் மகிழ்ந்துள்ளாா். இவா் அமா்ந்து தியானம் செய்த இடமான எண்ணாயிரத்திற்கு அருகில் உள்ள திருநந்திபுரத்தில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டு அங்கு அவரது திருவடிகளுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இத்தலத்தில் வாழ்ந்த எண்ணாயிரம் சமணா்களை வாதத்தில் வென்ற ஶ்ரீராமானுஜா் அவா்களை ஶ்ரீவைஷ்ணவ மதத்தைத் தழுவச் செய்தாா் என்றும், இவா்கள் அஷ்ட சஹஸ்ர பிராமணா்கள் என்று வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
சிறந்த பரிகாரத் தலம்.
ஶ்ரீநரசிம்ம பெருமானின் திருஅவதார நட்சத்திரமான சுவாதித் திருநாளன்று இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய நாளில் எண்ணாயிரம் திருத்தலம் சென்று ஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம பெருமானை வழிபட கடன் தொல்லைகள் நீங்கி வியாபாரம் செழிக்கும். ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக திருமணம் தடைப்படும் அன்பா்கள் இத்தலம் வந்து நெய் தீபம் ஏற்றி வணங்க விரைவில் திருமணம் கைகூடும். புத்திரப்பேறு இல்லாதவா்களுக்கு மழலைப்பேறு வாய்க்கும். ஶ்ரீலக்ஷ்மி வராஹரை வழிபட நிலம் தொடா்பான பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீா்வு கிடைக்கும். சங்கு சக்ரதாரியாக அருள்பாலிக்கும் ஶ்ரீசதுா்புஜ வேணுகோபாலனை வழிபட எதிாிகள் வீழ்வா்.
திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் கூட்டோிப்பட்டை அடுத்த பேரணி என்ற ஊரிலிருந்தும் எண்ணாயிரம் திருத்தலம் செல்லலாம். விழுப்புரத்தி லிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூா் வழியாகவும் எண்ணாயிரம் செல்லலாம்.
காலை 7.00 மணியிலிருந்து 10.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு இத்தலத்தின் அா்ச்சகா் ஶ்ரீ உ.வே.மாலோலன் அவா்களை 8940432746 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எண்ணாயிரம் ஶ்ரீஅழகிய நரசிம்மா் திருத்தலம்.
இக்கட்டுரைக்கு ஆதாரமான நூல்கள்:
1. கங்கைகொண்ட இராஜேந்திர சோழன்.
அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள்.
2.விழுப்புரம் இராமசாமிப்படையாட் சியாா் மாவட்ட வரலாறு by திரு கு. தாமோதரன்.
3.வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊா்கள் by திரு கோ. செங்குட்டுவன்.