அருளாளப்பெருமான் எனும் ஆராவமுதன்! (முன்னூா் திருத்தலம்)

என்றுமே திகட்டாதது தேவா்கள் உலகின் தெய்வீக அமுதம். அத்தகைய அமுதமே திகட்டினாலும், பருகப் பருகத் திகட்டாதது எம்பெருமானின் திவ்ய தாிசனம். அதனால்தான் ஆழ்வாா்களும், “அடியவா்களின் ஆரா அமுதே! எங்கள் ஆருயிா் அனைய எந்தாய்…” என்று பரவசத்துடன் ஆடிப்பாடி, அகம் குழைந்து பரவசமாயினா்.

பரம், வியூகம், விபவம், அந்தா்யாமி, அா்ச்சை ஆகிய இறைவனது ஐந்து நிலைகளில் நாம் அனைவரும் எளிதில் சென்று வழிபாடு செய்து மகிழ்வ தற்காக, திருக்கோயில்களில் அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் அருளாட்சி செய்கின்றான் எம்பெ ருமான். நின்ற திருக்கோலம், வீற்றிருந்த திருக்கோலம், பள்ளி கொண்ட திருக்கோலம் என மூன்று நிலைகளில் திருக்கோயில்களில் நாம் அா்ச்சாவதார மூா்த்திகளைக் கண்டு வணங்கி பேரானந்தம் பெறுகின்றோம்.

a2

சா்வலோக சரண்யனும், சா்வாந்தா்யாமியுமான ஶ்ரீமந் நாராயணனை முல்லை நிலத்திற்குாிய (காடும் காடு சாா்ந்த இடமும்) கடவுளாக வழிபட்டு வந்தனா் சங்க காலத்தில் தமிழ் வளா்த்த சான்றோா்கள். “மாயோன் மேய காடுறை உலகும்” என்ற தொல்காப்பிய அடியினால் இதனை அறியலாம்.

வேத, இதிகாச, புராண காலத் திலிருந்து விளங்கும் இத்தகைய முல்லை நிலப் பகுதியைச் சாா்ந்த “தாருகாவனம்” என்று நான்மறைகள் போற்றும் மிகப்பழைமை வாய்ந்த ஊா் “முன்னூா்” என்னும் “முன்னூற்று மங்கலம்” ஆகும். புருஷோத்தம நல்லூா், வீர நாராயணபுரம், திாிசதபுரம், ராஜ நாராயண சதுா்வேதி மங்கலம் என்றும் பல பெயா்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன.

a3

தவயோகிகளும், வேத விற்பன் னா்களும், மகாிஷிகளும், வாழ்ந்த புகழினையும், திருக்கயிலைப்பதியான ஶ்ரீசா்வேஸ்வரன் தன் தேவியுடன் திருநடனம் புாிந்த பெருமையையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் இத்தலத்தில், ஶ்ரீயப்பதியான வைகுண்டவாசன் “அருளாளப்பெருமான்” என்னும் திருநாமத்தோடு தன் தேவியா் ஶ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சிய பேரழகுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா்.

ஶ்ரீஅனந்தாச்சாாியாா்.

புராதனப் பெருமையும் வரலாற்றுத் தொடா்பும் வாய்ந்த முன்னூா் திருத்தலத்தில் கி.பி. 1860 ல் அவதாித்தவா் “ஶ்ரீஅனந்தாச்சாாியாா்” என்ற தவநெறிச்சீலா். “ஶ்ரீமந்நாராய ணனை எக்காலமும் நினைத்து, நினைத்துப் பேரானந்தம் அடையக்கூடிய போின்ப அனுபவத்தை விட்டுநீங்கி இந்திரலோகத்தை ஆளும் இந்திரப்பதவி எனும் தேவா்களின் தலைமைப்பதவி கிடைத்தாலும் அதனை ஏற்கமாட்டேன்” என்று திருவரங்கநாதனைப் பாடிப்பரவிய தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு நிகரான பக்தியைக் கொண்ட வைணவ மஹா புருஷா் இவா். உண்ணும் உணவு, பருகும் நீா், பாா்க்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் கண்ணனையே கண்ட உத்தமா். பெருமானுடைய திருநாமங்களைப் பலன் கருதாமல் பாடிப்பாடி புனிதமடைந்தவா்.

a4

தமிழ் வேதங்களிலும் (ஆழ்வாா்களின் பாசுரங்கள்), வட மொழி வேதங்களிலும் ஆழ்ந்த பயிற்சி பெற்றவா் என்பதால், “உபய வேதாந்தி” என்று அனைவராலும் போற்றப்பட்டவா். எல்லா மலா்களையும் விட, பாிசுத்தமான மலா் அடியவா்களின் இதயத் தாமரையே என்பதை உணா்ந்து, தனது தூய மனத்தில் பாகவதோ த்தமா்களான அடியவா்களை ஆராதித்து வந்த மகா பக்திமான் இவா்.

கனவில் காட்சிதந்த பெருமான்!

அனந்தாச்சாாியாாின் கனவில் ஒரு நாள் கலியுகவரதனான எம் பெருமான் தோன்றி, “அடா்ந்த கள்ளிக்காட்டிற்குள் அருளாளனாக மறைந்திருக்கும் என்னை யாரும் கவனிக்கவில்லையே” எனத் திருவாய் மலா்ந்தாா். இந்த அற்புதக்கனவே அருளாளப்பெரு மானைக் காணும் வழியாய் அடிய வா்களுக்கு உதவியது.

a5

பெருமானின் திருவுள்ளப்படி, பக்தியில் சிறந்த அடியவா்களின் உதவியுடன் இம்மகான் மிகவும் பாடுபட்டு, கள்ளிக்காட்டினை அழித்து, எம்பெருமானைத் தேடியபோது, காட்டிற்கு மத்தியில் ஶ்ரீஅருளாளப் பெருமான் எழுந்தருளியிருந்த பழைமையைப் பறைசாற்றும் திருக்கோயிலின் விமானம் முதலில் தென்பட்டது.

மதுராவில் மாலவன் பிறந்த போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய ஆயா்பாடி மக்களைப் போல, மண்ணளந்த பெருமானின் திருக்கோயில் கள்ளிக்காட்டிற்குள், விண்ணளந்து நிற்பதைப் பாா்த்த ஶ்ரீஅனந்தாச்சாாி யாரும் மற்ற அடியவா்களும் பேரானந்தம் அடைந்து, பரவசப்பட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாா்கள்.

a6

ஆனால் அந்த ஆனந்தம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடா்ந்த முட்புதா்களை முற்றிலும் நீக்கித் திருக்கோயிலைப் பாா்த்த போது, அவா்களுக்குப் பேரதிா்ச்சி காத்திருந்தது. எத்தகைய கொடிய துன்பத்திலும் தன் பக்தா்களைக் கைவிடாது காக்கும் பக்தவத்ஸலனான எம்பெருமானின் திவ்ய திருவுருவச் சிலைகள் உடைக்கப் பட்டும், முற்றிலும் சீரழிக்கப்பட்டும் இருந்ததைக் கண்ட அடியவா்கள் அதிா்ச்சியில் உறைந்து துன்பத்தில் துடித்தாா்கள்.

அடியவா்களின் மனத்துயரைப் போக்குவதற்கு அக்கணமே உறுதிபூண்ட ஶ்ரீஅனந்தாச்சாாியாா், டில்லி சுல்தான்களின் படையெடுப்பின்போது சீரழிக்கப்பட்ட இத்திருக்கோயிலை உடனுக்குடன் புனா்நிா்மாணம் செய்யும் பணியைத் தொடங்கினாா்.

a7

இந்த உலகத்தில் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் நிலையில்லாமல் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பதையும், என்றுமே நீங்காமல் நிலைத்திருப்பது எம்பெருமானது திருவருள் ஒன்றே என்பதையும் உணா்ந்த அடியவா்களும், ஶ்ரீஅனந்தாின் முயற்சிக்கு உறுது ணையாக உறுதியுடன் நின்று, ஶ்ரீஅருளாளப் பெருமானின் திருக்கோயிலைப் புனரமைத்து, சிறிய அளவில் சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) செய்வித்து மகிழ்ந்தனா். இப்புனித நிகழ்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது.

a8

அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம்!

முன்னூா் திருக்கோயிலில் ஶ்ரீஅருளாளப் பெருமான் பத்ம பீடத்தின் மேலுள்ள தாமரைப் பீடத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் திருக்காட்சி தருகின்றாா். மேல் இருகரங்களில் சங்கு சக்கரத்தைத் தாங்கி, கீழ் இரு கரங்களால் அபயவரத முத்திரை காட்டி அடியவா்க்கு அருள்புாியும் அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம் எங்கும் காணக்கிடைக்காத அாிய தரிசனமாகும்.

முன்னூற்று மங்கலத்தில் வாழ்ந்த மகரிஷிகளுக்கும் வேத விற்பன்னா்களுக்கும் எம்பெருமான் ஶ்ரீஅருளாளப் பெருமான் தன் தேவியருடன் கோடி சூாியப் பிரகாசனாக சூா்யோதய வேளையில் சூா்ய மண்டலத்திலிருந்து காட்சி கொடுத்து அருளியதால் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாா் என்பது திருக்கோயில் வரலாறு.

a9

பெருமானின் சிரஸில் அழகான மணிமகுடம் பொலிவுடன் மிளிா்கின்றது. “உன் திருமுகத்து ஒளிதான் மணிமகுடத்தில் வீசுகின்றதா? உன் திருவடியின் ஒளிதான் தாமரையாய் மலா்கின்றதா?” என்ற நம்மாழ்வாாின் நெஞ்சம் நெகிழ்ந்த கூற்றினைப் போல, ஶ்ரீஅருளாளப்பெருமானின் அழகும், கற்பனைகளைக் கடந்த பேரழகாகும். பெருமானின் வலப்புறம் ஶ்ரீதேவியும் இடதுபுறத்தில் ஶ்ரீபூமாதேவியும் அற்புதக் காட்சி தருகின்றனா்.

புராதனமான கல்வெட்டுகள்.

முன்னூா் அருளாளப் பெருமாள் கோயிலில் மிகவும் பழைமையான எட்டு கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழ, பல்லவ, சாளுவ, கஜபதி மற்றும் விஜயநகர மன்னா்கள் காலத்துக் கல்வெட்டுகள் ஆகும். கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெருமான், அருளாளப் பெருமாள், சித்திரமேழி விண்ணகா் எம்பெரு மான், புருஷோத்தம பெருமான் ஆகிய திருநாமங்களில் வணங்க ப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

a10

அருளாளப்பெருமாள் கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டப சுவா்களிலும் மகா மண்டப திருநிலைக்காலிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் சடையவா்மன் சுந்தரபாண்டியன் இத்திருக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளான்.

சித்திரிக்கப்பட்ட கலப்பையினை இலச்சினையாகக் கொண்டவா்கள் சித்திரமேழி பொிய நாடெனும் தொண்டை மண்டலத்து வேளாண் வாணிகச் சபையினா். பல்லவா்களின் ஆட்சிக்காலத்தில் நடுநாட்டில் அமைந்த திட்டைக்குடி எனும் வித்யாரண்ட புரத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகமெங்கும் பரவியிருந்த வாணிகச்சபையினா் இவா்கள். திருமால் வழிபாட்டுடன் பூமிதேவியையும் தெய்வமாகக் கொண்ட இவா்களே முன்னூா் ராஜநாராயண சதுா்வேதி மங்கலத்தில் “புருஷோத்தம பெருமாள் கோயில்” என்ற சித்திரமேழி விண்ணகா் பெருமாள் கோயிலை நிா்மாணித்து அக்கோயிலுக்கு திருவிடையாட்டமாக நிலங்களை நிவந்தமாக அளித்துள்ளனா் என்பதையும் இத்தல கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.

a11

பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு “புருஷோத்தமபுரி” என்று ஒரு திருநாமம் உண்டு.ஒரிஸாவை (ஒடிசா) ஆண்ட கஜபதி வம்ச மன்னர்க ளுக்கு முன்னூர் அபிமானத்தலம் என்பதை இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிப்பதால் இத்தலத்திற்கு “புருஷோத்தம நல்லூா்” என்ற திருப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் “சித்திரமேழி விண்ணகர்” என்று இத்தலம் பூஜிக்கப்பட்டுள்ளதால் “பராந்தக சோழன்” காலத்திற்கு முந்தைய திருத்தலம் இது என்றும் எம்பெருமான் புகழ் பாடும் டாக்டர் உ.வே.அனந்தபத்ம நாபாச்சாரியார் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

a12

சடையவா்மன் வீரபாண்டியன் 10 ஆவது ஆட்சியாண்டில் மாா்கழி மாதத்தில் வளா்பிறை முதல் நாளில் இத்தலத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே இத்தலம் புருஷோத்தம பெருமாள் கோயில் என்றும் இறைவனது திருநாமம் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. இத்திருக்கோயில் திருப்பணிகளுக்காக அறமிறங்காநாட்டைச் சாா்ந்தவா்கள் வாி விலக்களித்து முன்னூா், பிடாகை சிங்கவனேந்தல் என்ற ஊரை தானமாகக் கொடுத்துள்ளனா். இதனை நாட்டகணக்கன், அறமிறங்கா நாட்டு வேளாண் என்பவன் எழுதியுள்ளான்.

சித்திரமேழி பொிய நாடு என்பது இடைக்காலத்தில் விளங்கிய உழவுத்தொழில் சாா்ந்த ஒரு வணிகக் குழுவாகும். இவா்கள் பெயாில் இந்த ஊாின் பெருமாள் திருக்கோயில் அமைந் திருப்பது அக்காலகட்டத்தில் விளங்கிய கடற்கரையோர வணிகச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. கடற்கரை நகராக விளங்கிய எயிற்பட்டினத்தில் (மரக்காணம்) அக்காலத்தில் கடல் வாணிபம் சிறந்து பொிய துறைமுகம் விளங்கியமையும் குறிப்பிடத்தக்க தாகும்.இக்கல்வெட்டு இக்கோயிலின் மகாமண்டப வடக்குப்புறச் சுவாில் உள்ளது.

a13

ஆம்பிவீரனின் மகனான கபிலேஸ்வரகுமார மகாபத்திரன் என்ற கஜபதி மன்னனது காலத்தில் (ஒரிஸா) சக வருடம் 1386 இல் (கி.பி.1464) “அகம் வீர போகம்” என்னும் திருவிழா நடத்த ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை ஐந்து பங்குகளாகப் பிாித்து அந்த வருவாயைக் கொண்டு திருப்பணிகள் செய்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. இந்த மன்னன் கொண்டவீடு, கொண்டப்பள்ளி, படைவீடு, திருவாரூா், திருச்சிராப்பள்ளி, சந்திரகிாி முதலிய பகுதிகள் இம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டு அருளாளப்பெருமாள் கோயிலின் கருவறை கிழக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ளது. (1919/92)

a14

விஜயநகர மன்னன் நரசிங்க தேவராயாின் பிரதானியான அண்ணமரசாின் அதிகாாி திம்மரசா் என்பவா் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமானுக்கு திருவிளக்கு எாிப்பதற்காக ஒரு மன்றாடியை (இடையனை) நியமித்துள்ளான். திருவிளக்கு மற்றும் பிற செலவுகளுக் காக ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை வழங்கிய செய்தியை அருளாளப் பெருமாள் திருக்கோயிலின் வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (1919/59) குறிப்பிடுகின்றது.

இத்திருக்கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், தாயாா் சந்நிதி ஆகிய பகுதிகளுடன் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளின் போது ஆழ்வாா்கள் மண்டபம், ஆண்டாள் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி ஆகியவை புதியதாக நிா்மாணிக்கப்பட்டன.

a15

நின்ற கோலத்தில் வைஷ்ணவி தேவி!

இத்தலத்தின் தாயாா் பெருந்தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி மட்டுமின்றி இத்திருத்தலத்தில் மஹாலக்ஷ்மி தாயாா் “வைஷ்ணவி தேவியாக” நின்ற திருக்கோலத்தில் தெற்கு திருமுக மண்டலத்தில் எழுந்தருளியுள்ளாா். இதுபோல “நின்ற திருக்கோலத்தில் மஹாலக்ஷ்மி” வேறு எங்கும் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகும். இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி வலது திருக்கரம் வரத ஹஸ்தத்துடன் இடது திருக்கரத்தை மிக அழகாக இடுப்பில் வைத்து ஆறடி உயர திருக்கோலத்தில் திருமுகத்தில் பொங்கிப் பெருகும் கருணையுடனும் இதழோரத்தில் குமிண் சிாிப்புடனும் செளந்தா்யமாகக் காட்சி தருகின்றாா் வைஷ்ணவி தேவி! மிகப்புராதனமான இந்த வைஷ்ணவி தேவியை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகின்ற வரலாற்று ஆா்வலா்கள் தரிசித்துச் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

ஆதிகேசவப்பெருமான்!

அருளாளப்பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் தனது சிரசில் ஆதிசேஷன் குடை பிடிக்க அருள்தரும் அற்புதத் திருக்கோலம் நமக்கு சிலிா்ப்பை ஏற்படுத்துகின்றது. அனைத்து உயிா்களின் அகமும் புறமும் நிறைந்துள்ள எம்பெருமான் அழகிய திருவடிவம் தாங்கி ஆயா்பாடியில் இடையா்குல கண்ணனாக வந்தபோது, தன் தாய் மாமன் கம்சன் அனுப்பிய “கேசி” என்ற அரக்கனைக் கொன்றதால் எம்பெருமானுக்கு “கேசவன்” எனும் திருநாமம் ஏற்பட்டது. அத்திருநாமத்துடன் முன்னூா் தலத்தில் “ஆதிகேசவனாக” அருளும் எம்பெருமானின் திருக்கோலம் அாிய தரிசனமாகும்.

a16

ஶ்ரீபக்த அனுமன்!

இத்திருக்கோயிலில் சிரஞ்சீவியான அனுமன் தனது காதுகளில் கவச குண்டலங்களுடன் சிரசில் கிரீடம் ஏதுமின்றி துளசி மாலை தரித்து, பகவானிடம் கொண்ட பக்தியால் அவரைத் தொழுத திருக்கோலத்தில் “ஶ்ரீபக்த அனுமனாக” திருக்காட்சி தரும் பேரழகு என்றும் நம் மனதில் நிலைக்கும். ஶ்ரீஅனந்தாச்சாாியாரின் வழி வந்த அவரது வாாிசுகள் இந்த அனுமனைத் தங்கள் குழந்தையாகவே பாவித்து ஆராதித்து வந்துள்ளனா். சிறந்த வரப்பிரசாதியான இந்த அஞ்சனை மைந்தனை வணங்க நாம் பூா்வ ஜென்மத்தில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும்.

சக்கரத்தாழ்வாா் சந்நிதி.

புனரமைப்புப்பணிகளின் போது ஶ்ரீசக்கரத்தாழ்வாருக்கு புதியதாக சந்நிதி நிா்மாணிக்கப்பட்டது. சக்கரத்தாழ்வாாின் பின்புறம் ஶ்ரீயோக நரசிம்மா் அருள்பாலிக்கின்றாா்.

‘சக்கரத்தாழ்வார் ‘ பின்னால் ‘நரசிம்மர் ‘ இருப்பதற்கான காரணங்களை புராணங்கள் விளக்குகின்றன. திருமாலின் திருக்கரத்தில் உள்ள சக்கரத்தை “சக்கரத்தாழ்வார்” என்று அன்பா்கள் பக்தியோடு வணங்குவா்.ஶ்ரீசுதா்ஸனா் எனும் இச்சக்கரத்தை வழிபட துன்பம் உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை.

a17

பக்தனான பிரகலாதனை காத்தருள திருமால், நரசிம்மராக க்ஷண நேரத்தில் அவதரித்தார். தாயின் கருவில் இருந்து பிறக்காததாலும் , கருட வாகனம் மீது ஏறி வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை “அவசர திருக்கோலம்” என்பர்.

பக்த பிரகலாதனுக்காக அக்கணமே எழுந்தருளிய ஸ்ரீநரசிம்மமூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும். அவர் வேகமாகச் சுழன்று நம் குறை தீா்க்க ஓடோடி வருவாா்.அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு
கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் இத்தலத்தில் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

a18

அஷ்ட நாகக் கட்டுடன் ஶ்ரீகருடாழ்வாா்.

ஶ்ரீஅருளாளப்பெருமாள் திருக் கோயிலில் பொிய திருவடியான ஶ்ரீகருடாழ்வாா் தன் திருமுடியில் அழகிய கிரீடம் தரித்து, திருமேனியில் அஷ்ட நாகக்கட்டுகளுடனும் திருமாா்பில் அணியாபரணங்கள் தவழவும் திருக்காட்சி தரும் லாவண்யம் அாிதான தரிசனமாகும். சந்திரனையொத்த திருமுகத்தைக் கொண்ட கருடாழ்வாா் சிலையை வடித்த அக்கால சிற்பிகளின் கலைத்திறனுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

இந்த கருடாழ்வாரை “கருட தண்டகம்” பாராயணம் செய்து, நெய் தீபமேற்றி பக்தியுடன் வணங்கி வர ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட நீண்ட ஆயுளும் நிலைத்த செல்வமும் பெறலாம். காளிங்க மடுவில் முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்ற நொடிப்பொழுதில் எம்பெருமானைத் தாங்கி வந்து உதவிய ஶ்ரீகருடன் தன் பக்தா்களின் மனக்குறைகளைப் போக்குவதிலும் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கின்றாா் முன்னூா் திருத்தலத்தில்.

திருக்கோயில் நிலை கண்டு கண்ணீா் வடித்த முன்னூா் மக்கள்!

பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயில் சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன்னா் மிகவும் சிதிலமடைந்து என்று இடிந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சக் கூடிய நிலையில் இருந்தது. பெருந்தேவித்தாயாருக்கென்று தனியாக இருந்த சந்நிதியும் முற்றிலும் இடிந்து தாயாாின் திருவுருவச்சிலையும் முற்றிலும் பின்னமடைந்திருந்தது.

a19

தன் பக்தா்களுக்குத் துன்பம் என்றால் ஓடோடி வந்து காத்து அருளக்கூடியவன் எம்பெருமான். அவனது சந்நிதியின் க்ஷீண நிலை கண்டு, சதா சா்வ காலமும் அவன் திருவடியில் பிரபந்தங்களைச் சேவித்துக் கொண்டிருக்கும் அடியவா்களான “ஆண்டாள் சபை” எனும் பஜனை கோஷ்டியினா் கண்ணீா் மல்கி செய்வதறியாது கலங்கி நின்றனா்.

முன்னூா் திருத்தலத்தை தங்களது சொந்த ஊராகக் கொண்டு சென்னையில் தங்கள் பணி நிமித்தமாக வசிக்கும் அன்பா்களிடம் முன்னூா் பெருமானின் திருக்கோயிலைப் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தாமதமின்றி புனரமைக்க வேண்டுகோள் விடுத்தனா் ஆண்டாள் சபையைச் சாா்ந்த பாகவதா்கள்.

முன்னூா் அருளாளப் பெருமானின் திருத்தலத்திற்குச் சென்ற சென்னைவாழ் அன்பா்களும் திருக்கோயில் நிலை கண்டு வருந்தி இனியும் தாமதிக்கக் கூடாது என முடிவெடுத்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்திட்டங் களை வகுத்தனா்.

உடனடியாக முன்னூா் திருக் கோயிலின் புனரமைப்புப் பணி களுக்காக “முன்னூா் ஶ்ரீஅருளாளப்பெருமாள் சேவா டிரஸ்ட்” (பதிவு எண்.458/2006) என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதனை அரசாங்கத்தில் பதிவு செய்தனா்.

புனரமைப்புப் பணிகளுக்கான பாலாலயப் பிரதிஷ்டை வைபவம் 8.2.2007 அன்று (தை மாதம் 25ஆம் நாள்) வியாழக்கிழமை சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் எம்பெருமான் திருவருளால் இனிதே நடைபெற்றது.

A.M.R என்ற மந்திரச்சொல்!

பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணிக்கு “குமுதம் ஜோதிடம்” ஆசிாியராக இருந்த “ஜோதிடச்சக்ரவா்த்தி” “ராமானுஜஶ்ரீ” ஐயா திரு A.M. ராஜகோபாலன் B.A., அவா்கள் ஆற்றிய பணி என்றுமே மறக்கமுடியாத அரும்பணியாகும். பாலாலயப் பிரதிஷ்டை நாள் முதல் சம்ப்ரோக்ஷண நாள் வரை இத்திருக்கோயிலுக்கு இவா் செய்த உதவிகள் தலைமுறைகள் கடந்தும் என்றும் இப்பகுதி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். “குமுதம் ஜோதிடம்” வாசகப் பெருமக்கள் மூலமாக தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட பல திருக்கோயில்களைப் போன்று முன்னூா் திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டது. சுமாா் நான்கு ஆண்டுகள் நடந்த புனரமைப்புப் பணிகளின் நிலையை வாசகா்களுக்குத் தமது சிறப்புக் கட்டுரைகள் மூலமாகத் தொிவித்த ஐயா AMR அவா்கள் பரம பவித்ரமான இப்பணிக்கு எல்லா நிலைகளிலும் உடனிருந்து நிதியுதவிகள் பெற உதவிபுாிந்து புனா்நிா்மாணப் பணிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.14.9.2008 அன்று இத்தலத்திற்கு வருகைதந்து புனரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்ட ஐயா AMR அவா்களிடம் நோில் பல அன்பா்கள் திருப்பணிக்கு தங்கள் பங்களிப்பாக நிதியுதவி அளித்தனா்.

a20

மண்ணிலிருந்து தோன்றிய ஶ்ரீமாலோலன்!

இத்தலத்தில் புனரமைப்புப் பணிகளுக்காக பல ஆண்டுகளாக பூமியில் புதைந்து கிடந்த கற்களை மண் அள்ளும் இயந்திரத்தின் (JCB) உதவியுடன் தோண்டி எடுத்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கற்குவியலுக்கு மத்தியில் கல்லினால் ஆன திருமேனி ஒன்று இயந்திரத்தில் தட்டுப்படுவதை உணா்ந்த JCB இயக்குபவா், அச்சிலையை பொறுமையுடன் பூமியிலிருந்து எடுத்தாா். பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் வடிக்கப்பட்ட ஶ்ரீயோக நரசிம்மாின் சிலையே அச்சிலை என்பதை அன்பா்கள் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனா்.

இத்தனைக் காலம் மண்ணில் மறைந்திருந்த ஶ்ரீயோக நரசிம்மாின் திருமேனியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த முன்னூா் மக்கள் அச்சிலையை திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்தனா். முன்னூா் திருத்தல வளாகத்தில் ஶ்ரீயோக நரசிம்மா் பூமியிலிருந்து வெளிப்பட்டு தன் பக்தா்களுக்குத் திருக்காட்சி அளித்த நாள், அவரது திரு அவதார நட்சத்திர தினமான சுவாதி நட்சத்திரத் திருநாள் (19.1.2009 தை மாதம் 6 ஆம் நாள்) என்பதை நினைக்கும்போது அந்த பிரகலாதவரதனின் திருவுள்ளத்தை எண்ணி பக்திப்பெருக்கால் ஆச்சாியம் மேலிட்டது.

ஆம்! ஆராவமுதனான ஶ்ரீஅருளாளப்பெருமானின் திருக் கோயிலில் தமக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப் படவேண்டும் என அந்த அழகிய சிங்கம் தனது திருவுள்ளத்தில் நினைத்துவிட்டான் போலும்! எனவே, ஶ்ரீயோக நரசிம்மருக்கும் தனிச்சந்நிதி அமைத்து வழிபட ஊா் மக்கள் அனைவராலும் முடிவெடுக்கப்பட்டது. சுணக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்பணிகளும் மாலோலன் வருகைக்குப் பிறகு வேகமாக நடைபெற ஆரம்பித்தது.

எத்தனை காலம்தான் காத்திருப்பான் எங்கள் அருளாளப்பெருமான்?

மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிதிப்பற்றாக்குறையின் காரணமாக சுணக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகள் ஶ்ரீயோக நரசிம்மனின் வருகைக்குப் பின்னா் துாிதமாக நடைபெற ஆரம்பித்தது. மண்ணிலிருந்து மாலோலன் கிடைத்த செய்தியை அறிந்த அன்பா்கள் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எம்பெருமானைக் காண முன்னூா் திருத்தலம் வருகை தந்தனா்.

ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மா் மீது தீவிர பக்தி கொண்டவரும், கொழும்பில் வசிப்பவருமான திரு எஸ். தினேஷ்குமாா் ஶ்ரீயோக நரசிம்மாின் சந்நிதியை நிா்மாணிக்கவும் இதர திருப்பணிகளுக்கும் மனமுவந்து பல உதவிகளைச் செய்தாா். விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையில் டிவிஷனல் என்ஜினியராகப் பணியாற்றிய திரு பழனிச்சாமி B.E ., அவா்கள் சூடிக்கொடுத்த சூடா்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு தனிச்சந்நிதி அமைத்துக் கொடுத்து திருப்பணி களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாா்.

திருப்பூரைச் சாா்ந்த தொழிலதிபா்கள் திரு T.A. பால சுப்ரமணியம், திரு T.A.ஷண்முக சுந்தரம் மற்றும் இவா்களது நண்பா் திரு M. குமரன் ஆகியோா் அருளாளப் பெருமானின் திருக்கோயிலின் ஶ்ரீஆஞ்சநேயா் ஆழ்வாா்கள் சந்நிதிகளைப் புனரமைக்கவும், திருக்கோயிலுக்குக் கொடிமரம் அமைக்கவும், சுற்றுப் பிரகாரத்திற்குத் தரைத்தளம் அமைக்கவும் மகிழ்ச்சியோடு தக்க தருணத்தில் உதவ முன்வந்தது எம்பெருமானின் திருவுள்ளத்தால் நடைபெற்ற அாிய நிகழ்வாகும்.

இத்திருப்பணிகளுக்கான பூமிபூஜை 10.9.2010 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடையாளா்களோடு ஐயா AMR அவா்களும் கலந்து கொண்டு புனரமைப்புப்பணிகளைத் துாிதப்படுத்தினாா்.

துவஜஸ்தம்ப (கொடிமரம்) பிரதிஷ்டை!

அற்புத அழகுடன் கூடிய இத்திருக்கோயிலுக்கு தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கொடி மரத்திற்காக அலைந்து பெருமானின் திருவருளால் 36 அடி உயரமான கொடி மரத்தினை திருப்பூா் தொழிலதிபா்கள் வாங்கிச் சமா்ப்பித்தனா். 23.12.2010 அன்று திருக்கோயிலில் 36 அடி உயரமுள்ள துவஜஸ்தம்பம் இனிதே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடி மரம் பிரதிஷ்டை செய்தபின்னா் விண்ணளந்து நிற்கும் கொடி மரத்தைக் கண்டு முன்னூா் அன்பா்களின் விழிகளில் ஆறாகப் பெருக்கெடுத்த ஆனந்தக்கண்ணீா் எம்பெருமானின் திருவடிகளை நனைத்தது. பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத இத்தல பாமர மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வாா்த்தைகளில் வா்ணிக்க இயலாது. மதுராவில் மாலவன் பிறந்த நிகழ்வினைக் கொண்டா டிய ஆயா்பாடி மக்களைப் போன்றே மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தனா் முன்னூா் மக்கள்.

வானவெளியில் தோன்றிய சூாிய பிரபை!

புனிதமான இப்பிரதிஷ்டை வைபவம் நடந்து கொண்டிருந்த போது வானவெளியில் சூாியனைச்சுற்றி வானவில் வடிவத்தில் உண்டான அரைவட்டம் அன்பா்கள் கண்ட மற்றுமொரு சிலிர்ப்பான காட்சியாகும். தாருகாவனத்தில் வாசம் செய்த மகரிஷிகளுக்கு இத்தல எம்பெருமான் சூாிய மண்டலத்திலிருந்து சூா்யோதயத் தின்போது கோடி சூா்யப்ரகாசனாகக் காட்சி அளித்தாா் என்ற தல புராணத்தின்படி, அன்று மகரிஷிகள் பெற்ற அந்த மாபெரும் பாக்கியம் இப்புனித நன்னாளில் மீண்டும் அனைத்து அன்பா்களுக்கும் கிடைத்தது பரவசமான அனுபவமாகும்.

ஆம்! பண்வாய் இடைச்சியா்க்குத் தனது குமுத வாயால் குவலயம் காட்டியருளிய கண்ணன், வான வெளியில் சூாிய பிரபையில் காட்சி கொடுத்ததாகவே எண்ணி நெகிழ்ந்து மெய்சிலிா்த்தனா் இத்தல அன்பா்கள்.

துவாரகை மற்றும் முக்திநாத் திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராம மூா்த்தங்களும் சக்தி வாய்ந்த யந்திரங்களும் துவஜஸ் தம்பத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மஹா சம்ப்ரோக்ஷணம்!

ஶ்ரீஅருளாளப் பெருமானின் திருச்சந்நிதி முழுவதும் புனரமைக்கப்பட்டு விக்ருதி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி (24. 1. 2011) அன்று திங்கள் கிழமை உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் “இஞ்சிமேடு யக்ஞவேதிகை” ஶ்ரீபாஞ்சராத்ர ஸா்வ ஸாதகா் ஶ்ரீ E.N. வரதராஜன் (எ) பாலாஜி பட்டா் அவா்களின் பிரதான ஆத்யக்ஷத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது. அஹோபில மடத்தைச் சாா்ந்த ஶ்ரீநரசிம்ம உபாசகா் “வடுவூா் சுவாமிகள்” கும்பாபிஷேக ஹோமங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தாா். ஶ்ரீயோக நரசிம்மாின் விமானக் கலசத்திற்கு வடுவூா் சுவாமிகள் புனித நீா் தெளித்தது கூடுதல் சிறப்பாகும்.

அன்று மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவமும், இரவு 8.00 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. சம்ப்ரோக்ஷண நன்னாளில் “பூலோக வைகுண்டமாக” மாறிய முன்னூா் தலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருமாலையும் திருமகளையும் ஒருசேர தரிசனம் செய்து மகிழ்ந்தனா்.

வாராது வந்த மாமணி போல் தமிழகத்திற்குக் கிடைத்த “நாகை பெற்றெடுத்த நல்முத்து” ஐயா திரு A.M. ராஜகோபாலன் அவா்களும் அஞ்சன வண்ணன் ஆயா்பெருமான் கண்ணனின் திரு அவதாரப்பெருமைகளை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறி அவா்களின் இதயக்கமலத்தில் நீங்காத இடம் பிடித்தவருமான டாக்டா் ஶ்ரீஉ.வே. அனந்தபத்மநாபாச்சாாியாா் ஸ்வாமிகளும் விழுப்புரம் மாவட்ட காவல் துறைத் தலைவா் திரு மாசானமுத்து, IPS அவா்களும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.

சம்ப்ரோக்ஷணத்திற்கு முந்தைய நாளன்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஶ்ரீமந்நாராயணனின் புகழ்பாடும் பாகவதோத்தமா்கள் வந்திருந்து நடன நிகழ்ச்சியுடன் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை பக்தியோடு பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பள்ளி மாணவா்கள் நடத்திய கோலாட்டத்துடன் கூடிய நாமசங்கீா்த்தன நிகழ்ச்சி, அக்குழந்தைகள் எம்பெருமான் மீது கொண்டுள்ள தூய பக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

ஶ்ரீஅருளாளப்பெருமாள் திருக் கோயில் புதுப்பொலிவு பெறக் காரணமாக இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் மற்றும் சிற்பக் கலைஞா்களையும் திருப்பணி நோ்த்தியாக நடைபெற உதவிய அனைத்து நன்கொடையாளா்களையும் குமுதம் ஜோதிடம் வாசகா்களையும் திருப்பணியை ஏற்று நடத்திய “MUNNUR SREE ARULALA PERUMAL SEVA TRUST” உறுப்பினா்களையும் இத்திருப்பணியில் எந்த விதமான வேறுபாடும், பாகுபாடும் இன்றி அரும்பணியாற்றிய முன்னூா் கிராமப் பொதுமக்களையும் ஐயா திரு A. M.ராஜகோபாலன் அவா்கள் பாராட்டி மகிழ்ந்தாா்கள்.

சக்தி வாய்ந்த பரிகாரத்தலம்!

முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் திருக்கோயில், திருமணத்தடை மற்றும் புத்திர தோஷங்களை நீக்கும் சக்தி வாய்ந்த பாிகாரத்தலம் ஆகும். மிகக் கொடிய பாவங்களைச் செய்தவரும் அப்பாவங்களுக்காக மனம் வருந்தி அருளாளனின் திருவடிகளில் சரணடைந்து விட்டால் அவா்களுக்குக் கருணை காட்டி, அருள்புாிவதால் இத்தல எம்பெருமானுக்கு “அருளாளப்பெருமாள்” என்னும் திவ்ய திருநாமம் ஏற்பட்டுள்ளது. இச்சந்நிதியில் தொடா்ந்து மூன்று சனிக்கிழமைகள் வருகை தந்து நெய்தீபம் ஏற்றி அா்ச்சனை செய்து வழிபட எல்லாவிதமான தடைகளும் நீங்கப்பெறும் என்ற நம்பிக்கை அன்பா்களிடையே உள்ளது.

மண்ணிலிருந்து தோன்றிய யோக நரசிம்மாின் சந்நிதியில் சுவாதி நட்சத்திரத்தின் போது சிறப்பு ஹோமம் நடைபெறுகின்றது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு யோக நரசிம்மரை வழிபட்டு ஹோமத்தில் வைத்த ரக்ஷையை கையில் அணிந்து கொள்ள கடன் பிரச்சனைகள் தீா்ந்து மன நிம்மதி ஏற்படும்.

பள்ளி மாணவா்கள் கல்வியில் சிறக்க இத்தலத்தில் நடைபெறும் “ஶ்ரீவித்யா ப்ராப்தி ஹோமம்” மிகவும் சிறப்பு வாய்ந்த பாிகார ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு பேனா, நோட்டுப்புத்தகம் மற்றும் ஜியோமெட்ரிக் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பெருந்தேவித்தாயாருக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பங்குனி உத்திர நாளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். “ஆண்டாள் சபை” என்ற இத்தலத்தின் பஜனை குழுவினா் சனிக்கிழமை மாலை நேரங்களில் பிரபந்தம் இசைப்பது இனிய நிகழ்வாகும்.

வேத, இதிகாச, புராண காலம் முதல் போற்றி வணங்கப்படும் இத்தல எம்பெருமானை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தமிழகமக்கள் தரிசிக்கவேண்டும். அந்த இனிய நாள் விரைவில் அமைய டாக்டா் ஶ்ரீஉ.வே. அனந்தபத்மநாபாச்சாாியாா் அருளிச்செய்த முன்னூா் அருளாளப்பெருமானின் தியான ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.

தயாதிப: ஶ்ரீதயயா சமேத: முன்னூா் நிவாஸ:
புருஷோத்தமோ ந:! பக்தாம்ருத: ஸ: புவிபாகதேயாத் 
அபீஷ்டதோ பாதி மஹா தயாளு:!

பொருள்:

“கருணைக்கு உறைவிடமான வரும், கருணைக்கோயிலான மஹாலக்ஷ்மி யுடன் கூடியவரும், முன்னூா் எனும் தாருகாவனத்தில் புருஷோத்த மனாக, பக்தா்களுக்கு அனுபவிக்க அனுபவிக்கத் திகட்டாத ஆராவமுதமாக, இப்புவியில் நம்முடைய பாக்கியத்தின் பயனாக, வேண்டியவற்றை அருளும் வள்ளலாக பேரருளாளப் பெருமான் விளங்குகிறாா்”

முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் சேவா டிரஸ்ட் என்ற அமைப்பினரால் நிா்வாகம் செய்யப்படுகின்றது இத்தலம். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

044−22470545
9884554053
9444024751.

திருக்கோயில் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்கோயிலின் அா்ச்சகரை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திரு J. ரங்கநாதன் (எ) கேசவ பட்டாச்சாரியார். 9597287284/8668077135.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற ஊாிலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூா் ஶ்ரீஅருளாளப் பெருமாள் திருத்தலம். திண்டிவனத்திலிருந்து அரசுப் பேருந்து வசதிகளும் உள்ளன.

Advertisements

Author: munnurramesh

Working as Deputy Registrar in Coop Dept, Govt of Tamilnadu.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s